Last Updated : 07 Jun, 2015 11:56 AM

 

Published : 07 Jun 2015 11:56 AM
Last Updated : 07 Jun 2015 11:56 AM

இந்திய விவசாயிதான் அதிக ரிஸ்க் எடுக்கும் பிஸினஸ்மேன்: சுகுணா ஃபுட்ஸ் நிர்வாக இயக்குநர் ஜி.பி.சுந்தரராஜன் நேர்காணல்

ஒப்பந்த பண்ணைத் திட்ட அடிப் படையில் கோழி வளர்ப்பதில் முக்கிய நிறுவனமாக இருக்கிறது சுகுணா ஃபுட்ஸ். இந்தியாவில் 16 மாநிலங்களில் ஒப்பந்த பண்ணைத் திட்ட அடிப்படையில் இந்த நிறுவனம் பிராய் லர் கோழிகளை வளர்த்து வருகிறது. இந்த தொழிலில் இருக்கும் வாய்ப்புகள், சிக்கல்கள், உடல்நலம் குறித்த சந்தேகங்கள் என பல விஷயங்களை நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஜி.பி.சுந்தரராஜனிடம் பேசினோம். அந்த விரிவான உரையாடலிலிருந்து..

ஒப்பந்த பண்ணைத் திட்ட முறையை எப்படிக் கொண்டு வந்தீர்கள்?

நாங்கள் விவசாய குடும்பம். 1984-ம் ஆண்டு கோழிப் பண்ணை ஆரம்பித்தோம். பிராய்லர் கோழி அப்போது சரியாக பிரபலமாகாத தால் முட்டை கோழிகளை வளர்த்தோம். முட்டையை விற்பதற் காக உடுமலைப்பேட்டையில் முட்டை கடையை வைத்தோம். இப்படியே சில வருடம் ஒடியது. 1991-ஆம் ஆண்டு முட்டை விலை சரிந்தது. ஆனால் கோழிக்கு தேவை இருந்தது. ஆனால் தேவைக்கேற்ற உற்பத்தி இல்லை.

விவசாயிகளிடம் இடம், தண்ணீர் இருந்தது. ஆனால் கோழியை வளர்ப்பதற்கு தேவையான பணம் இல்லை. அந்த வாய்ப்பை பயன்படுத்தி, நாங்கள் கோழி குஞ்சு, தீவனம் ஆகியவற்றை கொடுத்து வளர்த்துக் கொடுக்க முடியுமா என்று விவசாயிகளிடம் கேட்டோம். கோழி வளர்த்து கொடுப்பதற்கு அவர்களுக்கு பணம் கொடுத்தோம். விவசாயிகளுக்கு எந்த விதமான ரிஸ்கும் இல்லை. நாங்களே கொடுத்து நாங்களே வாங்கிக் கொள்கிறோம். அப்படி வளர்ந்தது இன்று நாடு முழுவதும் விரிவடைந்துள்ளது. இப்போது இந்தியாவில் 70 சதவீதம் இந்த முறையில்தான் கோழி வளர்க்கப் படுகிறது.

இன்னும் கொஞ்சம் விரிவாகக் கூறமுடியுமா?

பண்ணையாளர்களுக்குத் தேவையான அனைத்தும் நாங்கள் முதலீடு செய்வோம். குஞ்சு, தீவனம், மருந்து ஆகியவற்றை நாங்கள் கொடுத்து விடுவோம். இடம், மனித உழைப்பு மற்றும் தண்ணீர் மட்டும்தான் விவசாயிகள் செய்ய வேண்டியது. 40 நாட்கள் வளர்ந்த பிறகு ஒரு கிலோ கோழிக்கு குறிப்பிட்ட தொகையைக் கொடுப் போம். இதில் விவசாயிகளுக்கு லாபமோ, நஷ்டமோ இல்லை.

