Last Updated : 07 Jun, 2015 11:53 AM

 

Published : 07 Jun 2015 11:53 AM
Last Updated : 07 Jun 2015 11:53 AM

வணிக நூலகம்: நேர்மறை கருத்து கூறல்

நித்தின் மிகவும் கோபமாக தொலைபேசியில் யாரிடமோ வாதம் செய்து கொண்டிருந்தான். ஒரு நல்ல பணியாளர் இவ்வாறு உணர்ச்சி வயப்பட்டு சப்தம் போட்டுக்கொண்டிருப்பதால் விளைவு என்னவாக இருக்கும் என்பதை எண்ணி பார்க்க மறந்து உச்ச குரலில் உலா போய்க் கொண்டிருந்தான். ஆனால், நித்தின் நல்ல பண்பாளன், பழகுவதற்கு இனியவன், அதிர்ந்து பேசாதவன். இப்பொழுது பேசிய பேச்சுகளால் ஒரு நல்ல வாடிக்கையாளரை இழக்கலாம். அல்லது யாரோ ஒரு முகம் தெரியாத நபர் நித்தினை பற்றி ஒரு தவறான அபிப்ராயத்தை வரைந்துகொள்ள முடியும். இந்த சூழலில் நித்தினிடம் பக்குவமாகவும், அறிவு பூர்வமாகவும், உறவுகளின் மெய்ப்பாடு இல்லாமலும் புரிந்து கொள்ளக் கூடிய வகையில் சுற்றி வளைக்காமல் நேரடியாக புரிந்துகொள்ள ஏதுவாக கருத்துகளைக் கூறவேண்டும்.

இதனால், உறவுகளில் எந்த விதமான உராய்வும் ஏற்படாது. மாறாக, புரிந்து கொள்ளுதல், மற்றும் மீண்டும் ஒருமுறை உணர்ச்சி வலைகளில் சிக்கிக் கொள்ளாமை ஆகியவற்றுக்கு வாய்ப்புகள் அதிகம். இதைத்தான் இந்த நூலின் ஆசிரியர் குழு எளிதில் புரிந்துகொள்ளும் வகையில், பக்கத்தில் இருக்கக் கூடிய பணியாளர் அறிந்து கொள்ளக் கூடிய வகையில் முத்தான கருத்துகளை முத்தாய்ப்பாய் தெளிக்கிறார்கள்.

வாருங்கள் நாமும் இந்த நூலில் மூழ்கி சில முத்துகளை அள்ளிவருவோம்.

கருத்து கூறல் என்றால் என்ன?

கருத்து கூறுதல் என்பது இதுவரை சரியான மொழியாக்கத்தில் எழுதப்பட வில்லை மாறாக FEEDBACK என்பதன் நெருங்கிய மொழியாக்கம் ஆக வழக்கில் உள்ளது. நாமும் அதையே ஏற்போம். நேர்மறையான கருத்துகளை எடுத்துக்கூறி பிரச்சினைகளின் தாக்கத்தை தீர்க்க உதவுவதே கருத்துக்கூறல் என்றால் மிகையாகாது. இதை எவ்வாறு செம்மைப்படுத்துவது?

* உடன் பணியாற்றுபவர்களின் பணியிலும், நலனிலும் கவனம் காட்டுதல்

* சிறப்பாக செய்த வேலையை பாராட்டுதல்

* தவறான நடத்தையை வழிமாற்றுதல்

* ஆக்கபூர்வமான செயல் வகைகளைச் சுட்டிக்காட்டுதல்

* கற்றலுக்கும், வளர்ச்சிக்கும் வழிகாட்டுதல்

* உடன் பணியாற்றுபவர்களை ஊக்குவித்து, திறமைகளின் வெளிப்பாடுகளை அதிகரித்தல்.

* உடன் பணியாற்றுபவர்களிடம் நட்பு நாற்றுக்களை நடுதல்

* வெளிப்படையான கருத்து பரிமாற்றம் மூலம் அனைவரின் பங்களிப்பையும் அதிகரித்தல்.

