

வேதாந்தா இந்தியா மற்றும் கெய்ர்ன் இந்தியா ஆகிய நிறுவனங்கள் இணைகின்றன. இந்த இணைப்புக்கு இரு நிறுவ னங்களின் இயக்குநர் குழுவும் ஒப்புதல் வழங்கி உள்ளன. இந்த இரு நிறுவனங்களும் இங்கிலாந்து பங்குச்சந்தையில் பட்டியலிட்டுள்ள வேதாந்தா பிஎல்சி நிறுவனத்தின் இந்திய துணை நிறுவனங்கள் ஆகும்.
வேதாந்தா இந்தியா நிறுவ னத்தைவிட கெய்ர்ன் இந்தியா நிறுவனம் இரு மடங்கு பெரியது. இரு நிறுவனங்கள் இணைவதன் மூலம் வேதாந்தா நிறுவனத்துக்கு உள்ள கடன்கள் குறையும். வேதாந்தா நிறுவனத்துக்கு ரூ.39,636 கோடி அளவுக்கு கடன் இருக்கிறது. அதே சமயம் கெய்ர்ன் இந்தியா நிறுவனம் கடன் இல்லாத நிறுவனம். ரூ16,800 கோடியை ரொக்கமாக வைத்திருக்கிறது.
ஸ்காட்லாந்தினை சேர்ந்த கெய்ர்ன் பிஎல்சி நிறுவனத்தின் இந்திய துணை நிறுவனமாக கெய்ர்ன் இந்தியா இருந்தது. அதன் பிறகு கெய்ர்ன் இந்தியா நிறுவனத்தை கெய்ர்ன் பிஎல்சி தனியாக பிரித்தது. இந்த மாற்றத்தில் 20,495 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு இருப்பதாக இந்திய வருமான வரி துறை கெய்ர்ன் இந்தியா மற்றும் கெய்ர்ன் பிஎல்சி நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.
முன்னதாக கெய்ர்ன் இந்தியா நிறுவனம் தனியாக பிரிக்கப்பட்ட உடன், அந்த நிறுவனத்தை வேதாந்தா குழுமம் வாங்கியது. ஏற்கெனவே வேதாந்தா குழுமத்துக்கு சேசா ஸ்டெர்லைட் என்னும் நிறுவனம் இந்தியாவில் இருந்தது.
அந்த நிறுவனம் வேதாந்தா இந்தியா என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு, இப்போது வேதாந்தா இந்தியா மற்றும் கெய்ர்ன் இந்தியா ஆகிய நிறுவனங்களை இணைக்க வேதாந்தா பிஎல்சி முடிவெடுத் திருக்கிறது.
இந்த இணைப்புக்கு பிறகு வேதாந்தா நிறுவனம் மட்டுமே பங்குச்சந்தையில் வர்த்தகமாகும். கெய்ர்ன் இந்தியா பங்குச்சந்தை வர்த்தகத்தில் இருந்து விலக்கிக்கொள்ளப்படும்.
கெய்ர்ன் இந்தியாவின் ஒவ்வொரு பங்குக்கும் ஒரு வேதாந்தா பங்கு வழங்கப்படும். கூடவே 10 ரூபாய் மதிப்புள்ள மாற்றத்தக்க முன்னுரிமை பங்கு ஒன்றும் வழங்கப்படும்.
இந்த இணைப்பினை வரும் 2016-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் முடிப்பதற்கு நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.
முன்கூட்டியே வரிவிதிப்பது ஏமாற்றமளிக்கிறது
20,495 கோடி ரூபாய் வரி செலுத்துமாறு கெய்ர்ன் இந்தியா நிறுவனத்துக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி இருந்தது. அது குறித்து பேசிய வேந்தாந்தா நிறுவன தலைமைச்செயல் அதிகாரி டாம் ஆல்பனீஸ், ‘இது ஏமாற்றமளிக்கிறது. சர்வதேச அரங்கில் இந்தியாவின் பெயருக்கு பங்கம் விளைவிக்கும்.
கடந்த வாரம் பெய்ஜிங் சென்றபோது அங்கு சர்வதேச மியூச்சுவல் பண்ட் துறையை சேர்ந்தவர்களிடம் பேசிக்கொண்டிருந்தேன். அப்போது அவர்கள் இந்தியாவில் என்னதான் நடக்கிறது என கேள்வியெழுப்பினர்.
நாங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய தயாராகவே இருக்கிறோம். ஆனால் இந்த வரி தொடர்பான வழக்கு எங்களுக்கு குழப்பதை ஏற்படுத்துகிறது’ என்றார்.