Last Updated : 28 Jun, 2015 01:28 PM

 

Published : 28 Jun 2015 01:28 PM
Last Updated : 28 Jun 2015 01:28 PM

‘பொருளாதார மந்தம் திருமண சந்தையை பாதிக்காது’ - பாரத்மேட்ரிமோனி டாட் காம் நிறுவனர் முருகவேல் ஜானகிராமன்

சமீப காலங்களில் இணையதளம் சார்ந்த தொழில் தொடங்குவது அதிகரித்து வருகிறது. ஆனால் 1990களின் இறுதியில் இணையதளம்தான் சந்தை என்பதை கணித்து இணையம் சார்ந்து தொழிலை ஆரம்பித்தவர் முருகவேல் ஜானகிராமன்.

தற்போது இந்தியாவில் லாபம் ஈட்டும் மிகச்சில இணைதள நிறுவனங்களில் பாரத்மேட்ரிமோனி டாட் காமும் ஒன்று. தற்போதைய சந்தை, ஐபிஓ உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து அவரிடம் விவாதித்தோம். அந்த உரையாடலில் இருந்து...

பிளிப்கார்ட் உள்ளிட்ட சில நிறுவனங்கள் சமீப காலத்தில் ஆரம்பிக்கப்பட்டவை. ஆனால் அந்த நிறுவனங்களின் சந்தை மதிப்பு எங்கேயோ சென்று விட்டது. எதிர்காலத்தில் இணையம் மூலமே பிஸினஸ் என்பதை ஆரம்பகாலங்களில் உணர்ந்த உங்கள் நிறுவனங்களின் மதிப்பு இந்த அளவுக்கு உயரவில்லை. இதில் வருத்தம் ஏதாவது உண்டா?

இதில் வருத்தப்பட ஒன்றும் இல்லை. 2000-ம் ஆண்டு நாங்கள் தொழில் தொடங்கிய போது இருந்த சூழ்நிலை வேறு. பிளிப்கார்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் தொடங்கிய போது சூழ்நிலை வேறு. நாங்கள் நிறுவனம் தொடங்கியபோது இணையம் பயன்படுத்துபவர் களின் எண்ணிக்கை குறைவு. நாங்கள் 20 மில்லியன் டாலர் மட்டுமே நிதி திரட்டினோம். ஆனால் இப்போது சந்தையில் நிறைய முதலீடு கிடைகிறது.

நாங்கள் புதிய சந்தையை உருவாக்கினோம். இப்போது இணையத்தின் வளர்ச்சி காரண மாக வாய்ப்புகள் உருவாகி வருகின்றன. அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி கொள்ள நிறுவனங் களும் தயாராக இருக்கின்றன. முதலீடு செய்ய முதலீட்டாளர்களும் தயாராக உள்ளார்கள். மேலும் எங்களுடைய தொழிலும் அவர் களுடையதும் வேறு வேறு. அத்துடன் ஒப்பிட முடியாது. நாங்கள் செய்வதில் எங்களுக்கு மகிழ்ச்சி இருக்கிறது. அதைவிட நாங்கள் ஒரு லாபமீட்டும் நிறுவனம்.

ஏற்கெனவே இருக்கும் வாடிக்கையாளர்களால் உங்களுக்கு நேரடியாக பயன் இல்லை. ஒவ்வொரு முறையும் புதிய புதிய வாடிக்கையாளர்களை தேட வேண்டுமே?

இது கல்லூரி போலதான். மாணவர்கள் ஒவ்வொரு வருடமும் வருவார்கள் படிப்பார்கள் சென்று விடுவார்கள். நிரந்தர வாடிக்கையாளார்கள் இருக்க மாட்டார்கள் தான். ஆனால் ஒவ்வொரு வருடமும் திருமண சந்தை பெரிதாகிக் கொண்டே இருக்கிறது. எந்த பொருளாதார மந்த நிலையோ சுழற்சியோ திருமணத்துக்கு கிடை யாது. ஒவ்வொரு வருடமும் திரு மணங்கள் நடந்துகொண்டுதான் இருக்கும்.

இணையத்தின் வளர்ச்சி அதிகரிப்பது காரணமாக இணையத்தில் முன்பதிவு செய்வது அதிகரிக்கும். இணையத்தை பொருத்தவரை முன்னணி நிறுவனத்துக்கு அதிக மக்கள் வருவார்கள். உதாரணத்துக்கு சமூக வலைதளத்தில் முதன் முதலாக கணக்கு தொடங்க முடிவெடுத்தால் பேஸ்புக்குக்குதான் அதிக நபர்கள் செல்வார்கள். காரணம் அங்குதான் பெரும்பாலான நபர்கள் இருக்கிறார்கள். அதே விதிதான் எங்களுக்கும். மேலும் எங்களுக்கு பலவிதமான வாய்ப்புகள் இருப்பதால் அதிக மக்கள் வந்துகொண்டு இருக்கிறார்கள்.

ஏற்கெனவே உங்களிடம் வாடிக்கையாளராக இருந்தவர்களின் தகவல்கள் உங்களிடம் இருக்கும். அதை எப்படி பயன்படுத்தப் போகிறீர்கள்?

அந்த வாடிக்கையாளர்களை பயன்படுத்துவது எப்படி என்பது குறித்து யோசித்து வருகிறோம். அதுகுறித்து ஐடியாக்களை விவாதித்து வருகிறோம். இப்போதைக்கு சொல்ல முடியாது.

சில வருடங்களுக்கு முன்பு பிரான்ஸைசி மூலம் பல ஊர்களில் சேவை கொடுத்து வந்தீர்கள். இப்போது அனைத்து இடங்களிலும் நேரடியாக கிளை தொடங்கியிருக்கிறீர்களே. ஏன்?

