Published : 03 May 2014 10:36 AM
Last Updated : 03 May 2014 10:36 AM

தொழில் ரகசியம்: நீலக்கடல் யுக்தி

போர் அடிக்கிறது. ஒரு இருபது வருடங்கள் பின்னோக்கி சென்று பார்த்துவிட்டு வரலாம் என்று இருக்கிறேன். சும்மா இருந்தால் வாங்களேன்.

ரைட், 1994க்கு வந்திருக்கிறோம். ரோட்டில் 2014 அளவு கூட்டம், கார்கள், இரைச்சல், ட்ராஃபிக் இல்லை. எஸ்யூவீ கார்கள், லேப்டாப், இன்டர்னெட், செல்ஃபோன், காஃபி ஷாப், மல்டிப்ளெக்ஸ், டிடீஹெச், டியோடர்ண்ட், ஹைடெஃப்பனிஷன் டீவி, என எதுவும் இல்லை.

இவை இல்லாத வாழ்க்கை ’ஜோரா இல்லை போரா’ என்கிற விவாதத்தை பட்டிமன்ற தலைப்பாக பாப்பையாவிடம் விட்டுவிடுவோம். நான் சொல்ல வந்தது வேறு. அன்றில்லாத புதிய பொருள் வகைகள், தொழில்கள், ப்ராண்டுகள் பிறந்திருக்கின்றன. வெற்றி பெற்றிருக்கின்றன. தொழில் வளர்ச்சி பெற, வெற்றி அடைய புதிய ஐடியாக்கள், பொருள் வகைகள் அதில் புதிய ப்ராண்டுகள் தேவை என்கிறார்கள் ‘சேன் கிம் மற்றும் ரென்னி மொவ்பர்ன்’ என்னும் நிர்வாகவியல் பேராசிரியர்கள். இவர்கள் இருவரும் கடந்த 100 வருட டேட்டாவை கொண்டு 30 பொருள் வகைககளையும் புதியதாய் பிறந்த 150 தொழில்களையும் ஆராய்ந்தனர். தங்கள் ஆராய்ச்சி முடிவுகளையும் படிப்பினைகளையும் ‘ப்ளூ ஓஷன் ஸ்ட்ரேடஜி’ (Blue Ocean Strategy) என்கிற புத்தகமாக வெளியிட்டனர்.

பிசினஸ் உலகத்தையும் அதிலுள்ள பொருள் வகைகளையும் ’சிவப்பு கடல்’, ‘நீலக் கடல்’ என்று இரண்டாகப் பிரிக்கலாம் என்கிறார்கள். சிவப்பு கடல் என்பது வெகுகாலமாக இருக்கும் பொருள் வகைகள். இதில்தான் காலகாலமாக ப்ராண்டுகள் ஒன்றை ஒன்று அடித்து, கடித்து வளர முயற்சிக்கின்றன. அந்த சண்டை பத்தாது என்று அதில் புதிய ப்ராண்டுகளும் சேர்ந்து போட்டி உக்கிரமடைந்து வெட்டுக்குத்து, வீச்சரிவாள் வரை போய் ரத்த ஆறு பெருக்கெடுத்து ஓடுவதால் இந்த பொருள் வகைகளை சிவப்புக் கடல் என்றழைக்கலாம் என்கிறார்கள்.

இதுவரை இல்லாத ஐடியா

நீலக் கடல் என்பது இதுவரை இல்லாத பொருள் வகைகள். இனிமேல் பிறக்க வேண்டிய ஐடியாக்கள். இங்கு போட்டியில்லை. சண்டையில்லை. ரத்த ஆறு ஓடுவதில்லை. அழகான, அமைதியான நீலக் கடல்கள் இவை. இதுபோன்ற புதிய பொருள் வகையை உருவாக்கி அதில் ப்ராண்டை அறிமுகப்படுத்தும் கம்பெனிகள் வெற்றி பெறுகின்றன. போட்டியில்லாத இந்த நீலக் கடல் அந்த ப்ராண்டிற்கே சொந்தமாகிவிடுகிறது என்கிறார்கள்.

சோப், டியட்யோடரண்ட், சமையல் எண்ணெய், ஜவுளிக்கடைகள், பல்புகள், கார்கள், பைக்குகள், மினரல் வாட்டர் என்று பல பொருள் வகைகள் சிவப்புக் கடல்களே. இந்த பொருள் வகைகளில் நுழைவது சிரமம். மற்றவர்களிடமிருந்து வித்தியாசப்படுத்திக் காட்டுவது அதை விட சிரமம். அதோடு ஏகப்பட்ட விற்பனை செலவுகள், விளம்பர செலவுகள். பத்தாததற்கு போட்டியாளர்களின் ‘இலவசம்’, ‘ஆடித் தள்ளுபடி’, ‘ஆஃப்பர்’ போன்ற கழுத்தறுப்பு வேறு. நித்ய கண்டம், பூரண ஆயுசுக்கு உத்திரவாதமில்லாத சிவப்பு கடலில் சிக்கி, செருப்படி பட்டு, சந்தி சிரித்து, சீரழியாமல் இருப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடும். இதில் எங்கிருந்து வளர்வது? எப்படி முன்னேறுவது?

