

கீர்த்திலால் காளிதாஸ் நிறுவனம் வைர கற்களை சோதிப்பதற்கான நவீன இயந்திரத்தை நேற்று அறிமுகப்படுத்தியது.
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நிறுவனத்தின் சந்தைப் பிரிவு தலைவர் அருண்குமார் இந்த நவீன இயந்திரத்தை அறிமுகப்படுத்தி பேசினார். மேலும் வைரங்களை தர ஆய்வு செய்ய சாலிடர் லேப் என்கிற தர ஆய்வு மையத்தையும் அறிமுகப்படுத்தினார்.
சந்தையில் இன்றைக்கு கிடைக்கும் வைரங்களை வாங்கி பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் அவற்றின் தரத்தை துல்லியமாக தெரிந்து கொள்ளும் வாய்ப்பு இல்லை. எனவே சரியான வைரத்தை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை எங்களது சாலிடர் லேப் வழங்கும் என்று குறிப்பிட்டார். மூன்று வகையான இயந்திரங்கள் மூலம் வைர நகைகளின் தரம் மற்றும் துல்லியம் சோதிக்கப்படுகிறது. இதன் மூலம் போலி வைர கற்களை கண்டறிய முடியும் என்றார்.
போலி வைரத்தை கண்டறியும் இந்த இயந்திரம் இந்தியாவில் முதல் முறையாக பயன்படுத்தப்படுகிறது என்றும், இந்த இயந்திரம் பரவலாக புழக்கத்துக்கு வர பத்து வருடங்கள் ஆகலாம் என்றும் குறிப்பிட்டார்.
சென்னை ஷோரூமில் ஜூன் 09-ம் தேதி வரை இருக்கும் என்றும், பொதுமக்கள் தங்களிடம் உள்ள வைரங்களை இதன் மூலம் எவ்வித கட்டணமும் இன்றி சோதித்தறிய அனுமதிக்கப்படும் என்றும் நிறுவனம் கூறியுள்ளது.