

சென்னையில் மோட்டார் வாகன பொறியியல் கண்காட்சி நடைபெற உள்ளது. ஜூலை 7-ம் தேதி தொடங்கி 9-ம் தேதி வரை மூன்று நாள்களுக்கு சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் இக்கண்காட்சி நடைபெறும்.
ஆட்டோமொபைல் கண்காட்சி களை நடத்துவதில் உலக அளவில் பிரபலமாகத் திகழும் மெசி பிராங்பர்ட் நிறுவனம் இக்கண்காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது. ஜெர்மனியின் பிராங்பர்ட் நகர நிர்வாகம் மற்றும் ஹெஸ்லி மாகாண அரசு இணைந்து மெசி பிராங்பர்ட் நிறுவனத்தை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
தொழில்துறையினருக்கான இக்கண்காட்சி பி2பி அடிப்படையில் நடத்தப்படுகிறது. வாகனத்துறைக்குத் தேவைப் படும் உயர் தொழில்நுட்பம், புத்தாக்கம், இணக்கமான சூழல் ஆகியவற்றை உருவாக்கும் இக்கண்காட்சியில் 100-க்கும் அதிகமான தொழில்நுட்ப நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன.
இந்தக் கண்காட்சியின்போது ஸ்மார்ட் ஆட்டோமோடிவ் தொழிற் சாலைகளை இலக்காகக் கொண்ட ஒரு விரிவான கருத் தரங்கு ஜூலை 8-ம் தேதி நடைபெற உள்ளது. தயாரிப்பு செலவை கட்டுப்படுத்தவும், உற்பத்தித் திறனை அதிகரிக்க விரும்பும் தொழில் நிறுவனங்களுக்கு இக்கண்காட்சி வரப் பிரசாதமாக இருக்கும்.