

நாம் செய்யும் சொதப்பல்கள் அனைத்திற்கும் நமக்கு காரணம் தெளிவாக தெரிகிறது, நடந்து முடிந்த பிறகு!
பலவற்றை மீண்டும் மீண்டும் செய்கிறோம். நிறைய சால்ஜாப்பு சொல்கிறோம். அடிப்படையில் நமக்கு எல்லாமே தெரியும் என்றும், நிலை கட்டுக்குள் இருப்பதாகவும் பாவ்லா காட்டுகிறோம். எல்லாவற்றுக்கும் மூல காரணம் சிந்தனை சார்ந்தே இருக்கிறது. அதுவும் தெரிகிறது. அல்லது தெரிந்தது போல தோன்றுகிறது.
The Art of Thinking Clearly என்ற புத்தகம் என்னை இழுத்ததற்கு காரணம் தலைப்பில் கலை என்னும் வார்த்தை. சிந்தனையைப் பற்றி சிந்திப்பது இன்று Cognitive Psychology. ஆனால் ஒரு நாவலாசிரியர் எழுதிய புத்தகம் என்பதால் வேறு பரிமாணத்தை எதிர்பார்த்தேன். ஆசிரியர் ஏமாற்றவில்லை.
ரால்ஃப் டொபெல்லி என்னும் அவ்வள வாகப் பரிச்சயமில்லாத எழுத்தாளரின் புத்தகத்தை வாங்கக் காரணம் எனக்குப் பரிச்சயமான நிக்கோலஸ் நஸீம் தலெப் அட்டையில் பரிந்துரை செய்து எழுதிய வாசகம் தான். தலெப் எழுதிய கருப்பு அன்னம் பற்றி பிறகொரு வாரத்தில் விரிவாக விவாதிக்கலாம்.
10 லட்சத்துக்கும் அதிகமான பிரதிகள் விற்று ஐரோப்பாவையே கலக்கிக் கொண்டிருக்கிறது இந்தப் புத்தகம். சுவிட்ஸர்லாந்தைச் சேர்ந்த டொபெல்லியின் மூல வடிவத்தை நிக்கி க்ரிஃப்ஃபின் என்பவர் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருக்கிறார். அழகான மொழி. அற்புதமான கோர்வை.
99 சிந்தனைப் பிறழ்வுகளை 99 குட்டி அத்தியாயங்களில் அனாயசமாக கையாள்கிறார். அனைத்தும் நாம் அன்றாடம் செய்பவை என்பதால் சிரிக்காமல் படிக்க முடியவில்லை.
நாம் எடுக்கின்ற முடிவுகள் எல்லாம் தர்க்க ரீதியில் குறைபட்டிருக்க என்ன காரணம் என்று புட்டு புட்டு வைக்கிறார். அனைத்திற்கும் வசீகரமான பெயர்களில் கருத்தாக்கம் செய்திருக்கிறார்.
நாம் நம்மைச் சுற்றி நடக்கும் விஷயங்களை நமக்கு சவுகரியமாக புரிந்து கொள்கிறோம்.
கரீனா கபூர் ஒரு முகப்பூச்சு விளம்பரத்தில் வந்தால், நாம் அந்த முகப்பூச்சை தடவினால் கரீனா கபூர் போல ஆகிவிடுவோம் என்று நம்புகிறோம். கரீனா கபூர் போன்ற ஏற்கனவே சிகப்பான அழகான நடிகைகள் தான் இந்த விளம்பரங்களுக்கு தேர்வு செய்யப்படுகிறார்கள் என்பதை யோசிப்பதில்லை. ஹார்வர்டில் படித்தால் அறிவாளியாக ஆகலாம் என்பது தவறு என்கிறார் ஆசிரியர். அறிவாளிகளை மட்டும் தான் ஹார்வர்ட் தேர்வு செய்கிறது என்பதைக் கவனியுங்கள் என்கிறார்.
நடிக்க ஆசைப்படுபவர்களில் லட்சத்திற்கு ஒருவருக்குத் தான் வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால் வெற்றி அடைந்தவர்கள் பற்றியே பேசி இது சுலபம் என நம்பிக்கொள்கிறோம் என்கிறார். காரணம் ஜெயித்தவர்கள் கதை தான் இங்கு பேசப்பிடிக்கும். தோல்விக் கதைகள் கூட வெற்றி அடைந்தவர்களின் ஆரம்ப கால தோல்விக் கதைகளாகத்தான் இருக்கும். உண்மையான தோல்விக் கதைகள் யாருக்கும் தெரியாது.
எல்லாவற்றையும் கதைப்படுத்த நினைப்பதால் சில நேரங்களில் தர்க்க சிந்தனை முழுக்க மழுங்கி விடுகிறது என்கிறார். இரண்டு கதைகள். எது மனதில் நிற்கிறது என்று நீங்களே சொல்லுங்கள்: அ) அவன் இறந்தான். அவள் இறந்தாள். ஆ) அவன் இறந்தான், மனம் உடைந்து அவளும் இறந்தாள்.