* கருத்து கூறல் எப்பொழுது பயனுள்ளதாகிறது

* சரியான சூழலில் அடிக்கடி கருத்துகளை பகிர்ந்து கொள்ளுதல்

* முறையான, சரியான, சிறப்பான வெளிப்பாடுகளை சாதித்தல்

* எதார்த்தமாக இருத்தல்

* கூறுவது மட்டுமின்றி கேட்பதும் முக்கியமானது

* முடிவான முடிவாக கூறாமல் பல கருத்துகளில் ஒரு கருத்தாக வெளிப்படுத்துதல்

* கூறிய கருத்துகளை மறுபடியும் துருவிப்பார்த்து மாற்றங்களை ஏற்றுதல்.

* கருத்து கூறுதலினால் ஏற்படும் அச்சம் தவிர்

* கேட்பவர்கள் நம்மை வெறுக்கவோ அல்லது உறவில் பிரச்சினைகள் ஏற்படுமோ என்ற கவலையை புறம் தள்ள வேண்டும்.

* நாம் கூறும் கருத்துகளை மற்றவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்ற எண்ணத்தை ஏற்படுத்திக் கொள்ளாமலிருக்க வேண்டும்.

* கடந்த முறைகளில் யாரேனும் கருத்து கூறலை தவிர்த்து போயிருக்கிறார் களா அல்லது அதன்படி நடக்காமல் இருந்திருக்கிறார்களா என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

* அடுத்தவர்கள் அவரவர் வழிகளைத் தேர்ந்தெடுத்திருப்பார்கள். மேலும் நாம் கூறுவதை கேட்கமாட்டார்கள் ஏனென்றால் நம்முடைய கருத்துகள் அவர்களுக்கு உதவிகரமாக இருக்காது” என்ற தவறான கருத்துகளை தள்ள வேண்டும்.

* எதிர்ப்புகளையும், அசிங்கமான கொதித்தெழும் சூழ்நிலைகளையும் எண்ணி கவலை கொள்ள கூடாது.

பணிபுரியும் இடங்களில் கருத்து கூறல்கள் தனிநபர் உறவுகளை பாதிக்கும் என்ற அச்சம் நிறுவனத்தின் நலனை வெகுவாக பாதிக்கும். சில நேரங்களில் பணியாளர்களிடம் நாம் கூறும் கருத்துகள் அவர்களின் வரவேற்பை பெறாமல் இருக்கும். நாம் என்னதான் ஆக்கபூர்வமாகவும், அறிவு பூர்வமாகவும் தவறுகளை வழிமாற்ற அறிவுரைகளை கூறினாலும் மற்றவர்களின் ‘முயலுக்கு மூன்றுகால்’ மனப்பான்மை அவைகளை ஏற்றுக்கொள்ளாமல் தடுக்கும். அது போன்ற நேரங்களில் நுணுக்கமாக அணுகி பார்வையில் உள்ள நிறப் பாகுபாடுகளை மாற்றி சரியான நிறத்தை அடையாளம் காட்ட வேண்டும்.

எதிர்த்து எழுபவர்களின் ஆத்திரமும், கோபமும் மட்டுப்படும் வரை அமைதி காத்து அவர்களுக்கு புரியும் வண்ணம் கருத்து கூறுவது அவசியம் (இது என்ன என் தலையெழுத்தா, நாம் எதற்காக இவ்வாறு செய்ய வேண்டும், ஏன் அநாவசியமாக அடுத்தவரை பகைத்துக்கொள்ள வேண்டும் என்று எண்ணாமல் நிறுவன நலனுக்காக பொறுத்துக்கொள்ள வேண்டும்) கருத்து கூறுதல் குறைவான அளவினதாக இருக்க வேண்டும். ஏராளமான செய்திகளை தாராளமாக வாரிவழங்கும் போது கேட்பவர்கள் கொந்தளிப்பின் உச்சியில் இருப்பார்கள். எளிமையான ஒன்று இரண்டு கருத்துகளை தெளிவாக கூறுவதன் மூலம் உணர்ச்சி கொந்தளிப்பு அடக்கப்பட்டு அறிவு கண்கொண்டு கருத்துகளை பார்க்க தோன்றும்.

முதலில் அடுத்தவரின் கருத்துகளை முழுவதும் கேட்டு அவர்கள் முடித்த பிறகு சுருங்க கூறுதல் நன்று. மெதுவாக, அமைதியாக, தெளிவாக கருத்துகள் கூறுவது அவசியம். என்ன, எப்படி, ஏன் நடந்தது என்பதை தெளிவாக எடுத்துக்கூறி மாற்றுப்பாதைக்கு வழிகாட்டுதல் அவசியம்.

