

தொழில்துறை வளர்ச்சிக்கு ரிசர்வ் வங்கி தற்போது அறிவித்துள்ள கால் சதவீத வட்டிக் குறைப்பு போதுமானதாக இருக்காது என்று தொழில்துறையினர் கருத்து தெரிவித்துள்ளனர். கால் சதவீத வட்டிக் குறைப்பை வரவேற்றுள்ள அவர்கள் இது தொழில்துறை வளர்ச்சிக்கு உதவாது என்று குறிப்பிட்டுள்ளனர்.
அரை சதவீதம் வட்டியைக் குறைத்திருக்க வேண்டும். அத்துடன் வங்கிகளின் நிதி நிலை இருப்பை (சிஆர்ஆர்) விகிதத்தை குறைத்திருப்பதன் மூலம் கூடுதல் நிதி புழக்கத்துக்கு வரும். ஆனால் அதை ரிசர்வ் வங்கி தனது நிதிக் கொள்கையில் மேற்கொள்ளவில்லை என்று அசோசேம் தலைவர் ராணா கபூர் தெரிவித்தார்.
கால் சதவீதம் என்பது மிகவும் குறைவான அளவு. அதுவும் மிகவும் காலம் தாழ்ந்து மேற்கொள்ளப்பட்டுள்ளது.தொழில்துறையில் மிக மோசமான சரிவு நிலை காணப் படும்போது அதை முடுக்கிவிடும் விதமாக வட்டிக்குறைப்பு இருந் திருக்க வேண்டும். ஆனால் அதை செய்யவில்லை என்று பஞ்சாப், ஹரியாணா, டெல்லி தொழில் சங்கங்களின் தலைவர் அலோக் பி ஸ்ரீராம் குறிப்பிட்டுள்ளார்.
ரெபோ வட்டி விகிதம் 6 சதவீதத்துக்கு மேல் இருக்கக் கூடாது. அப்போதுதான் தேவை அதிகரித்து தொழில்துறை வளர்ச்சியடையும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார். அரை சதவீத அளவுக்கு வட்டிக் குறைப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் குறைக்கவில்லை. அரசும், ஆர்பிஐ-யும் இணைந்து அதிகபட்ச வளர்ச்சிக்கு வேறு ஏதேனும் வழி தேடுகிறார்களா என தோன்றுகிறது என்று இந்திய தொழிலகக் கூட்டமைப்பின் (சிஐஐ) இயக்குநர் ஜெனரல் சந்திரஜித் பானர்ஜி தெரிவித்துள்ளார்.
ஒருங்கிணைந்த நிதிக் கொள்கை மூலம் நுகர்வு அதிகரிக்கும். அத்துடன் முதலீட்டு சூழலும் உருவாகும் என்பதை உறுதியாக நம்புவதாக அவர் மேலும் கூறினார். தற்போது ரெபோ விகிதம் 7.50 சதவீதத்திலிருந்து 7.25 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
சிஆர்ஆர் விகிதத்தில் எவ்வித மாறுதலும் செய்யாமல் 4 சதவீதமே தொடர்கிறது. எஸ்எல்ஆர் விகிதம் 21.5 சதவீதம் என்ற நிலையில் நீடிப்பதையும் பானர்ஜி சுட்டிக் காட்டினார். ரிசர்வ் வங்கியின் வட்டிக் குறைப்பு நடவடிக்கையின் பலனை வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு உடனடியாக அளிக்க வேண்டும் என்று பெரும்பாலான தொழில் கூட்டமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.