இரண்டாம் கதை மனதில் நிற்பதற்கு காரணம் அதில் உள்ள கதை அம்சம். நாம் பல செய்திகளை இப்படி கதைகள் ஆக்கி தீவிர சிந்தனையைப் போக்கடிக்கிறோம்.
அதே போல அறிவாளிகளுக்கும் அறிவாளிகள் போல நடிப்பவர்களுக்கும் வேறுபாடு தெரியாமல் பல தவறான நபர்களின் அறிவுரை கேட்கிறோம். தொலைக்காட்சி செய்தி சேனல்களில் நிகழ்ச்சி நடத்துபவர்களையும், பல பிரபலங்களைப் பேட்டி காண்பவர்களையும், பேச்சு நிகழ்ச்சி நடத்துபவர்களையும் அறிவு ஜீவிகளாய் சமூகம் சுலபமாக ஏற்றுக் கொள்ளும். நிஜ அறிவு ஜீவுகளுக்கு கூட கிடைக்காத வெளிச்சம் கிடைக்கும். இதனால் தான் பல நேரங்களில் தவறான ஆலோசனை கேட்கப்படுகிறது.
படம் சரியில்லை. அரை மணி நேரத்தில் கணவன் எழுந்து போகலாமா என்றால் மனைவி சொல்கிறாள்: “300 ரூபா குடுத்து வத்திருக்கோம். பாத்துட்டு போலாம்!” இடைவெளியில் கூடுதல் செலவும், நேர விரயமும், தலைவலியும் வர இந்த, ‘ஆரம்பிச்சாச்சு..அப்படியே முடிச்சுக்கலாம்!” என்கிற மனநிலை தான்!
‘பெரும்பான்மை சொன்னால் சரியாகத் தான் இருக்கும்’ என்பது இன்னொரு பிறழ்வு என்கிறார். படம் ஹவுஸ் ஃபுல் என்றால் நம்பிக்கையுடன் பிளாக்கில் டிக்கெட் வாங்குகிறோம். அந்த கோயிலுக்கு ரொம்ப சக்தி என்று ஜனம் கூடினால் நாமும் ‘திடீர்’ பக்தி கொள்கிறோம். இவ்வளவு பேரும் முட்டாளா என்ன? அதனால் தான் டாப் 10 என எல்லா தொழில்களிலும் போலி வரிசைகள் போட்டு ஏமாற்றுகிறார்கள்.
எதையும் கொஞ்சம் சேர்த்து சொல்லும் குணம் இயல்பாக மனித மனதுக்கு உண்டு. எரிச்சலாய் ஒருவரிடம் சிணுங்கிவிட்டு வீட்டு வந்து சொல்வார்: “விட்டேன் பார் டோஸ்..மனுஷன் ஆடிப்போயிட்டான்! அந்த பயம் வேணும்.” தங்கள் திறமைகளையும் நற்குணங்களையும் அதிகமாக மதிப்பீடு செய்யும் தன்மை பெண்களை விட ஆண்களுக்கு அதிகமாம்! இதுதான் ரிஸ்க் எடுப்பது எங்களுக்கு ரஸ்க் சாப்பிடுவது போல என்று சொல்ல வைக்கிறதோ?
தலைமையும் அதிகாரமும் தவறு இழைக்கச் சொன்னால் அதை அப்படியே செய்கிற பெரும்பான்மையினரின் மனப்போக்கை நிரூபிக்கும் மில்கிராம் ஆய்வு சமூக மனதின் பிரதிபலிப்பு. நல்ல மனிதன் ஏன் கூட்டத்தில் எதையும் செய்யத் தயாராகிறான் எனப் புரிய வைக்கிறது.
பங்குச் சந்தையோ, தேர்தலோ, முதலீடுகளோ, ஏலமோ, தொழிலோ எல்லா பண்டித யூகங்களும் பெரும்பாலும் பொய்ப்பது ஏன் என்று நக்கலடிக்கிறார். நிர்வாகம், சமூகம், உளவியல், தனி நபர் வளர்ச்சி என எல்லா காரணங் களுக்காகவும் இதை படிக்கலாம். நம் எண்ணப் பிழைகள் காரணமாக எடுக்கும் தவறான முடிவுகள் பல தவிர்க்ககூடியவை. நம் வாழ்க்கையை மீட்கக் கூடியவை.
“சிந்தித்துப் பார்த்து செய்கையை மாத்து
சிறுசா இருக்கையில் திருத்திக்கோ- தவறு
சிறுசா இருக்கையில் திருத்திக்கோ!”
பட்டுக்கோட்டையார் சொல்வதைப் போல குழந்தைகளுக்கு சொல்லணும் இவற்றையெல்லாம்! ஏன் இந்தப் புத்தகத்தை பாடத்திட்டத்தில் சேர்க்கக் கூடாது?
gemba.karthikeyan@gmail.com