

அனில் அம்பானி தலைமையில் செயல்படும் ரிலையன்ஸ் பவர் நிறுவனம் வங்கதேசத்தில் மின் உற்பத்தி நிலையம் அமைக்க 300 கோடி டாலர் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் வங்கதேச பயணத்தில் இதற்கான புரிந் துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்டது. ஒப்பந்தத்தில் ரிலையன்ஸ் பவர் நிறுவனத்தின் சார்பில் அதன் மூத்த செயல் தலைவர் சமீர் குப்தா கையெழுத்திட்டார்.
20 லட்சம் டன் கொள்ளளவு கொண்ட எல்.என்.ஜி. இறக்குமதி மையம் மற்றும் 3,000 மெகாவாட் மின் உற்பத்தி நிலையம் ஆகியவை அமைக்க ரிலையன்ஸ் பவர் திட்டமிட்டிருக்கிறது.
2400 மெகாவாட் உற்பத்தி திறனுள்ள மின் உற்பத்தி நிலையத்தை ஆந்திராவில் அமைக்க ரிலையன்ஸ் முன்னதாக திட்டமிட்டிருந்தது. ஆனால் அந்த திட்டம் கிடப்பில் இருப்பதால், அந்த திட்டத்துக்காக வாங்கப்பட்ட சாதனங்களை வங்கதேசத்தில் பயன்படுத்த திட்டமிட்டிருக்கிறது ரிலையன்ஸ் பவர் நிறுவனம்.
வங்கதேச மின் துறையில் செய்யப்பட்ட மிகப்பெரிய அந்நிய முதலீடு இதுதான். இந்த திட்டத்தின் முதல் பகுதி மூன்று வருடங்களில் நிறைவேறும்.
வங்கதேச மின்சாரம் மேம்பாட்டு வாரியம் இதற்கான இடத்தையும் நிலங்களையும் ஒதுக்கீடு செய்யும்.