புதிய தொழில் துவங்க எதற்கு சிவப்பு கடலுக்குள் நுழையவேண்டும்? கேட்டு வாங்கி எதற்கு தூக்கு மாட்டிக்கொள்ள வேண்டும்? சிவப்பு கடல்களில் குதித்து, குளித்து, கரையேற முடியுமா? இந்த பொருள் வகையிலுள்ள மற்ற ப்ராண்டுகள் கடித்துக் குதறி, கும்மி அடித்து, குமுறி விடாதா?

சிவப்பு கடலுக்குள் நீலக்கடல்

சரி, நீலக் கடலை எங்கு தேடுவது? அது ஒன்றும் ஐந்து கண்டங்களைத் தாண்டி, ஆறாவது மலைக்கு அப்பால், ஏழாவது குகைக்குள் இருக்கும் மேட்டர் இல்லை. அது உங்கள் அருகிலேயே இருக்கிறது. நீங்கள் போட்டி போடும் பொருள் வகையிலேயே ஒளிந்திருக்கிறது. அதைக் கண்டுகொள்ளும் திறமை உங்களுக்கு இருந்தால் போதும். ஷாம்பு மார்க்கெட் ஒரு சிவப்பு கடல். அதில் ஏகத்துக்கு போட்டி. ஆனால் அதனுள் போட்டியில்லாத ‘பொடுகு ஷாம்பு’ என்னும் நீலக் கடல் இருப்பதை கவனித்து அதில் ‘ஹெட் அண்ட் ஷோல்டர்ஸ்’ என்னும் ப்ராண்டை அறிமுகப்படுத்தி அதில் நம்பர் ஒன்னாய் திகழும் ‘பி அண்டு ஜி’ செய்த சாமர்த்தியம் உங்களுக்கு வேண்டும்.

சோப்பு மார்க்கெட் ஒரு சிவப்புக் கடல். அதில் ப்ராண்டுகள் போட்டியில் சிக்கித் தவிக்க அதில் போட்டியில்லாத ’ஹெர்பல் சோப்’ என்னும் நீலக் கடலை கவனித்து அதில் ‘ஹமாம்’மை அறிமுகப்படுத்தி அமர்க்களப்படுத்தி வரும் ‘இந்துஸ்தான் யூனிலீவரின்’ சாதுர்யம் உங்களுக்கு வேண்டும்.

சில கம்பெனிகள் மட்டுமே இது போல் மாற்றி யோசித்து நீலக் கடல்களை இனங்கண்டு புதிய பொருள் வகைகளை உருவாக்கி அதில் ப்ராண்டுகளை அறிமுகப்படுத்தி வெற்றி பெறுகின்றன என்கிறார்கள் சேன்னும் ரென்னியும். அப்படி மாற்றி யோசித்து வடிவமைக்கும் உத்தியை ‘ப்ளூ ஓஷன் ஸ்ட்ரேடஜி’ என்கிறார்கள். விற்பனையை அதிகரித்து லாபத்தை கூட்ட சிறந்த வழி போட்டி நிறைந்த சிவப்புக் கடலை விடுத்து போட்டி இல்லாத நீலக் கடலை கண்டுபிடிப்பதுதான் என்கிறார்கள்.

அலட்சியம் வேண்டாம்

சிவப்புக் கடலில் பத்தோடு பதினொன்றாக பரிதவிக்கவேண்டும். நீலக் கடலில் போட்டியில்லாமல் பட்டா போடமுடியும். சிவப்புக் கடலில் போட்டியாளர்களோடு சதா போரிடவேண்டும். நீலக் கடலில் போட்டியாளரே இல்லாததால் போரிடா மலே வெல்ல முடியும். சிவப்புக் கடலில் டிமாண்டைக் கூட்ட மெனக்கிட வேண்டும். நீலக் கடலில் புதிய டிமாண்டை உருவாக்கினால் போதும். அதற்காக நீலக் கடலின் வெற்றி நிரந்தரம் என்று நினைக்காதீர்கள். நீலக் கடலின் அழகில் மயங்கி பலர் நுழைய முயல்வார்கள். முதலில் நுழைந்த ப்ராண்டுகள் தங்களை மேம்படுத்திக் கொண்டே இருந்து நீலக் கடலை முழுவதுமாய் ஆக்கிரமித்து அடுத்தவனை அண்டவிடாமல் செய்வது அதிமுக்கியம்.

