

சரக்கு மற்றும் சேவை வரி குறித்து மாநிலங்களவை தேர்வு குழு தனது அறிக்கையை சமர்ப்பித்தது. பாரதிய ஜனதாவின் பூபேந்தர் யாதவ் தலைமையிலான குழு இதனை சமர்ப்பித்தது. பெரும்பாலான கட்சிகள் இந்த மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்திருக்கின்றன. அதே சமயத்தில் காங்கிரஸ், அதிமுக மற்றும் இடதுசாரிகள் தங்களது மாற்றுக்கருத்தினை தெரிவித்திருக்கின்றன.
இந்த மசோதா ஏற்கெனவே மக்களவையில் நிறைவேறியது. இனி மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படும்.
மாநிலங்களவையில் மூன்றில் இருபங்கு உறுப்பினர்களின் ஆதரவு இருந்தால் மட்டுமே இந்த மசோதா நிறைவேறும். ஜிஎஸ்டியின் பெரும்பாலான ஷரத்துகளுக்கு மாநிலங்களவை குழு ஒப்புதல் அளித்துள்ளது.
ஆளும் கட்சிக்கு மாநிலங் களவையில் பலம் இல்லாததால் மாநில கட்சிகள் மற்றும் கூட்டணி கட்சிகளை மத்திய அரசு நம்பி இருக்கிறது. இந்த சட்டத்தை அமல் செய்தால் மாநில அரசுகளுக்கு ஏற்படும் இழப்புகளை ஈடுகட்டுவதற்கு மத்திய அரசு 5 வருடங்கள் நிதி உதவி செய்யும் என்று இந்த குழு பரிந்துரை செய்திருக்கிறது.
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு மறைமுக வரியில் செய்யப்படும் மிகப்பெரிய சீர்திருத்தம் இதுதான். சரக்கு மற்றும் சேவை வரியை வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது.
இதனை கொண்டு வருவதற்கு தேவையான அனைத்து முயற்சி களும் எடுக்கப்பட்டு வருகின்றன. ஜிஎஸ்டி கொண்டு வரும் பட்சத்தில் இந்திய பொருளாதாரத்துக்கு நல்லது என்று வருவாய் துறைச் செயலாளர் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.