நாங்கள் 2006-ம் ஆண்டு சமயத்தில் பிரான்ஸைசி கொடுத்தோம். அனுபவம் இல்லாததால் அதில் சில தவறுகள் செய்தோம். அதனால் நாங்களே எடுத்து கொண்டோம். உதாரணத்துக்கு குறிப்பிட்ட பகுதியில் கவனம் செலுத்தாமல் இந்தியா முழுக்க விரிவுபடுத்தினோம். தமிழ்நாட்டில் ஐந்து இடங்களில் மட்டுமே கிளை இருக்கும், ஆனால் தமிழகம் முழுவதும் விளம்பரம் செய்வதினால் என்ன பலன் கிடைக்கும்?

அடுத்து இது ஒரு சேவை. நாங்கள் எந்த பொருளையும் விற்கவில்லை. வாடிக்கையாளர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனநிலையில் வரும்போது அங்கிருப்பவர்கள் வாடிக்கையாளர்களின் உணர்வுகளை கையாள வேண்டி இருக்கிறது. இதை பிரான்ஸைசி நபர்கள் செய்வதை விட, நாங்களே செய்தால்தான் சிறப்பாக இருக்க முடியும் என்பதால் எடுத்துக்கொண்டோம்.

தமிழ்நாட்டில் சாதி பெயரை சொல்வதற்கு பெரும்பாலானவர்கள் விரும்ப மாட்டார்கள். எப்படி சாதி பெயரில் இணையதளம் தொடங்கினீர்கள்? இதற்கு எதிர்ப்பு வரவில்லையா?

சாதி என்பது ஒரு வாழ்க்கை முறை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பழக்கம் இருக்கும். சில வீட்டில் காலையிலே சாப்பாடு சாப்பிடுவார்கள். குஜராத்திகள் இனிப்புகள் சாப்பிடுவார்கள். சாதி என்பது வாழ்க்கை முறை. ஒரே பிரிவில் திருமணம் நடக்கும் போது, இதுபோல சிறிய சிறிய பிரச்சினைகள் வராது.

அலுவலகத்தில் தகுதியான நபர்களை எடுக்கிறோம். இருந்தாலும் ஒவ்வொரு அலுவலகமும் culture fit-ஐ எதிர்பார்க்கிறார்கள். தகுதி இருந்தும் நம் அலுவலகத்துக்கு இவர் சரிவருவாரா என்று பார்ப்பது போலதான் சாதியும் பிரிவுகளும். 90 சதவீதம் ஒரே பிரிவுக்குள்தான் திருமணம் நடக்கிறது. இதில் சரி, தவறு என்று ஏதும் இல்லை. யார் பெரியவர் என்பதில் பிரச்சினை தொடங்குகிறது.

பாரத் மேட்ரிமோனி அளவுக்கு மற்ற தொழில்கள் சிறப்பாக இல்லையே?

கிளிக்ஜாப்ஸ் நிறுவனத்தை விற்றுவிட்டோம். இந்தியா பிராப்பர்டி டாட் காம் நிறுவனத்தை தனி நிறுவனமாக மாற்றிவிட்டோம். இப்போது சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இருமுறை நிதி திரட்டி விட்டோம்.

கடந்த இரு வருடங்களாகவே ஐபிஓ வெளியிடப்போவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. எப்போது உங்கள் முதலீட்டாளர்களுக்கு exit கொடுப்பீர்கள்?

யாகூ நிறுவனம் 2006-ம் ஆண்டு முதலீடு செய்தார்கள். 2010-ம் ஆண்டு வெளியேறிவிட்டார்கள். இன்னொரு நிறுவனமும் இந்த வருட ஆரம்பத்தில் வெளியேறி விட்டது. முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபம் கிடைத்திருக்கிறது. எங்களுடைய நீண்டகால பயணத்தில் ஐபிஓ என்பது ஒரு பகுதி. சரியான நேரத்தில் ஐபிஓ வெளியிடுவோம்.

இணையதள தொழிலில் உங்களுக்கு அனுபவம் இருக்கிறது. இ-காமர்ஸ் நிறுவனம் தொடங்கும் திட்டம் இருக்கிறதா?

நாங்கள் திருமண சந்தையில் இருக்கிறோம். இதிலேயே விரிவடைய திட்டம் வைத்திருக்கிறோம். வேறு விஷயத்தில் கவனம் செலுத்தினால் எங்களுடைய முக்கிய தொழிலில் கவனம் சிதறும். மேலும் ஒரு இ-காமர்ஸ் நிறுவனம் என்ற பெயர் எங்களுக்கு வேண்டாம். எங்களது தொழிலில் மேலும் புதிய புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்கவே விரும்புகிறோம்.

தமிழ்நாட்டில் தொழில்முனைவு முயற்சிகள் எப்படி இருக்கிறது?

தமிழ்நாட்டில் தொழில்முனைவு மேம்பட்டிருக்கிறது. ஆனால் பெங்களூரு, டெல்லி, மும்பை ஆகிய நகரங்களுடன் ஒப்பிடும் போது சென்னையில் தொழில் முனைவு பெரிதாக இல்லை. இப்போது முதலீட்டாளர்கள் நிறைய இருக்கிறார்கள். ஐடியாக்கள் இருக்கிறது. ஆனால் தொழில்முனைவு இன்னும் அதிகரித்திருக்க வேண்டும். தொழில் செய்வது பணத்துக்காக மட்டும் அல்ல. வேலைவாய்ப்பு, நாட்டின் வளர்ச்சி உள்ளிட்ட பல விஷயங்கள் இதில் இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x