Last Updated : 30 Jul, 2015 10:37 AM

 

Published : 30 Jul 2015 10:37 AM
Last Updated : 30 Jul 2015 10:37 AM

பொதுத்துறை நிறுவன பங்கு விலக்கல்: ரூ. 69,500 கோடி இலக்கு சாத்தியமில்லை

நடப்பு நிதி ஆண்டில் பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு விலக்கல் மூலம் 69,500 கோடி ரூபாயை திரட்ட மத்திய அரசு திட்டமிட்டிருந்தது. ஆனால் சந்தை சூழ்நிலையால் அந்த இலக்கு எட்டமுடியாது, சுமார் 30,000 கோடி ரூபாய் வரை திரட்ட முடியும் என்று பங்கு விலக்கல் துறை மத்திய நிதி அமைச்சகத்துக்கு தெரிவித்திருக் கிறது. மேலும் ரூ.30,000 கோடி ரூபாய் என்பது எட்டக்கூடிய இலக்கு என்று பங்கு விலக்கல் துறை தெரிவித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த சில நாட்களுக்கு முன்பு பவர் பைனான்ஸ் கார்ப்பரேஷன் (பிஎப்சி) நிறுவனத்தின் ஐந்து சதவீத பங்குகளை வெற்றிகரமாக விலக்கி 1,600 கோடி ரூபாய் திரட்டியும் பங்குவிலக்கல் துறை இவ்வாறு கருத்து தெரிவித்திருப்பது முக்கியமானது.

கடந்த ஐந்து வருடங்களாக பங்குவிலக்கல் மூலம் நிதிதிரட்டுவதற்கு நிர்ணயம் செய்யும் இலக்கினை மத்திய அரசால் எட்ட முடியவில்லை. நடப்பு நிதி ஆண்டில் 30,000 கோடி திரட்டும்பட்சத்தில் இதுவரை பங்குவிலக்கல் மூலம் திரட்டப்பட்ட அதிகபட்ச தொகை இதுவாகத்தான் இருக்கும்.

கடந்த நிதி ஆண்டில் பங்கு விலக்கல் மூலம் திரட்டப்பட்டவதை விட 180 சதவீதம் அதிகமாக இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. 2014-15-ம் நிதி ஆண்டில் பங்கு விலக்கல் மூலம் 25,000 கோடி மட்டுமே திரட்டப்பட்டது. ஆனால் 58,425 கோடி ரூபாய் அளவுக்கு நிதி திரட்ட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது.

நடப்பு நிதி ஆண்டில் 20 பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விலக்கிகொள்ள மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.

இதில் ஆயில் இந்தியா, ஐஓசி, நால்கோ, என்எம்டிசி ஆகிய நிறுவங்களின் 10 சதவீத பங்குகள் மற்றும் என்டிபிசி, ஓஎன்ஜிசி, பிஹெச்இஎல் ஆகிய நிறுவனங்களின் ஐந்து சதவீத பங்குகளை விலக்கிகொள்வதும் அடக்கம்.

பங்குச்சந்தை ஏற்ற இறக்க சூழ்நிலையில் இருந்தாலும் இரண்டு பொதுத்துறை நிறுவன பங்கு விலக்கலை பங்குவிலக்கல் அமைச்சகம் வெற்றிகரமாக முடித்தது. ஆர்இசி நிறுவனத்தின் பங்கு விலக்கல் மூலம் ரூ.1,550 கோடியும், பிஎப்சி நிறுவனத்தின் பங்கு விலக்கல் மூலம் 1,600 கோடியும் திரட்டப்பட்டது.

சீன பங்குச்சந்தை சரிவு மற்றும் அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கியின் வட்டி உயர்வு ஆகிய காரணங்களால் பங்குச்சந்தையில் ஏற்ற இறக்கமான சூழல் நிலவும். அதனால் அதிக இலக்கு நிர்ணயம் செய்வது இந்த சந்தை சூழ்நிலையில் சாத்தியம் இல்லை என்று பங்குவிலக்கல் துறை கருதுகிறது.

இந்த சூழ்நிலையில் தனியார் நிறுவனங்கள் கூட சந்தையில் நிதி திரட்ட தயங்குகின்றன. இப்போது அதிக இலக்கு நிர்ணயம் செய்வதால் தேவையில்லாத அழுத்தம் உருவாகும். அதனால் அவசரப்பட்டு பங்குகளை விலக்கிக்கொள்ளும் சூழ்நிலை ஏற்படும். இது பாதகமாகவும் முடியலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

2010-11-ம் ஆண்டு 22,144 கோடி ரூபாய் திரட்டப்பட்டது. ஆனால் 40,000 கோடி ரூபாய்க்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. அதேபோல 2011-12ம் ஆண்டு 13,894 கோடி ரூபாய் திரட்டப்பட்டது. 40,000 கோடி ரூபாய்க்கு இலக்கு நிரணயம் செய்யப்பட்டது.

2012-13-ம் ஆண்டில் 30,000 கோடி ரூபாய்க்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது ஆனால் 23,956 கோடி மட்டுமே நிதி திரட்டப்பட்டது. 2013-14ம் ஆண்டில் 40,000 கோடி ரூபாய் திரட்ட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால் 16,027 கோடி ரூபாய் மட்டுமே திரட்டப் பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x