

1930-ம் ஆண்டு ஏற்பட்ட சர்வதேச பொருளாதார மந்த நிலை மீண்டும் வரலாம் என்று ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம்ராஜன் எச்சரித்துள்ளார். உலகம் முழுவதும் இருக்கும் மத்திய வங்கிகள், தங்களது விதிமுறைகளை மாற்றிய அமைக்க வேண்டிய தேவை உருவாகி இருக்கிறது.
இல்லையெனில் 1930-ல் ஏற்பட்ட பொருளாதார சரிவின் போது ஏற்பட்ட பிரச்சினைகளை உலகம் சந்திக்க நேரிடும் என்று லண்டன் பொருளாதார பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் பேசுகையில் ராஜன் இதைத் தெரிவித்தார். சர்வதேச நாடுகளைச் சேர்ந்த மத்திய வங்கிகள் தாராள நிதிக்கொள்கையை கடைப்பிடிப்பது தவறாக அமையும் என்று எச்சரித்தார். மேலும் அவர் கூறியதாவது.
இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு விதிமுறைகளில் நாம் மாற்றம் செய்தாக வேண்டும். சர்வதேச அளவில் இதற்கான விவாதங்கள் தொடங்கப்பட வேண்டும் என்று நினைக்கிறேன். இந்த புதிய விதிமுறைகள் எப்படி இருக்க வேண்டும் என்பதை என்னால் இப்போது கணிக்க முடியாது.
சர்வதேச அளவில் விவாதித்து புதிய விதிமுறைகளுக்கான கருத்தொற்றுமை ஏற்பட வேண்டும். இதற்கான ஆராய்ச்சியை நாடுகளின் மைய வங்கிகள் தொடங்கப்பட வேண்டும்.
இருந்தாலும் 1930களில் இருந்த சூழ்நிலை மீண்டும் வருமோ என்ற கவலை உருவாகி இருக்கிறது. அப்போதும் சர்வதேச அளவில் வளர்ச்சியை உயர்த்த முயற்சிகள் எடுக்கப்பட்டன. சர்வதேச அளவில் இப்போதைய பிரச்சினையும் வளர்ச்சியை அதிகரிப்பது பற்றியதாக இருக்கிறது.
இது தொழில்துறை நாடுகள் அல்லது வளர்ந்து வரும் நாடுகளின் பிரச்சினை அல்ல. அந்த பிரச்சினை இப்போது விரிவடைந்து வருகிறது.
இந்தியாவில் வட்டியை குறைக்க வேண்டும் என்று பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள். முடிந்தவரை சந்தையில் இருந்து வரும் கருத்துகளை நான் கேட்பதைத் தவிர்க்கிறேன். இந்தியாவை பொருத்தவரை முதலீடுகளை அதிகரிக்க வேண்டும். நான் அதை பற்றி மட்டுமே கவலைப்படுகிறேன்.
2008-ம் ஆண்டு பொருளாதார மந்தநிலை ஏற்பட்ட பிறகு கடந்த ஏழு ஆண்டுகளில் ரிசர்வ் வங்கி பல நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது. இப்போது நாம் வளர்ச்சியை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. ஆனால் வளர்ச்சி எங்கிருக்கிறது என்பதுதான் தெரியவில்லை என்றார்.
மூலதன புழக்கத்தை அனைத்து நாடுகளின் மத்திய வங்கிகளும் கண்காணிக்க வேண்டியது மிகவும் அவசியம். முதலீடுகள் நிரம்பி வழிவதால் ஏற்படும் பாதிப்புகளை நாம் நன்கறிவோம். அதற்கேற்ப எதை அனுமதிப்பது அல்லது எதை அனுமதிக்கக் கூடாது என்பதை நாம் அடிக்கடி ஆய்வு செய்ய வேண்டும் என்றார் ராஜன்.
2008-ம் ஆண்டு அமெரிக்காவில் உருவான பொருளாதார நெருக்கடியை முன்கூட்டியே கணித்தவர் ரகுராம் ராஜன் என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுத்துறை வங்கிகளுக்கு மூலதனம் தேவை
தற்போதைய நிலையில் பொதுத்துறை வங்கிகளின் மூலதன தன்னிறைவு விகிதம் போதுமானதாக இருக்கிறது. ஆனால் எதிர்காலத்தில் சர்வதேச விதிமுறைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்றால் கூடுதல் மூலதனம் தேவை என்ரு ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் ஆர்.காந்தி தெரிவித்திருக்கிறார்.
வருமுன் காப்பதே சிறந்தது. பேசல் 3 விதிமுறை அமலாகும் போது கூடுதல் மூலதனம் தேவைப்படும். மூலதனம் இருக்கும் போது வங்கிகளுக்கு நம்பிக்கை அதிகரிக்கும் என்று அசோசேம் அமைப்பு நடத்திய விழாவில் காந்தி கூறினார்.
2018-ம் ஆண்டு பேசல் 3 விதிமுறையை பூர்த்தி செய்வதற்கு பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ.2.40 லட்சம் கோடி தேவைப்படும்.
டிசமபர் 2014-ல் பொதுத்துறை வங்கிகள் சந்தையில் இருந்து 1.60 லட்சம் கோடி வரை மூலதனத்தை திரட்டிக்கொள்ளலாம் என்று காபினட் ஒப்புதல் வழங்கியது. கடந்த நான்கு வருடங்களில் பொதுத்துறை வங்கிகளின் மூலதனத்துக்கு ரூ.58,634 கோடியை மத்திய அரசு செலவு செய்துள்ளது.