Published : 31 May 2014 10:00 AM
Last Updated : 31 May 2014 10:00 AM

நிறுவனத்தின் நலன் கருதியே தலைவர்கள் மாற்றம்: நாராயணமூர்த்தி

நிறுவனத்தின் நலனைக் கருத்தில் கொண்டே தலைவர்கள் மாற்றம் மேற்கொள்ளப்படுகிறது என்று இன்ஃபோசிஸ் நிறுவனர் என்.ஆர். நாராயணமூர்த்தி கூறியுள்ளார். இன்ஃபோசிஸ் நிறுவனத்திலிருந்து சமீபத்தில் பி.ஜி. ஸ்ரீனிவாஸ் வெளியேறினார். தொடர்ந்து இந்நிறுவனத்தில் முக்கிய பதவியில் உள்ளவர்கள் வெளியேறி வருகின்றனர். இதுவரை 10 முக்கிய தலைவர்கள் வெளியேறியுள்ளனர்.

ஸ்ரீனிவாஸ் ராஜிநாமா செய்ததற்கு அடுத்த நாள் இன்ஃபோசிஸ் நிறுவன பங்கு விலை 7 சதவீதம் சரிந்தது. இந்நிலையில் ஊழியர்களுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் நாராயணமூர்த்தி.

நிறுவனத்தை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்லவும், ஊழியர்கள் மற்றும் நிறுவன வாடிக்கையாளர்களின் நலன் கருதியும் தலைமைப் பதவியில் மாற்றம் செய்ய வேண்டியுள்ளது. நிறுவனத்தின் தலைமைப் பதவி மாற்றம் நிறுவன நலன் கருதியே எடுக்கப்படுவதாகும். இத்தகைய நடவடிக்கை ஒட்டுமொத்தமாக நிறுவனத்துக்கு நன்மையே பயக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இன்ஃபோசிஸ் நிறுவனத்திலிருந்து ஓய்வு பெற்ற நாராயணமூர்த்தியை கடந்த ஆண்டு ஜூன் மாதம் மீண்டும் நிறுவனத்துக்கு அழைத்து வந்தனர். அவர் இப்போது செயல் தலைவராக உள்ளார். இவர் மீண்டும் வந்த பிறகு அதிக எண்ணிக்கையிலான மூத்த தலைவர்கள் பதவியை ராஜிநாமா செய்து வருகின்றனர். இப்போது தலைவராக உள்ள டி. சிபுலாலின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்துடன் முடிகிறது. புதிய தலைவர் பதவிக்கு உரியவர்களைத் தேடும் பணியில் முன்னணி நிறுவனங்களின் உதவியையும் இன்ஃபோசிஸ் நாடியுள்ளது.

ஸ்ரீனிவாஸ் அடுத்த தலைவராக நியமிக்கப்படுவதற்கான வாய்ப்பு பிரகாசமாக இருந்தது. இந்நிலையில் அவர் பதவியை ராஜிநாமா செய்தது பணியாளர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர் ராஜிநாமா செய்துவிட்டதால் வெளி நிறுவனத்தைச் சேர்ந்தவர் தலைவராக நியமிக்கப்படுவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது. ஸ்ரீனிவாஸ் வகித்து வந்த பொறுப்புகளை சிபுலால் கூடுதலாகக் கவனித்துக் கொள்வார்.

நிறுவனம் சிறப்பாகச் செயல்பட்டு வளர்ச்சியை எட்டும் என்று நாராயணமூர்த்தி உறுதிபடத் தெரிவித்துள்ளார். புதிய தலைவரைத் தேர்வு செய்ய நியமிக்கப்பட்ட குழு தனது பணியை குறித்த காலத்தில் நிறைவேற்றும். இக்குழுவின் பணி முடிந்தபிறகு புதிய தலைவர் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x