Published : 05 Jun 2015 10:39 AM
Last Updated : 05 Jun 2015 10:39 AM

ஆன்லைனில் ஆர்டர் செய்தால் வீட்டுக்கு புல்லட் வரும்!

ஐஷர் நிறுவனத்தின் ராயல் என்ஃபீல்ட் ஒரு புதிய முயற்சிக்கு பிள்ளையார் சுழி போட்டு தொடங்கியுள்ளது. அதாவது, கிளாசிக் 500 மாடல் பைக்குகள் 600-ஐ ஆன்லைன் மூலம் விற்பனை செய்யவுள்ளது.

ஐஷர் நிறுவனத்தின் ராயல் என்ஃபீல்ட் (புல்லட்) மீதான மோகம் எந்த காலத்திலும் மாறாது. 1970-களில் ஒருவர் புல்லட் ஓட்டுகிறார் என்றால், அவருக்கு வயது 70 ஆக இருந்தாலும் அவர் ஹீரோவாகவே பார்க்கப்படுவார். அப்போதிருந்த அதே கிரேஸ் இன்றும் மாற வில்லை. பண்ணையார்கள், போலீஸ்காரர்கள், ராணுவ வீரர்கள் என்று ஜம்பமான மனிதர்கள் மட்டுமே பயன்படுத்திய புல்லட், இப்போது எல்லோருக்குமானதாக ஆகியுள்ளது. உலக யுத்தத்தில் பயன்படுத்தப்பட்ட வண்டி இன்று ஞாயிற்றுக்கிழமை சந்தைக்கு செல்லவும் பயன்படுகிறது.

ஸ்போர்டி மாடல், ரேஸ் பைக் என்று டிசைன்களும், தொழில்நுட்பங்களும் நாளுக்கு நாள் புதிது புதிதாக புறப்பட்டு வந்தாலும், புல்லட் தனது இடத்தை விட்டுவிடவில்லை. பிற மோட்டார் சைக்கிள்களுக்கு இணையாக சாலைகளில் புல்லட்டை பார்க்க முடிகிறது.

கல்லூரி மாணவர்கள், அலுவ லகம் செல்பவர்கள், நெடுந்தூரம் செல்லும் பயணப்பிரியர்கள் என அனைத்துத் தரப்பினருக்கும் விருப்பமான வண்டி புல்லட். புல்லட் தன்னை காலத்துக்கேற்ப மாற்றிக்கொண்டதுதான், இந்த வளர்ச்சிக்கும் நிலை நிறுத்திக்கொள்ளுதலுக்கும் முக்கிய காரணம். இந்த மாற்றம் என்பது வண்டியின் அமைப்பிலும், தொழில்நுட்பரீதியிலும் இல்லாமல் சந்தை அணுகுமுறையிலும் உள்ளது. இந்த மாற்றத்தின் நீட்சிதான் புல்லட்டுக்கான ஆன்லைன் முன் பதிவு. பொது வாக விற்பனையகம் சென்று புல்லட்டை வாங்க வேண்டு மென்றால், குறைந்தது 3 மாதம் காத்திருக்க வேண்டும். நாம் விரும்புகிற மாடல், நமக்கு பிடித்தமான நிறம், நமக்கு வேண்டியதொரு தருணத்தில் கிடைக்காது. புல்லட் மீது கொண் டிருக்கிற அத்தனை காதலும் இப்படி போராடி பெறும்போது காற்றில் போய் விடும்.

இந்த பிரச்சினைக்கு ஒரு குறைந்த கால தீர்வை முன் வைக்கும் திட்டம்தான் ஆன்லைன் முன்பதிவு. புல்லட்டை வாங்க store.royalenfield.com என்னும் இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம். இப்படி முன்பதிவு செய்யும் போது, வழக்கமாக ஷோ ரூம்களில் கிடைக்கும் நிறங்களைத் தாண்டி ஊதா, ராணுவ பச்சை மற்றும் காக்கி என மூன்று வெவ்வேறு நிறங்களில் புல்லட்டை வாங்கலாம். இந்த முன்பதிவு வரும் ஜுலை 15-ம் தேதி முதல் தொடங்குகிறது. முன்பதிவு செய்த இரண்டு மூன்று தினங்களில் புல்லட் வீடு தேடி வந்து விடும்.

