தங்கம் கடத்தல் 5 மடங்கு அதிகரிப்பு

தங்கம் கடத்தல் 5 மடங்கு அதிகரிப்பு
Updated on
1 min read

இதுவரை இல்லாத அளவுக்கு 2014-15ம் ஆண்டு தங்க கடத்தல் அதிகரித்திருக்கிறது. 2012-13ம் நிதி ஆண்டுடன் ஒப்பிடும்போது 2014-15ம் நிதி ஆண்டில் தங்க கடத்தல் ஐந்து மடங்கு அதிகரித்திருக்கிறது. தங்க இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்திய பின்பும் கடத்தல் அதிகரித்துள்ளது குறிப்பிடத் தக்கது.

2014-15ம் நிதி ஆண்டில் 4,400 தங்க கடத்தல் வழக்குகள் இந்தியாவில் பதிவு செய்யப் பட்டுள்ளன. இந்த வழக்குகளில் 4,480 கிலோ தங்கம் பிடிப் பட்டுள்ளது. இவற்றின் மதிப்பு ரூ.1,120 கோடியாகும். கடந்த நிதி ஆண்டில் 252 நபர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

ஆனால் 2012-13ம் நிதி ஆண்டில் 870 வழக்குகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டன. 400 கிலோ மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது என்று வருவாய் புலனாய்வு துறையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

2013-14ம் ஆண்டில் 2,700 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதன்மூலம் 2,760 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

நடப்பு நிதிஆண்டில் இதுவரை 1.69 லட்சம் கிலோ தங்கம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.இதன் மதிப்பு ரூ.38,608 கோடியாகும். தங்கத்தின் தேவை உயர்ந்து வருவது இறக்குமதியை அதிகரிக்க செய்யும் என்று வருவாய்வு புலனாய்வு துறையின் உயரதிகாரி தெரிவித்தார்.

தேவை அதிகமாக இருப்பதால் தங்கம் கடத்துவது அதிகரித்து வருகிறது.

தங்கம் கடத்துவதில் அதிக லாபம் இருப்பதாலும் தங்கம் கடத்துவது அதிகரித்து வருகிறது. ஒரு கிலோ தங்கத்தை கடத்துவதன் மூலம் 1.5 லட்ச ரூபாய் அளவுக்கு லாபம் கிடைப்பதாக அதிகாரி தெரிவித்தார்.

ஒரு நாளைக்கு சராசரியாக 5 வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. சமயங்களில் 12 முதல் 15 வழக்குகள் கூட பதிவு செய்யப்படுகின்றன. இது வருந்தத்தக்க நிகழ்வு, இதனை தடுக்க நாங்கள் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in