

கடன்களுக்கான வட்டி விகிதத்தை இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) கால் சதவீதம் (0.25%) குறைத் துள்ளது. மும்பையில் நேற்று நடைபெற்ற நிதிக் கொள்கை அறிவிப்பின்போது இத்தகவலை ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்தார்.
இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை வெளியாகும் நிதிக் கொள்கையில் கடனுக்கான வட்டிக் குறைப்பு அல்லது அதிகரிப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. பணவீக்கம் கட்டுக்குள் இருப்பதால் வட்டிக் குறைப்பு செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர். குறிப்பாக தொழில் துறையினர் வட்டிக் குறைப்பு நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர். மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லியும், வட்டிக் குறைப்பு நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்து வந்தார். கடந்த வாரம் தன்னை சந்தித்து ஆலோசனை நடத்திய ஆர்பிஐ கவர்னர் ரகுராம் ராஜனிடம் வட்டிக் குறைப்பு செய்வது குறித்து வலியுறுத்தியதாகத் தெரிகிறது.
இந்நிலையில் நேற்று மும்பையில் நடைபெற்ற நிதிக் கொள்கை வெளியீட்டு நிகழ்வில் பேசிய அவர், ரெபோ வட்டி விகிதம் 7.25 சதவீதமாகக் குறைக்கப்படுவதாகத் தெரிவித்தார். முன்னர் இது 7.50 சதவீதமாக இருந்தது. ரெபோ வட்டி விகிதம் 6.25 சதவீதமாகவும், எம்எஸ்எப் வட்டி விகிதம் 8.25 சதவீதமாகவும் இருக்கும் என்று ராஜன் தெரிவித்தார்.
சிஆர்ஆர் எனப்படும் வங்கிகள் ரிசர்வ் வங்கியில் வைத்திருக்க வேண்டிய ரொக்க அளவு 4 சதவீதம் என்ற நிலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.
ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கையானது முற்றிலும் பழமைவாதத்தனத்தைக் கொண்டதாக இருக்காது. அதேசமயம் புதுமை என்ற பெயரில் தீவிரமாக செயல்படவும் முடியாது என்று ராஜன் குறிப்பிட்டார். இப்போது உள்ள சூழலில் எத்தகைய முடிவு எடுக்கப்பட வேண்டுமோ அது எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
இதுவரை 0.75 சதவீதம் வட்டிக் குறைப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் தனி நபர் கடன், வீட்டுக் கடன், நிறுவனக் கடன் ஆகியவற்றுக்கான மாதத் தவணை குறையும். ரிசர்வ் வங்கி கடனுக்கான வட்டியை கால் சதவீதம் குறைத்ததன் பலனை வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் தரும் பட்சத்தில் மாதத் தவணை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உணவுப் பொருள் உற்பத்தி குறையும் என்று தெரிகிறது. மேலும் சர்வதேச பொருளாதார நிலையிலும் ஸ்திரமற்ற சூழல் காணப்படுகிறது. தொழிற்சாலை உற்பத்தியிலும் சீரற்ற நிலை காணப்படுகிறது. சேவைத் துறையில் ஏற்ற-இறக்க சூழல் காணப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஏறுமுகம் கண்டுவருகிறது. ஏற்றுமதி சரிந்துவரும் நிலையில் நிதி நிலை மேம்பட்டிருப்பதால் வட்டி குறைப்பு செய்யப்பட்டுள்ளது என்று ரகுராம்ராஜன் குறிப்பிட்டார். ஜனவரி மற்றும் மார்ச்சில் தலா கால் சதவீதம் வட்டி குறைக்கப்பட்டது.
7.6% பொருளாதார வளர்ச்சி
நடப்பு நிதி ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.6 சதவீத அளவுக்கு இருக்கும் என ரிசர்வ் வங்கி மதிப்பிட்டுள்ளது. கடந்த ஏப்ரலில் வளர்ச்சி விகிதம் 7.8 சதவீத அளவுக்கு இருக்கும் என ஆர்பிஐ கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
பருவ மழை போதிய அளவு இருக்காதது, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது போன்ற காரணங்களினால் வளர்ச்சி விகிதம் குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்தார். கடந்த ஏப்ரல் மாதம் இருந்ததை விட கச்சா எண்ணெய் விலை தற்போது 9 சதவீதம் அதிகரித்து ஒரு பீப்பாய் 65 டாலர் அளவுக்கு உயர்ந்துள்ளதையும் அவர் சுட்டிக் காட்டினார். பருவமழை குறைபாடு காரணமாக உணவு உற்பத்தி குறையும் என்பதாலும் பொருள் தேவை குறையும் என்பதால் பொருளாதார வளர்ச்சி விகிதம் குறையும் என்று அவர் கூறினார்.
நடப்புக் கணக்கு பற்றாக்குறை 1.5%
நடப்பு நிதி ஆண்டில் நாட்டின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜி.டி.பி.) 1.5 சதவீத அளவுக்கு இருக்கும் என்று ஆர்பிஐ மதிப்பிட்டுள்ளது.
கச்சா எண்ணெய் விலை சரிந்ததால் ஏற்பட்ட ஆதாயம் மூலம் தங்க இறக்குமதி அதிகரிப்பை ஓரளவு ஈடு செய்ய முடியும் என்பதால் பற்றாக்குறை கணிசமாகக் குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளதாக ராஜன் தெரிவித்தார்.
2014-15-ம் நிதி ஆண்டின் முன் பாதியில் நாட்டின் பற்றாக்குறை 1.9 சதவீத அளவுக்கு இருந்தது. அதாவது பற்றாக்குறை 1,800 கோடி டாலராகும். நாட்டிற்குள் வரும் அந்நியச் செலாவணி மற்றும் வெளியேறும் அந்நியச் செலாவணி அடிப்படையில் பற்றாக்குறை அமைகிறது. இது 2013-14-ம் நிதி ஆண்டில் 3,240 கோடி டாலராக இருந்தது.