பானிபட் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் ரூ.15,000 கோடி முதலீடு: ஐஓசி நிறுவனம் திட்டம்

பானிபட் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் ரூ.15,000 கோடி முதலீடு: ஐஓசி நிறுவனம் திட்டம்
Updated on
1 min read

பானிபட் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையின் உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்காக ரூ. 15 ஆயிரம் கோடியை முதலீடு செய்ய இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் (ஐஓசி) திட்டமிட்டுள்ளது.

விரிவாக்க நடவடிக்கை 5 ஆண்டுகளில் நிறைவடையும் என்று நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 2020-ம் ஆண்டில் விரிவாக்கம் செய்யப்பட்ட பிறகு இந்த ஆலை ஆண்டுக்கு 2 கோடி டன் எண்ணெயை சுத்திகரிக்கும்.

பொதுத்துறை எண்ணெய் நிறுவனமான ஐஓசிக்கு இதுவரை நாட்டில் 8 எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் இருந்தன. சமீபத்தில் ஒடிசா மாநிலத்தில் உள்ள பாரதீப் சுத்திகரிப்பு ஆலையும் ஐஓசி வசம் வந்தது. 8 ஆலைகளின் ஒட்டுமொத்த சுத்திகரிப்பு அளவு 5.42 கோடி டன்னாகும். பாரதீப் ஆலையின் சுத்திகரிப்பு திறன் 1.5 கோடி டன்னாகும். இதன் மூலம் எண்ணெய் சுத்திகரிப்பில் தனியார் நிறுவனமான ரிலையன்ஸை விட அதிக அளவு சுத்திகரிக்கும் நிறுவனமாக ஐஓசி உயர்ந்துள்ளது.

குஜராத் மாநிலத்தில் உள்ள இரண்டு ஆலைகளின் மூலம் ரிலையன்ஸ் சுத்திகரிக்கும் எண்ணெய் அளவு 6.2 கோடி டன்னாகும்.

மற்றொரு தனியார் நிறுவன மான எஸ்ஸார் நிறுவனத்துக்குச் சொந்தமான சுத்திகரிப்பு ஆலை குஜராத் மாநிலத்தில் வாடிநார் எனுமிடத்தில் அமைந்துள்ளது. இந்த ஆலையின் ஆண்டு சுத்திகரிப்பு அளவு 2 கோடி டன்னாகும். குஜராத் மாநிலத்தில் உள்ள கோயலி சுத்திகரிப்பு ஆலை மற்றும் உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவில் உள்ள சுத்திகரிப்பு ஆலையின் திறனை அதிகரிப்பது குறித்து ஐஓசி பரிசீலித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தற்போது விரிவாக்கம் செய்யத் திட்டமிடப்பட்டுள்ள பானிபட் சுத்திகரிப்பு ஆலை 1998-ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டதாகும். இங்கு ஆண்டுக்கு 60 லட்சம் டன் எண்ணெய் சுத்திகரிக்கப்பட்டது. 2006-ம் ஆண்டில் இது இரு மடங்காக உயர்த்தப்பட்டது. 2010-ம் ஆண்டில் கூடுதலாக 30 லட்சம் டன் உற்பத்தி அதிகரிப்பு செய்யப்பட்டது.

நாட்டின் வடக்கு மற்றும் மேற்குப் பகுதி மாநிலங்களின் எரிபொருள் தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு விரிவாக்கம் செய்யப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in