லாபம் நஷ்டம் கிடையாது என்பது சரி தான். ஆனால் தொடர்ச்சியான இந்த வேலையில் பெரிய வருமான வளர்ச்சி விவசாயிகளுக்கு இருக்காதே?

ஒவ்வொரு வருடமும் பணவீக் கத்துக்கு ஏற்ப அந்த தொகையை உயர்த்தி வருகிறோம். சிறப்பாக வளர்த்துக் கொடுப்பவர்களுக்கு ஊக்கத்தொகை கொடுக்கிறோம். பெரும்பாலான விவசாயிகளால் 5 வருடங்களில் தங்களது கடனைத் திருப்பி செலுத்த முடிகிறது.

பிராய்லர் கோழி மீது அவ்வப்போது சந்தேகங்களும் தவறான தகவல் களும் வந்து கொண்டிருக்கிறதே?

நாட்டுக்கோழியில் இருந்து உருவானதுதானே பிராய்லர் கோழி வகைகள். நாட்டுக்கோழி மெதுவாக வளரக்கூடியது, கறிக்கோழி வேக மாக வளரக்கூடியது. நாட்டுக் கோழி இயற்கையான உணவு சாப்பிடுகிறது. ஆனால் சுத்தமான உணவு சாப்பிடுகிறது என்று சொல்லமுடியாது. ஆனால் பிராய்லர் கோழிக்கு தரமான உணவு கொடுப்பதால் வேகமாக வளர்கிறது. அடுத்து சிக்கன் என்றால் சூடு என்ற கருத்தும் இருக்கிறது. அது ஒரு தவறான கருத்து. நாங்கள் ஊசி போடுவது என்பது வளர்வதற்காக அல்ல, அது தடுப்பூசி.

கோழி வளர்ப்பில் மட்டும் கவனம் செலுத்தாமல் ஆடு, மாடு உள்ளிட்டவற்றையும் ஒப்பந்த முறையில் வளர்க்கலாமே?

ஆடு, மாடு வகைகள் தாவர உணவினை அதிகம் சாப்பிடும் விலங்குகள். அதனை நிறுவனம் செய்யமுடியாது. உலகத்தில் எங்கேயும் ஒப்பந்த முறையில் ஆடு, மாடுகள் வளர்ப்பதில்லை.

நீங்கள் கேஎப்சி உள்ளிட்ட நிறுவனங் களுக்கு சிக்கன் கொடுக்கிறீர்கள். நீங்களே அதுபோன்று தொடங் கினால் என்ன?

மிகச் சமீபத்தில்தான் பெங்க ளூருவில் சோதனை முயற்சியில் திறந்திருக்கிறோம். எங்களுடைய பிஸினஸ் மாடலும் அவர்களுடை யதும் வேறு. ஏசி போன்ற வசதிகள் இல்லாமல் குறைந்த விலையில் விற்பனை செய்கிறோம்.

சில வருடங்களுக்கு முன்பு ஐஎப்சி நிறுவனம் சுகுணாவில் முதலீடு(5%) செய்திருந்தது. ஆனால் அந்த முத லீட்டை நீங்கள் திரும்பவும் வாங்கி விட்டீர்கள். ஐபிஓ வெளியாகாமல் ஏன் நீங்களே திரும்பவும் வாங்கிக் கொண்டீர்கள். அதன் பிறகு வேறு எந்த நிறுவனமும் முதலீடு செய்ய வில்லையே?

எங்களுக்குத் தேவை இருக்கும் போது ஐஎப்சி நிறுவனத்தின் முதலீட்டை பெற்றோம். சில வருடங் களில் நிலைமை சரியானவுடன் முதலீட்டை திரும்பிக் கொடுத்து விட்டோம். இப்போதைக்கு பணத் தேவை இல்லை என்பதால் ஐபிஓ வரவில்லை. மேலும் தற்போது குடும்ப நிறுவனமாக இயங்கி வருகிறது. ஐபிஓ வர வாய்ப்பு இருந்தாலும் இப்போதைக்கு முடிவெடுக்கவில்லை.

