தொடர் சரிவில் பங்குச் சந்தை: சென்செக்ஸ் 27000 புள்ளிகளுக்கு கீழே சரிந்தது

தொடர் சரிவில் பங்குச் சந்தை: சென்செக்ஸ் 27000 புள்ளிகளுக்கு கீழே சரிந்தது
Updated on
2 min read

தொடர்ந்து இரண்டாவது நாளாக இந்திய பங்குச் சந்தைகள் கடு மையாக சரிந்து முடிந்தன. பங்குச் சந்தையில் விற்கும் போக்கு அதிகமாக இருந்ததால் சரிவு தொடர்ந்தது. நேற்று 351 புள்ளிகள் சரிந்து 26837 புள்ளிகளில் சென்செக்ஸ் முடிவடைந்துள்ளது.

தேசியப் பங்குச் சந்தையின் குறியீடான நிப்டி 101 புள்ளிகள் சரிந்து 8135 புள்ளிகளில் முடிவடைந்தது. சென்செக்ஸ் பங்குகளில் இருக்கும் 30 பங்குகளில் 24 பங்குகள் சரிந்து முடிவடைந்தன.

செவ்வாய்க்கிழமை ரிசர்வ் வங்கி 0.25 சதவீதம் வட்டி குறைப்பு செய்திருந்தாலும், பங்குச் சந்தை 0.50 சதவீதம் வரை வட்டி குறைப்பினை எதிர்பார்த்தது. தவிர பருவமழையும் சராசரி அளவில் 88 சதவீதம் மட்டுமே இருக்கும் என்பதால் பங்குச்சந்தை கடுமையாக சரிந்தன. இதற்கு முன்பு சராசரி அளவில் 93 சதவீதம் அளவுக்கு மழை இருக்கும் என்று கணிக்கப்பட்டிருந்தது. மேலும் 13 மாதங்களில் இல்லாத அளவுக்கு சேவை துறையின் செயல்பாடும் குறைந்திருக்கிறது என்று ஹெச்எஸ்பிசி தெரிவித் திருக்கிறது. பருவ மழை குறைவு காரணமாக எப்எம்சிஜி, உரம், இரு சக்கர மற்றும் டிராக்டர் பங்குகள் சரிந்து முடிந்தன. மேலும் பருவமழை காரணமாக நிதிப் பற்றாக்குறை அதிகரிக்கக்கூடும் என்றும் கணிக் கப்பட்டிருக்கிறது.

அனைத்து குறியீடுகளும் சரிவு

அனைத்து குறியீடுகளும் சரிந்து முடிந்தன. குறிப்பாக ரியால்டி துறை குறியீடு 5.54 சத வீதம் அளவுக்கு சரிந்தது. ஜேபி குழும நிறுவனங்கள், சுஸ்லான், யுனிடெக், ஐவிஆர்சிஎல், டிஎல்எப், ஜிடிஎல் ஆகிய பங்கு கள் கடுமையாக சரிந்தன.

இதற்கடுத்து எப்எம்சிஜி குறி யீடு 3.45 சதவீதமும், மின்துறை குறியீடு 2.22 சதவீதமும் சரிந்து முடிந்தன. அதேபோல மிட்கேப் (1.58%) மற்றும் ஸ்மால்கேப் (1.98%) சரிந்து முடிந்தன. சென் செக்ஸ் பங்குகளில் டாடா பவர், ஐடிசி, ஓஎன்ஜிசி ஆகிய பங்குகள் கடுமையாக சரிந்தன.

இதற்கிடையே செவ்வாய்க் கிழமை வர்த்தகத்தில் 594 கோடி ரூபாய் அளவுக்கு பங்குகளை அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் விற்றார்கள்.

நெஸ்லே இந்தியா பங்கு 9% சரிவு

எப்எம்சிஜி துறையில் செயல்பட்டு வரும் நிறுவனமான நெஸ்லே இந்தியா நிறுவனத்தின் முக்கிய பிராண்டுகளில் ஒன்று மாகி. இந்த நூடுல்ஸில் ரசாயன கலப்பு அதிகமாக இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டிருப்பதால் நெஸ்லே இந்தியா பங்குகள் 9 சதவீதம் வரை சரிந்து முடிந்தது.

இந்த நிலையில் டெல்லி அரசு 15 நாட்களுக்கு மாகி நூடுல்ஸ் விற்க தடை விதித்திருக்கிறது. தற்போது கடைகளில் இருக்கும் பொருட்களை திரும்ப பெற்றுக்கொள்ளுமாறும் நிறுவனத்துக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. கேரளா அரசாங்கமும் இந்த பொருட்களை திரும்ப எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தி இருக்கிறது. பல மாநிலங்களில் இந்த நிறுவனத்தின் பொருட்கள் சோதனைக்கு எடுத்துச் செல்லப்பட்டிருக்கிறது. இந்த பங்கு சரிவு குறுகிய காலத்துக்கு நீடிக்கும் வாய்ப்புகள் அதிகம் என்று பங்குச்சந்தை நிபுணர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

ஸ்விட்சர்லாந்தினை சேர்ந்த நிறுவனம் நெஸ்லே. 1866-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அந்த நிறுவனத்தின் துணை நிறுவனம்தான் நெஸ்லே இந்தியா.

இந்தியாவில் எட்டு இடங்களில் இந்த நிறுவனத்துக்கு தொழிற்சாலைகள் உள்ளன. மாகி தவிர சன்ரைஸ், நெஸ்டீ, மன்ச், கிட்கேட், மில்கிபார் உள்ளிட்ட பல முன்னணி பிராண்டுகளை இந்த நிறுவனம் கொண்டிருக்கிறது. தவிர பால் பொருட்கள், சாஸ் வகைகள், ஓட்ஸ், லஸ்ஸி உள்ளிட்ட பல பொருட்களை நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. நல்ல உணவு, நல்ல வாழ்க்கை (good food good life) என்பதை ஸ்லோகனாக வைத்திருக்கும் நிறுவனம் இப்போது சர்ச்சையில் சிக்கி இருக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in