நிறுவனத்தில் உயர்ந்த பட்ச இலக்கு களை எட்டியவர்கள் கருத்து கூறலை அனுமதிக்கமாட்டார்கள். ஆனால், அவர் களுக்கும் கருத்து கூறல் அவசியம். மிக அதிகபட்ச இலக்குகளை அடைந் தவர்களிடம் அவர்களின் செயல்களை பாராட்டி, நன்றி கூறி தொடங்க வேண்டும். அவர்கள் செய்த சாதனைகளில் எத்தனை நேரங்களில் தன் சொந்த மற்றும் குழு சார்ந்த நிகழ்வுகளுக்காக நிறுவன இலக்குகளை அடையும் எண்ணத்தில் விட்டுக்கொடுத்து போயிருக்கிறார்கள் என்பதை சுட்டிக்காட்ட வேண்டும்.

அதிகபட்ச இலக்குகளை அடைந் தவர்கள் சரியான திசையில் செல்கிறார்கள் என்று எண்ண முடியாது.

அவர்களும் தங்களை வளர்த்துக் கொள்ள வாய்ப்பு அளிக்க வேண்டும். பணியில் அடுத்து என்ன சாதிக்க வேண் டும், தடைகளை எவ்வாறு தாண்ட வேண்டும் என்பது பற்றி எடுத்துக் கூற வேண்டும். தனிநபர் பாதிப்பு, சாதனை இவைகளை தாண்டி நிறுவனத்துக்கு உயர்ந்தபட்ச இலக்கை எட்டியவர்கள் எவ்வாறு பயனுள்ளவர்களாக இருக்கிறார்கள் என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.

கருத்து கூறலின் சரியான சூழல்

கருத்துகூறலை முக்கியமானதாக கொள்ள வேண்டும். நேர்மறையானதும், தவறை திருத்திக் கொள்வதும் கருத்து கூறுதலின் முக்கிய காரணிகள். தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் யாரேனும் கருத்து கூறுவார்கள் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்காமல், மற்றவர்கள் எவ்வாறு நேர்மறையாகவும், அதிக உற்பத்தி திறன்கள் உள்ளவர்களாகவும் மாற்றிக்கொள்ள வேண்டும் என்று கூற வேண்டும்.

நேர்மறையான எண்ணங்களை அனைவரும் அறிந்துகொள்ளும் வண்ணம் உரக்கக் கூறி பாராட்ட வேண்டும். எதிர்மறையான கருத்து கூறலை தனியாகவும் மற்றவர்கள் யாரும் எளிதில் அறிந்து கொள்ளவியலாத வகையிலும் கூற வேண்டும். முயற்சியை பாராட்ட வேண்டுமே தவிர திறமைகளை பாராட்டக் கூடாது. ஒரு வேலைச் சூழல், முயற்சிகளை மதிக்கும் பொழுது அதிக திறமை வேகமாக வெளிப்படும். நேர்மறையான கருத்துகூறலை நல்ல முறையில் பணியாற்றுபவர்களிடம் கூறும் பொழுது அந்த செயல் உறுதிப்படுத்தப்படுகிறது.

சில நேரங்களில் உங்களுடைய நடவடிக்கைகளை மாற்றிக் கொள்ள கருத்துகளை கூறுகிறேன் என்பதை காட்டிலும், நான் உங்களுக்கு சில கருத்து களை கூறலாமா என்ற கேள்வி, தாராளமாக சொல்லுங்கள் என்பதைப் பெற்று தரும். கருத்துகூறல் கலையை கற்றுத்தேற நேரமும் குவிந்த கவன மும் தேவை. மற்ற திறமைகளைப் போல சிலருக்கு கருத்து கூறுதல் எளிது, சிலருக்கு அது இயலாததாக இருக்கும். மேலே கூறிய கருத்துகளை ஏற்றுக் கொண்டு அவைகளை நடைமுறைப் படுத்தினால் உங்களுடைய நடையை யும், மொழியையும், கருத்தையும் மற்றவர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்பதில் எள் அளவும் ஐயமில்லை. கருத்துகூற கற்றுக் கொள்ளுங்கள், கருத்துகூறி நிறுவனத்தில் பணிபுரிபவர் அதிகபட்ச இலக்குகளை எளிதாக அடைய உதவுங்கள்.

rvenkatapathy@rediffmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x