

இந்தியாவுக்கு வழங்கும் கடனை 50 சதவீதம் அளவுக்கு அதிகரிக்க ஆசிய மேம்பாட்டு வங்கி திட்டமிட்டிருப்பதாக அந்த வங்கியின் தலைவர் தகேஹிகோ நாகோவ் தெரிவித்தார்.
மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சர் வெங்கையா நாயுடு இருவரையும் சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் தகேஹிகோ நாகோவ் மேலும் கூறியதாவது.
இந்தியாவுக்கு வழங்கும் கடனை 50 சதவீதம் அளவுக்கு உயர்த்த திட்டமிட்டிருக்கிறோம். துல்லியமாக 50 சதவீதம் என்று சொல்ல முடியாவிட்டாலும், அந்த அளவுக்கு கடனை உயர்த்தத் திட்டமிட்டிருக்கிறோம்.
தற்போது 1,300 கோடி டாலர் அளவுக்கு கொடுத்து வருகிறோம். இதனை 2,000 கோடி டாலர் அளவுக்கு உயர்த்தத் திட்டமிட்டு வருகிறோம்.
நடப்பு நிதி ஆண்டில் சீனாவை விட இந்தியாவின் வளர்ச்சி அதிகமாக இருக்கிறது. 2015-16ம் நிதி ஆண்டில் இந்தி யாவின் வளர்ச்சி விகிதம் 7.8 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் நடப்பு 2015-ம் ஆண்டில் சீனா வின் வளர்ச்சி விகிதம் 7.2 சதவீதம்தான் இருக்கும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.
வரும் ஜூலை மாதத்தில் நாடுகளின் வளர்ச்சி விகிதம் குறித்து மறுபரிசீலனை செய் வோம். ஆசிய மேம்பாட்டு வங்கி வெளியிட்ட சமீபத்திய கருத்து கணிப்பில் 2015-16-ன் வளர்ச்சி விகிதம் 7.8 சதவீதமாகவும், 2016-17ன் வளர்ச்சி விகிதம் 8.2 சதவீதமாகவும் இருக்கும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.
வரும் காலங்களில் பணவீக்கம் எப்படி இருக்கும் என்பதை பொறுத்துதான் ரிசர்வ் வங்கி வட்டியை குறைக்கும். தற்போது இந்தியாவின் ரெபோ விகிதம் 7.25 சதவீதமாக இருக்கிறது. இதுவே குறைவான விகிதம் அல்ல. பணவீக்கம் மேலும் குறையும்போது வட்டி விகிதம் குறையும். அதே சமயத்தில் இந்தியாவின் கடன் நிதிக்கொள்கையை நான் கணிக்க விரும்பவில்லை.
இந்தியா தான் வாங்கிய கடனை சரியாக திருப்பிச்செலுத்தி வருகிறது. அதனால் மேலும் கடன் கொடுக்க முன்வருகிறோம். கட்டுமானம், திறன் மேம்பாடு மற்றும் நகர்ப்புற சேவைகளில் கவனம் செலுத்த இருக்கிறோம்.
அரசாங்கம் சீர்திருத்த நடவடிக் கைகளை எடுத்து வருவது வரவேற்கத்தக்கது. இதன் மூலம் தொழில் புரிவதற்கான சூழல் மேம்பட்டு வரும். மேலும் அரசாங்கம் அறிவித்துள்ள மேக் இன் இந்தியா, ஸ்கில் இந்தியா, கிளீன் இந்தியா, ஸ்மார்ட் சிட்டி உள்ளிட்ட திட்டங்களில் ஏடிபி கவனம் செலுத்தும். அதேபோல ரயில்வே துறையிலும் ஏடிபி கவனம் செலுத்தும் என்றார்.
ஏடிபி உதவியுடன் ராஜஸ் தானில் நடந்து வரும் திட்டப் பணிகளை பார்வையிடவும் ராஜஸ்தான் முதல் அமைச்சர் வசுந்தரா ராஜே சிந்தியாவை சந்திக்கவும் திட்டமிட்டிருக்கிறார் தகேஹிகோ நாகோவ்.
1986 முதல் ஆசிய மேம்பாட்டு வங்கியிடம் இந்தியா கடன் வாங்கி வருகிறது.