

இந்தியாவில் கணக்கு காட்டாமல் வெளிநாட்டு வங்கிகளில் செய்யப்பட்டுள்ள முதலீடு அல்லது கருப்பு பணம் பற்றிய தகவலை தாமாக முன்வந்து தெரிவிப்பதற்கு குறுகிய கால அவகாசம் வழங்கப்பட உள்ளது. இது தொடர்பான அறிவிப்பை மத்திய அரசு விரைவில் வெளியிட உள்ளது.
கருப்பு பணம் உருவாவதைத் தடுக்க மத்திய அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், வெளிநாட்டு வங்கிகளில் உள்ள கருப்பு பணம் குறித்த தகவலை வருமான வரி செலுத்துவோர் தாமாக முன்வந்து தெரிவிக்க ஒரு திட்டம் கொண்டுவரப்படும் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது.
இந்நிலையில் இந்தத் திட்டம் தொடர்பான அறிவிப்பு இந்த மாத இறுதியிலோ அல்லது ஜூலை மாத தொடக்கத்திலோ வெளியாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
அதேநேரம் இதற்கு மிகக் குறுகிய கால அளவே வழங்கப்படும் எனத் தெரிகிறது. அது 2 மாதங்களாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
இந்த திட்டத்தின்படி, வெளிநாடு களில் முதலீடு செய்யப்பட்டுள்ள கருப்பு பணத்தை கணக்கில் காட்டும் பட்சத்தில் 30 சதவீத வரி மற்றும் 30 சதவீத அபராதம் செலுத்தினால் போதும். இந்த அவகாசத்துக்குப் பிறகு வெளிநாடுகளில் கருப்பு பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், அந்தத் தொகைக்கு 30 சதவீத வரியுடன் 90 சதவீத அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். மேலும் குற்ற வழக்குகளையும் சந்தித்தாக வேண்டும்.
புதிய கருப்பு பண தடுப்புச் சட்டம் வரும் 2016-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலாக இருக்கிறது. இதன்படி கருப்பு பணம் பதுக்குவோருக்கு அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டணை விதிக்கவும் வாய்ப்பு உள்ளது.