புதிய தொழிற்நுட்பம் இருந்தால் நீலக் கடல்களை உருவாக்குவது எளிதாகும். போட்டி பிடியில் சிக்கி இருந்த செல்ஃபோன் என்னும் சிவப்புக் கடலை ஒரங்கட்டி டச் ஸ்க்ரீன் என்னும் புதிய தொழிற்நுட்பத்தால் வெற்றி பெற்றது ‘ஐஃபோன்’.

புதிய தொழில்நுட்பம் இல்லாமலும் நீலக் கடலை கண்டுபிடிக்க முடியும். டூத்பேஸ்ட் மார்க்கெட்டில் பல ப்ராண்டுகள் பல் இளித்துக்கொண்டிருக்க அதில் ஜெல் என்னும் பொருள் வகையை உருவாக்கி அந்த நீலக் கடலில் ’க்ளோஸ் அப்’ வெற்றி பெற்றது.

பல சமயங்களில் நீலக் கடல்கள் சிவப்புக் கடல் அருகிலோ, அதற் குள்ளேயே கூட அமைந்துவிடும். சிவப்பழகு க்ரீம் மார்க்கெட் பல ப்ராண்டுகள் போட்டி போடும் சிவப்புக் கடல். எல்லா ப்ராண்டுகளும் பெண்களை மட்டுமே குறிவைக்கிறதே என்று மாற்றி யோசித்து ’ஃபேர் அண்டு ஹேண்ட்சம்’ என்று ஆண்களுக்கான சிவப்பழகு க்ரிமை அறிமுகப்படுத்தி சிவப்புக் கடல் உள்ளேயே ஒரு நீலக் கடலை உருவாக்கி வெற்றி பெற்றது ‘இமாமி’.

இரண்டு சிவப்புக் கடல்களை கலந்து நீலக் கடலை உருவாக்கவும் முடியும். சிலர் தலைக்கு சீயக்காய் உபயோகிப்பதையும் சிலர் ஷாம்பு உபயோகிப்பதையும் பார்த்தது ‘கவின்கேர்’. சீயக்காய் மார்கெட்டிலும் ஷாம்பு மார்க்கெட்டிலும் ஏகப்பட்ட ப்ராண்டுகள். இந்த சிவப்பு கடல்களுக்குள் எதற்கு நுழைவது என்று ’சீயக்காயின் குணநலன்களையும் ஷாம்புவின் சௌகரியத்தையும் கலந்து ’சீயக்காய் ஷாம்பு’ என்னும் புதிய பொருள் வகையை உருவாக்கி அந்த நீலக் கடலில் ’மீரா’ என்கிற ப்ராண்டை அறிமுகப்படுத்தி பெரும் வெற்றி் பெற்றது.

சிவப்புக் கடலில் சிக்கி சங்கடப் படுவதை விட நீலக் கடலை எப்படி உருவாக்குவது, அதில் புதிய ப்ராண்டுகளை எப்படி அறிமுகப் படுத்துவது என்று சிந்தியுங்கள். நீலக் கடலை உருவாக்கி வெற்றி பெற்றிருக்கும் ‘டிஷ் டீவி’, ’ஸ்கூட்டி’, உள்ளிட்ட ப்ராண்டுகளை பார்த்துக் கற்றுக்கொள்ளுங்கள்.

ஹலோ, இன்னமும் 1994லேயே இருந்தால் எப்படி? 2014க்கு வாருங்கள். கேன் அளவு தண்ணீரை விட்டு சேன் சொன்ன நீலக் கடலைத் தேடுங்கள். மென்னி முறிக்கும் மார்க்கெட்டை விட்டு ரென்னி சொன்ன நீலக் கடலை உருவாக்குங்கள். இந்த் நீலக் கடலில் ஆள் கிடையாது. அரவம் கிடையாது. போட்டி கிடையாது. போர் கிடையாது. அதனால் வளர்ச்சி கிடைக்கும். வெற்றி கிடைக்கும்.

இங்கு தொடுவானம் கூட தொடும் தூரம்தான். கடல் ஆழம் கூட கால் கட்டை விரல் வரை தான். நீலக் கடல் உங்கள் நீச்சல் குளமாகும். அப்புறம் என்ன, அதில் ஜலக்கிரீடைதான். ஜாலி தான்!

satheeshkrishnamurthy@gmail.com

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x