இதில் ஒரேயொரு குறைபாடும் உள்ளது. நிறத்துக்கு 200 வண்டிகள் என 3 நிறத்துக்கும் சேர்த்தே 600 வண்டிகள் மட்டும்தான் ஆன் லைனில் விற்கப்படவுள்ளன. மேலும், ஆன்லைன் முன்பதிவில் கிளாசிக் 500 மாடல் மட்டுமே விற்பனை செய்யப்படவுள்ளது.

ராயல் என்ஃபீல்டின் ஆன்லைன் முன்பதிவு முறை ஒரு விதமான, வர்த்தக உத்தி என்றாலும், புல்லட் தனது ஆரம்ப காலத்தை நினைவு கூறவே இப்படி செய்கிறதாம். அதாவது மேலே சொன்னது போல், உலக போரில் போர் வீரர்கள் பலர் புல்லட்டைதான் பயன்படுத்தினார்கள். எனவே, அவர்களை நினைவுகூறும் வகையில் இரண்டாம் உலகப் போரின் போது புல்லட் எப்படி இருந்ததோ அதே தோற்றத்தில் நவீன தொழில்நுட்பங்களையும் புகுத்தி விற்பனைக்கு கொண்டு வந்துள்ளார்களாம்.

புல்லட் வண்டியை ஆன் லைனில் விற்பது மட்டுமன்றி, அந்த காலத்தில் போர் வீரர்கள் பயன்படுத்தியதை போன்ற முழங்கால் கவசம், தோல் கவசம், ஷூக்கள், கியர் மாடல் என 10-க்கும் மேலான அந்தக்கால உபரி பாகங்களும் ஆன்லைனில் விற்பனைக்கு உள்ளன.

உலகப்போரின் ராணுவ வீரர்கள் தத்தமது நாடுகளின் தலைமையிடத்துக்கும் போர் அரங்கேறுகிற ரகசிய பகுதிக்கும் செல்ல சில குறிப்புகள், பாதுகாப்பு அம்சங்கள் போன்றவற்றை வைத்திருப்பார்கள். கடும் வெயில், ஆளையே உறைத்துவிடுகிற குளிர் என்ற இக்கட்டான சூழலில் புல்லட் மட்டுமே உற்ற தோழனாய் அவர்களுடன் இருந்தது.

அந்தப் போர் வீரர்களை கவுரவிக்கும் விதத்தில் தான் இந்த புதிய முயற்சியாம். இதற்கு முன்பு ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனம் ஆன்லைன் மூலம் சுமார் 1 லட்சம் வண்டிகளை விற்பனை செய்து, ரூ.500 கோடி லாபம் ஈட்டியிருந்தது குறிப்பிடத் தக்கது.

ஆன்லைன் முன்பதிவு குறித்து ஐஷர் நிறுவனத்தின் தலைமை இயக்க அதிகாரி சித்தார்த் லால் கூறும்போது, “இந்திய இரு சக்கர வாகன உலகில் ராயல் என்ஃபீல்டு கடந்த 60 ஆண்டுகளில் முக்கியமான தாக் கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சூழலில் ஆன்லைன் முன்பதிவு முறையை அறிமுகப் படுத்தியுள்ளோம். ஆன்லைனில் விற்கப்படவுள்ள புல்லட் வண்டி கள் பிரத்யேகமானவை ஆகும். அதன் வடிவம், தோற்றம், உள்ளிட்ட அனைத்தும் புதுமை யானது. மேலும் கைவினை வேலைபாடுகளும் இடம்பெற் றுள்ளன.

புல்லட்டில் நெடுந்தூரம் பயணிக்க விரும்புபவர்கள் பலர், வண்டியைத் தாண்டி பயணத்துக்கு தேவையான உப சாதனங்கள் கிடைக்காமல் தவித்தனர்.

அவற்றை போக்க பிற பொருள்களையும் ஆன்லைனில் விற்பனைக்கு வைத்துள்ளோம். இந்தியாவில் மட்டுமின்றி உலகளவில் எங்களது 50 சந்தைகளில் ஆன்லைன் முறை பயன் பாட்டுக்கு வரவுள்ளது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x