

வரி செலுத்தவில்லை என்றால் சிறை தண்டனை கிடைக்கும், சுதந்திரம் பறிபோகும், சமூகத்தில் அவப்பெயர் கிடைக்கும் என்ற அச்சத்தை வரி ஏய்ப்பவர்களிடம் ஏற்படுத்த வேண்டும். அப்போது தான் கருப்புப் பணத்தை தடுக்க முடியும் என மத்திய நேரடி வரி ஆணையம் (சிபிடிடீ) தெரிவித்துள்ளது.
வருமான வரித்துறை உயர திகாரிகள் பங்கேற்ற மாநாடு அண்மையில் நடைபெற்றது. அப்போது வரி ஏய்ப்புகளை தடுப்பதற்கு உத்திப்பூர்வ நடவடிக் கைகளை மேற்கொள்ள மத்திய நேரடி வரி ஆணையம் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியது.
2015-16-ம் ஆண்டுக்கான அறிக்கையை மத்திய நேரடி வரி ஆணையம் தாக்கல் செய்தது. அதில் குறிப்பிட்டுள்ளதாவது:
வரி ஏய்ப்பவர்களிடம் அச்சத்தை ஏற்படுத்துவது தற்போதைய நிலையில் மிக அவசியமானது. வரி ஏய்ப்பு தொடர்பாக, கால தாமதம் செய்யாமல் வலுவான வழக்கு களை அதிக அளவு பதிவு செய்ய வேண்டும். மேல்முறை யீட்டு நடவடிக்கைகளுக்காக காத்திருக்கக் கூடாது.
தொடர்ந்து நடைபெற்று வரும் கட்டற்ற வரி ஏய்ப்பு தடுத்து நிறுத்தப்பட வேண்டும். சில குறிப்பிட்ட வரி ஏய்ப்பவர்களைத் தேடிக் கண்டறிந்து அவர்களை வரி கட்ட வைப்பது தீர்வாக அமையாது. கடுமையான தண்டனை என்ற அச்சம் ஏற்பட்டால், வரி ஏய்ப்பவர்கள் விதிமுறையை மீறுவதிலிருந்து விலகி நிற்பார்கள்.
மறைக்கப்பட்ட வருமானத்தின் மீது வரி விதிப்பதால் மட்டும் அச்சத்தை ஏற்படுத்தி விட முடியாது. வரி செலுத்தவில்லை என்றால் சிறை தண்டனை கிடைக்கும், சுதந்திரம் பறிபோகும், சமூகத்தில் அவப்பெயர் ஏற்படும் என்பன போன்ற எண்ணங்களே வரி ஏய்ப்பவர்களின் மனதில் அச்சத்தை ஏற்படுத்தும். இந்த வகையான அச்சமே, வரி ஏய்ப்பைத் தடுப்பதற்கான தீர்வாக இருக்கும்.
வழக்கு விசாரணையும் அபராதமும் கட்டாயம் வேண்டும். அதுதான் வெற்றியைத் தரும். மறைக்கப்பட்ட வருமானத்தின் மீது வரி விதிப்பது என்பது பெயரளவு நடவடிக்கையாகவே இருக்க வேண்டும்.
இதுபோன்ற நடவடிக்கைகள் கருப்புப் பண உருவாக்கத்தைத் தடுக்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“கடந்த 2013-ம் ஆண்டு மத்திய தணிக்கைத் துறையின் அறிக்கையில், ‘அபராத நடவடிக்கை மற்றும் வழக்கு களில் அதீத தொய்வு இருக்கிறது. இப்பிரச்சினையில் வருமான வரித்துறை உடனடி கவனம் செலுத்த வேண்டும்’ என சுட்டிக்காட்டப்பட்டதை மனதில் கொண்டே இந்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக சிபிடிடீ உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.