

இந்திய பங்குச் சந்தை வர்த்தகத்தில் நேற்று கடும் சரிவு ஏற்பட்டது. முக்கிய பங்குச் சந்தையான மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்குச் சந்தையான நிப்டியும் 2 சதவீதத்துக்குமேல் சரிந்தன. நேற்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 660 புள்ளிகள் சரிந்து 27188 புள்ளி களில் முடிந்தது. தேசிய பங்குச் சந்தையான நிப்டி 196 புள்ளிகள் சரிந்து 8236 புள்ளிகளில் முடிந்தது.
நேற்று காலை ரிசர்வ் வங்கி தனது நிதிக் கொள் கையை அறிவித்தது. இதில் முதலீட்டாளர்கள் எதிர் பார்ப்புக்கு ஏற்ப ரிசர்வ் வங்கியிடமிருந்து சாதகமான அறிவிப்புகள் இல்லாததால் வர்த்தகத்திலும் எதிரொலித்தது. 2016 ஜனவரிக்குள் பணவீக்க விகிதத்தை 6 சதவீதமாக கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி முயற்சித்து வருகிறது.
ஆனால் பருவ மழை குறையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால் பணவீக்க விகிதத்தில் மாற்றங்கள் நிகழும் என சந்தை அச்சமடைந்துள்ளது. வருகிற பருவமழை காலத்தில் வழக்கமான மழை அளவைக் காட்டிலும் மழைப் பொழிவு பற்றாக்குறை அளவாக இருக்கும் என இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.
93 சதவீத மழை அளவிலிருந்து 88 சதவீத மழை பொழிவுதான் இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் வடக்கு மற்றும் மேற்கு மாநிலங்களான டெல்லி, ஹரியானா, ராஜஸ்தான் மாநிலங்கள் பாதிக்கப்படும் என மத்திய அறிவியல் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கூறியுள்ளார். இதன் காரணமாக வறட்சி மற்றும் பற்றாக்குறைக்கு வாய்ப்பு ள்ளது என்று சந்தை அச்சமடைந்துள்ளதும் சரிவுக்கு காரணமாக அமைந்தது.
சர்வதேச சந்தைகளும் இறக்கமான வர்த்தக நிலைமையிலேயே உள்ளன. ஐரோப்பிய சந்தை நிலைமை களை முதலீட்டாளர்கள் கவனித்து வருகின்றனர். அமெரிக்காவின் நாஸ்டாக், ஐரோப்பாவின் எப்டிஎஸ்இ, மற்றும் ஆசிய சந்தைகளும் இறக்கத்தில் உள்ளது. இதுவும் இந்திய வர்த்தகத்தில் எதிரொலித்தது.
நேற்றைய வர்த்தகத்தில் அனைத்து துறை பங்குகளும் சரிவை கண்டிருந்தன. குறிப்பாக வங்கித்துறை பங்குகள் அதிக சரிவைக் கண்டிருந்தன. பேங்க் நிப்டி 3.4 சதவீதம் வரை சரிந்தது. எஸ்பிஐ, ஆக்ஸிஸ் வங்கி மற்றும் ஐசிஐசிஐ வங்கி பங்குகள் 4 சதவீத சரிவைக் கண்டன. ஹெச்டிஎப்சி பங்குகள் 2.7 சதவீத இறக்கத்தைக் கண்டிருந்தது.
ஐடிசி நிறுவனப் பங்குகள் 4 சதவீத இறக்கத்தைக் கண்டது. மகாராஷ்டிரா அரசு சிகரெட் சில்லரை விற்பனையை தடை செய்துள்ளதால் இந்த நிறுவனத்தின் பங்குகள் சரிந்துள்ளன. மும்பை பங்குச் சந்தையில் நேற்று 1875 பங்குகள் இறக்கத்தைக் கண்டன. சந்தையின் சரிவான சூழலிலும் ஜீ எண்டெர்டெயின்மென்ட் பங்குகள் 2.25 சதவீதம் ஏற்றம் கண்டது குறிப்பிடத்தக்கது.