Published : 24 Jul 2015 10:07 AM
Last Updated : 24 Jul 2015 10:07 AM

காலாண்டு முடிவுகள்

எல்விபி நிகர லாபம் 43% உயர்வு

லஷ்மி விலாஸ் வங்கியின் ஜூன் காலாண்டு நிகர லாபம் 43% உயர்ந்து 40.25 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 28.15 கோடி ரூபாயாக இருந்தது.

வங்கியின் மொத்த வருமானம் 18.39 சதவீதம் உயர்ந்தது. கடந்த வருடம் ஜூன் காலாண்டில் 585 கோடி ரூபாயாக இருந்த மொத்த வருமானம் இப்போது 693 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது.

மொத்த வாராக்கடன் சிறிதளவு குறைந்திருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 3.96 சதவீதமாக இருந்த மொத்த வாராக்கடன் இப்போது 2.72 சதவீதமாக குறைந்திருக்கிறது. வங்கியின் நிகர வாராக்கடன் 1.72 சதவீதமாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 3.19 சதவீதமாக இருந்தது.

நேற்றைய வர்த்தகத்தின் இடையே இதன் பங்குகள் 2 சதவீதம் வரை சரிந்தது.

பஜாஜ் ஆட்டோ நிகர லாபம் 37% உயர்வு

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் ஜூன் காலாண்டு நிகர லாபம் 37 சதவீதம் உயர்ந்து 1,014 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 739 கோடி ரூபாயாக இருந்தது.

நிகர விற்பனையும் 7.24% உயர்ந்திருக்கிறது. கடந்த வருடம் 5,133 கோடி ரூபாயாக இருந்த நிகர விற்பனை இப்போது 5,505 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது. இந்த காலாண்டில் வாகன விற்பனை 2.48 சதவீதம் உயர்ந்திருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 9,88,430 வாகனங்கள் விற்பனையானது. இந்த வருடம் 10,13,029 வாகனங்கள் விற்பனையானது. ஏற்றுமதி வருமானம் 17% உயர்ந்திருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 2,251 கோடி ரூபாயாக இருந்த வருமானம் இப்போது 2,634 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது.

இந்தியன் வங்கியின் நிகர லாபம் 4% உயர்வு

இந்தியன் வங்கியின் ஜூன் காலாண்டு நிகர லாபம் 4% உயர்ந்து 215 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் நிகர லாபம் 207 கோடி ரூபாயாக இருந்தது.

ஊழியர்களுக்கு முன் தேதியிட்ட சம்பளம் கொடுப்பதற்காக 83.13 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதால் வங்கியின் லாபம் சிறிதளவு மட்டுமே உயர்ந்திருக்கிறது.

வங்கியின் மொத்த வருமானம் 8.5 சதவீதம் உயர்ந்து 4,494 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 4,144 கோடி ரூபாயாக இருந்தது. வங்கியின் மொத்த வாராக்கடனும், நிகர வாராக்கடனும் சிறிதளவு உயர்ந்திருக்கிறது.

மொத்த வாராக்கடன் கடந்த வருடம் இதே காலாண்டில் 4.01 சதவீதத்தில் இருந்து 4.65 சதவீதமாகவும், நிகர வாராக்கடன் 2.48 சதவீதத்தில் இருந்து 2.62 சதவீதமாகவும் உயர்ந்திருக்கிறது.

விப்ரோ நிகர லாபம் 4% உயர்வு

விப்ரோ நிறுவனத்தின் ஜூன் காலாண்டு நிகர லாபம் 4 சதவீதம் அதிகரித்து ரூ. 2,188 கோடியாக உள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் நிறுவனத்தின் நிகர லாபம் 2,103.2 கோடியாக இருந்தது.

இந்த காலாண்டில் நிறுவனத்தின் வருமானம் 10.5 சதவீதம் அதிகரித்து 12,894.8 கோடியாக உள்ளது. 2014 ஏப்ரல் - ஜூன் காலாண்டில் நிறுவனத்தின் வருமானம் 11,669.4 கோடியாக இருந்தது.

2015 ஜூலை - செப்டம்பர் காலாண்டில் நிறுவனத்தின் ஐடி சேவைகளின் மூலமான வருமானம் 18.21 கோடி டாலரிலிருந்து 18.57 கோடி டாலராக அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறது.

2015 ஜூன் 30 விவரங்கள்படி ஐடி சேவை பிரிவில் 1,61,789 பணியாளர்கள் உள்ளனர். மார்ச் மாதம் 1,58,217 பணியாளர்கள் இருந்தனர். புதிதாக 3,572 பணியாளர்களை பணிக்கு சேர்த்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x