இந்தத் தொழிலில் இருக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக நீங்கள் நினைப்பது என்ன?

நோய் ஒரு முக்கியமான அச்சுறுத்தல். ஆனால் இதுவரை கோழிப்பண்ணைகளில் நோய் (பறவைக் காய்ச்சல்) பெரிதாக வர வில்லை. அடுத்து அமெரிக்காவின் இறக்குமதி. இதற்கு இன்னும் அனுமதி கொடுக்கப்படவில்லை. ஒரு வேளை முழுக்கோழியையும் இறக்குமதி செய்ய அனுமதி கொடுக்கும் பட்சத்தில் அவர் களுடன் போட்டி போட முடியும். அவர்களுக்கும் நமக்கும் உற்பத்தி செலவு ஒன்றுதான். ஆனால் அவர் கள் இங்கு கொண்டு வர நினைப் பது கோழியின் கால்பகுதி (லெக் பீஸ்). அங்கு நெஞ்சு பகுதியை சாப்பிடுவார்கள். லெக் பீஸ் அவர் களுக்கு தேவை இல்லை. நெஞ்சு பகுதியை விட கால்பகுதி ஐந்து மடங்கு கொழுப்பு அதிகம் என்பதால் அவர்கள் விரும்புவதில்லை. அதனால் அங்கு 9 முதல் 10 வருட ஸ்டாக் இருக்கிறது. அதை ஆசிய நாடுகளில் விற்க நினைக்கிறார்கள்.

இப்போது பலர் சைவ உணவுக்கு மாறி வருகிறார்கள். அது உங்களுக்கு அச்சுறுத்தலாக இல்லையா?

இது ஒரு சுழற்சி. அது பெரிய பிரச்சினை இல்லை. வருடத்துக்கு 10 சதவீதம் நுகர்வு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. நாங்கள் இந்த தொழிலை ஆரம்பிக்கும் போது தனி நபர் நுகர்வு 500 கிராம். இப்போது 3.6 கிலோவாக இருக் கிறது. உலகளவில் ஒரு தனிநபர் சராசரியாக 12 கிலோ வரை சாப்பிடுகிறார். அமெரிக்காவில் 45 கிலோ. எங்களுக்கு இன்னும் வாய்ப்பு இருக்கிறது.

மற்ற மாநிலங்களில் பிஸினஸ் எப்படி இருக்கிறது?

மற்ற மாநிலங்களில் எங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. மாநில அரசுகள் எங்களை அழைக்கிறார் கள். மாநில அரசு, என்ஜிஓகள் செய்ய வேண்டிய வேலையை நாங்கள் செய்கிறோம் என்பதால் எங்களுக்கு வரவேற்பு இருக்கிறது.

இந்த ஒப்பந்த பண்ணைத் திட்ட முறை விவசாயத்தின் மற்ற பிரிவில் சாத்தியமா?

இந்திய விவசாயிகள்தான் அதிக ரிஸ்க் எடுக்கும் பிஸினஸ்மேன்கள். அவர்களுக்கு அதிக ரிஸ்க் இருக்கிறது. மழை வருமா, பயிர் வளருமா, சரியான விலை கிடைக்குமா என எதுவுமே விவசாயிகளுக்குத் தெரியாது. மேலும் அவர்களிடம் முதலீடு, காப்பீடு இல்லை. சந்தைப்படுத்தவும் முடியாது. இத்தனை பிரச்சினைகள் இருந்தும் அவர்கள் ரிஸ்க் எடுக்கிறார்கள். இந்த ஒப்பந்த முறை மூலம் அவர்களது ரிஸ்கினை குறைக்கும் பட்சத்தில் இன்னும் நிறையபேர் விவசாயத்தை நோக்கி வருவார்கள். காய்கறி, பூ உள்ளிட்ட பெரும்பாலான விவசாய முறைகளில் ஒப்பந்த முறையை கொண்டுவர முடியும்.

karthikeyan.v@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x