Last Updated : 02 Jun, 2015 11:33 AM

 

Published : 02 Jun 2015 11:33 AM
Last Updated : 02 Jun 2015 11:33 AM

விமான எரிபொருள் விலை 7.5% அதிகரிப்பு: மானியம் அல்லாத சிலிண்டர் ரூ. 10.50 உயர்வு

விமானங்களுக்குப் பயன்படுத் தப்படும் எரிபொருளான ஏடிஎப் விலை நேற்று 7.5 சதவீதம் உயர்த்தப்பட்டது. இதேபோல மானியம் அல்லாத சமையல் எரிவாயு சிலிண்டர் (எல்பிஜி) விலை ரூ. 10.50 உயர்த்தப்பட்டுள்ளது. டெல்லியில் ஒரு கிலோ லிட்டர் (1,000 லிட்டர்) விமான எரிபொருள் விலை ரூ. 3,744 உயர்த்தப்பட்டு ரூ. 53,353.92 என்ற விலையில் விற்பனை செய்யப்படுவதாக எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித் துள்ளன.

மே 1-ம் தேதி ஏடிஎப் விலை ஒரு கிலோ லிட்டருக்கு ரூ. 272 உயர்த்தப்பட்டு ரூ. 49,609.84 என்ற விலையில் விற்பனையானது.

சர்வதேச அளவில் சந்தை நிலவரத்துக்கேற்ப மானியம் அல்லாத விலையில் வழங்கப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை சிலிண்டருக்கு ரூ. 10.50 உயர்த்தப்பட்டு ரூ. 626.50 என்ற விலையில் விற்பனையானது. கடந்த ஞாயிறன்று ஒரு சிலிண்டர் டெல்லியில் ரூ. 616 என்ற விலைக்கு விற்பனை செய்யப்பட்டது.

கடந்த மே 1-ம் தேதி சிலிண்டருக்கு ரூ. 5 குறைக்கப் பட்டது. சமையல் எரிவாயு உபயோகிப்பவர்கள் ஆண்டுக்கு 12 சிலிண்டர்களை மானிய விலையில் பெற முடியும்.

அதற்குப் பிறகு கூடுதலாக உபயோகிக்கும் சிலிண்டர்களை பொது விலையில் வாங்க வேண்டும். இதேபோல 5 கிலோ சிலிண்டர்களை உபயோகிப்பவர்களுக்கு 34 சிலிண்டர்கள் மானிய விலையில் வழங்கப்படுகிறது. மானிய விலையில் 14.2 கிலோ எடை கொண்ட சிலிண்டரின் விலை ரூ. 417 ஆகும். 5 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை ரூ. 155 ஆகும்.

மானியம் அல்லாத சிலிண்டர் விலை (14.2 கிலோ) ரூ. 626.50 ஆகவும், 5 கிலோ சிலிண்டர் விலை ரூ. 318.50 என்ற விலையிலும் விற்பனை செய்யப்படும். இதேபோல வர்த்தக நிறுவ னங்கள் உபயோகிக்கும் 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை ரூ. 1,134-லிருந்து ரூ. 1,151 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. சிலிண்டர் விலை மாநிலங்கள் விதிக்கும் வாட் வரிவிதிப்புக்கேற்ப மாறுபடும்.

விமானங்களின் செயல்பாடு களில் எரிபொருள் செலவு 40 சதவீத அளவுக்கு உள்ளது. ஏடிஎப் விலை குறைக்கப்பட்டால் அது நிதி நெருக்கடியில் தவிக்கும் விமான நிறுவனங்களுக்கு உதவியாக இருக்கும். விமான எரிபொருள் விலை உயர்த்தப்பட்ட போதிலும் பயணிகள் கட்டண உயர்வு குறித்து எந்தஒரு விமான நிறுவனமும் அறிவிப்பு வெளியிடவில்லை.

விமான எரிபொருள் மற்றும் மானியம் அல்லாத சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மாதம் முதல் தேதியில் சர்வதேச சந்தை நிலவரத்துக்கேற்ப மாற்றியமைக்கப்படுகிறது. அதேபோல பெட்ரோல், டீசல் விலைகள் 15 நாள்களுக்கு ஒரு முறை மாற்றியமைக்கப் படுகிறது.

.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x