

மத்திய அரசு ஏற்கெனவே அறிவித்திருந்த தங்க டெபாசிட் திட்டத்தை இன்னும் சில வாரங்களில் செயல்படுத்த திட்ட மிட்டுள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான அனுமதிகள் அளிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. மக்களிடம் கையிருப்பில் உள்ள தங்கத்தை வங்கிகளில் முதலீடு செய்து, பணமாக்க இந்த திட்டம் வழி செய்கிறது. இதற்கு வரிச்சலுகையுடன் கூடிய வட்டி அளிக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
மத்திய அமைச்சரவை அனுமதிக்கு இந்த திட்டம் அனுப்பப் பட்டுள்ளது. அமைச்சரவை ஒப்புதல் கிடைத்ததும் இன்னும் சில வாரங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த திட்டத்தின் பல்வேறு அம்சங்கள் குறித்தும் ஆலோசிக் கப்பட்டு வருகின்றன. முக்கியமாக இதற்கான வட்டிவிகிதம் குறித்து தற்போது ஆலோசனை நிலையில் உள்ளது என்று தகவல்கள் தெரிய வந்துள்ளது.
தங்கத்தை பணமாக்கும் திட்ட வரைவில், வங்கிகளுக்கான ஊக்கப்படுத்துதல், தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் குறைந்த பட்சம் 30 கிராம் தங்கநகை களை வங்கிகளில் டெபாசிட் செய்வதற்கான அறிவிப்பு வெளி யிடப்பட்டது. இந்த திட்டத்தின் அடிப்படையில் டெபாசிட் செய்யப்படும் தங்க நகைகளுக்கு வட்டி அனுமதிக்கப்படும். மேலும் இந்த வட்டிக்கு வருமான வரி யிலிருந்து விலக்கு அளிப்பது குறித்தும் இந்த வரைவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்தியாவில் மக்கள் மத்தியில் 20 ஆயிரம் டன் தங்கம் புழக்கத்தில் இல்லாத, பணமாக்காத வகையில் கையிருப்பாக உள்ளது. இந்த தங்க நகைகளின் தற்போதைய சந்தை மதிப்பு 60 லட்சம் கோடியாக உள்ளது. உலக அளவில் தங்கத்தை அதிக அளவு இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்தியாவில் ஆண்டுக்கு 800 முதல் 1,000 டன் தங்கம் இறக்குமதி செய்யப்படுகிறது.
தங்க டெபாசிட் திட்ட வரைவில், தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் தங்களிடம் உபரியாக உள்ள தங்க நகைகளை பிஐஎஸ் தர சோதனைக்கு பிறகு வங்கிகளில் தங்க சேமிப்பு கணக்கில் முதலீடு செய்யலாம். குறைந்தபட்சம் ஒரு வருடம் முதலீடு செய்ய வேண்டும். இதற்கு பணமாகவோ அல்லது தங்க நகை யூனிட்டுகளாகவோ வட்டி வருமானம் கிடைக்கும்.
கடந்த பட்ஜெட்டில் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி இந்த திட்டத்தை அறிவித்தார். முதற்கட்டமாக குறிப்பிட்ட நகரங்களில் மட்டுமே செயல்படுத் தப்பட உள்ளது. இந்த புதிய திட்டத்தின் நோக்கம், மக்கள் தங்களிடம் உள்ள தங்கத்தை டெபாசிட் செய்வதன் மூலம் வருமானம் பெற முடியும். மேலும் தங்க நகை விற்பனையாளர்கள் தங்களது தங்க நகைக் கணக்கு மூலம் கடன் பெற முடியும். வங்கிகள் மற்றும் பிற முகவர்கள் தங்கத்தை பணமாக்கவும் இந்த திட்டம் வழிவகுக்கும் என்று அருண் ஜேட்லி குறிப்பிட்டிருந்தார்.
இதன் மூலம் பொதுமக்கள் மற்றும் நிறுவனங்கள் தங்கள் கைவசம் உள்ள தங்கத்தை பணமாக்க முடியும். உள்நாட்டு தங்க தேவையை நிறைவேற்றிக் கொள்ளமுடியும்.
மேலும் தங்க இறக்குமதியை குறைக்கவும் இந்த திட்டம் வகை செய்கிறது.