

கோவையை சேர்ந்த மின் வாகன நிறுவனமான ஆம்பிரே நிறுவனத்தில் ரத்தன் டாடா முதலீடு செய்திருக்கிறார். ஆனால் எவ்வளவு தொகை முதலீடு செய்யப்பட்டது என்பது குறித்த தகவல் ஏதும் வெளியாக வில்லை. ரத்தன் டாடா முதலீடு செய்யும் பத்தாவது நிறுவனம் இதுவாகும்.
ஹேமலதா அண்ணாமலை என்னும் பெண் தொழில்முனை வோரால் தொடங்கி நடத்தப்படும் நிறுவனம் இது. தற்போது கிடைத்திருக்கும் முதலீட்டை விரிவாக்க பணிகளுக்கும், பணியாளர்கள் தேர்வுக்கும் பயன்படுத்த போவதாக ஹேமலதா தெரிவித்திருக்கிறார்
ரத்தன் டாடா பல நிறுவனங் களில் முதலீடு செய்திருந்தாலும், இதுவரை முதலீடு செய்த அனைத்துமே தொழில்நுட்ப நிறுவனங்கள்தான். தற்போதுதான் முதல்முறையாக உற்பத்தி துறை சார்ந்த நிறுவனம் ஒன்றில் ரத்தன் டாடா முதலீடு செய்கிறார்
ஹேமலதா அண்ணாமலை கோவை அரசு பொறியியல் கல்லூரியிலும், ஆஸ்திரேலியாவில் உள்ள ராயல் மெல்பேர்ன் கல்லூரியிலும் பயின்றவர். தன்னுடைய சேமிப்பை வைத்து 2008-ம் ஆண்டு இந்த நிறுவனத்தை தொடங்கினார்.
இரு வருடங்களுக்கு முன்பு சினர்ஜீஸ் இந்தியா மற்றும் ஸ்பெயின் நாட்டின் ஐஎம்ஐ இன்வெஸ்ட்மென்ட்ஸ் ஆகிய பிரைவேட் ஈக்விட்டி நிறுவனங்கள் இவரது நிறுவனத்தில் முதலீடு செய்தன. இந்த ஆண்டு ஆரம்பத்தில் இந்திய தொழிலக கூட்டமைப்பு (சிஐஐ) வளர்ந்து வரும் தொழில்முனைவோர் விருதினை இவருக்கு வழங்கியது.