

மைக்ரோமேக்ஸ் நிறுவனம் ஹைதராபாதில் ஆலை அமைக்க உள்ளது. இங்கு ரூ.500 கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. தெலங்கான அரசு அதிகாரிகள் இந்த தகவலை தெரிவித்துள்ளனர்.
மொபைல் உற்பத்தி மையத்தில் இந்த ஆலை அமைய உள்ளது. இந்த மையம் அடுத்த கட்டமாக எலெக்ட்ரானிக் பொருட்கள் தயாரிக்கும் பிராந்தியமாக மேம்படும் வாய்ப்புள்ளது என்று மாநில தகவல் தொடர்பு மற்றும் மின்னணு தொடர்பு துறை செயலாளர் ஜெயேஷ் ரஞ்சன் தெரிவித்தார். இதற்காக 1,000 ஏக்கர் நிலம் தயாராக உள்ளது என்று கூறினார்.
இந்த எலெக்ட்ரானிக் உற்பத்தி கூட்டமைப்பு மையம் ரெங்காரெட்டி மாநிலத்தில் உள்ள மகேஸ்வரம் என்கிற பகுதியில் அமைய உள்ளது. 2008 லேயே சிறப்பு பொருளாதார மண்டலத்துக்காக மின்னணு நிறுவனங்களுக்கு இந்த இடம் ஒதுக்கப்பட்டிருந்தது என்றார்.
இந்திய செல்போன் தயாரிப்பு நிறுவனங்களின் கூட்டமைப்பு, மற்றும் மாநில அரசு இரண்டும் சமீபத்தில் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டன. கடந்த வாரத்தில் பல்வேறு செல்போன் தயாரிப்பு நிறுவன பிரதிநிதிகள் இந்த பகுதியை பார்வையிட்டுச் சென்றுள்ளனர்.