

மேகி நூடுல்ஸை நாடு முழுவதும் திரும்ப பெற்று அவற்றை அழிக்க திட்டமிட்டுள்ளது நெஸ்லே நிறுவனம். அப்படி திரும்ப பெற்றப்பட்ட நூடுல்ஸ்ஸின் மதிப்பு ரூ. 210 கோடியாகும். மேலும் நூடுல்ஸுடன் அதன் துணைப் பொருட்களையும் அழிக்கத் திட்டமிட்டுள்ளது. அவற்றின் மதிப்பு ரூ.110 கோடி. பங்குச் சந்தைக்கு அனுப்பியுள்ள விவரத்தில் நெஸ்லே நிறுவனம் இதைக் குறிப்பிட்டுள்ளது.
மேலும் இது நிறுவனத்தின் தோராயமான மதிப்பு என்றும் அனைத்து இடங்களிலிலிருந்து திரும்ப பெற்று வருவதால் இறுதி மதிப்பைக் கணக்கிடுவது சாத்திய மில்லை என்றும் கூறியுள்ளது.
திரும்பப் பெறுவதற்கு ஆகும் செலவுகளையும் இந்த கணக்கில் சேர்க்க வேண்டும். குறிப்பாக சந்தையிலிருந்து திரும்ப பெற்று அழிப்பதற்காக பல்வேறு இடங்களுக்கு கொண்டு செல்வதற்கு ஆகும் போக்கு வரத்து செலவுகள் மற்றும் அழிப் பதற்கான செலவு களும் உள்ளன. இதனால் இறுதியான தொகையை பின்னர் அறிவிக்கிறோம் என்று அறிவித்துள்ளது.
திரும்ப பெறுவதற்கான இந்த செலவுகள் மற்றும் திட்டமிடாத செலவுகளையும் சேர்த்து நிதிநிலை முடிவுகள் அறிவிக்கும் நேரத்தில் வெளியிட உள்ளது.
உணவுப் பாதுகாப்பு ஆணையம் மேகி நூடுல்ஸை ஆய்வு செய்ததில், அதில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட ரசாயன பொருட்கள் இருந்ததால் தடை விதித்தது. அதை நிராகரித்த நெஸ்லே மும்பை உயர்நீதிமன்றத்தில் தடையை எதிர்த்து வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் தடையை ரத்து செய்யாத நீதிமன்றம் உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த வழக்கு மீண்டும் ஜூன் 30 ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளது.
நெஸ்லே நிறுவனம் இந்திய சந்தையிலிருந்து 9 மேகி வகைகளை திரும்ப பெற்றுள்ளது.