Published : 30 Jun 2015 10:44 AM
Last Updated : 30 Jun 2015 10:44 AM

மனிதரில் இத்தனை நிறங்களா?

பழனிச்சாமி திருப்பூரில் பின்னலாடைகள் தயாரிக்கிறார். 12 வருடங்களுக்கு முன்பு, இங்கிலாந்தில் இரண்டு சூப்பர் மார்க்கெட்டுகள், அமெரிக்காவில் ஒரு டி- ஷர்ட்கள் தயாரிப்பாளர் என மூன்று பேர் மட்டுமே அவருடைய வாடிக்கையாளர்கள். இன்று அவர் நிறுவனத்துக்கு அட்டகாசமான வெப்சைட். அங்கே ஜொலிக்கும் வெளிநாட்டு மாடல்கள். உலகின் பல பகுதிகளிலிருந்து டிசைன்கள், விலை பற்றிய விசாரிப்புகளோடு கொட்டும் இ-மெயில்கள்.

கதிரவன் சிவகாசியில் பட்டாசுத் தொழிற்சாலை முதலாளி. அவருடைய போட்டியாளர்கள் யார்? உள்ளூர் அஜந்தா, அணில், அரசன், ஐயன், ஐயனார், காளீஸ்வரி, குயில், சேவல், லட்சுமி, ஸ்டாண்டர்ட் ஆகியோர் மட்டுமல்ல; அருகில் கோவில்பட்டியில் இருக்கும் மாமன், மச்சான்கள் மட்டுமல்ல; அகமதாபாத், ராஜ்கோட், மும்பை, இந்தோர், டெல்லி நகரத் தயாரிப்பாளர்கள் மட்டுமல்ல; ஹ்யூனான் சிசி பயர் ஒர்க்ஸ், லியூயாங், மங்க்கி என்னும் பல்வேறு சீனத் தொழிற்சாலைகளும்தான். கடந்த தீபாவளிக்கு மட்டும், 1500 கோடி மதிப்புள்ள பட்டாசுகளை அடிமாட்டு விலைக்கு விற்று, இந்தியப் பட்டாசுத் தயாரிப்பாளர்களின் விற்பனைக்கே அணுகுண்டு வைத்துவிட்ட கண்ணீர்க் கதையை, என் சிவகாசி, கோவில்பட்டி நண்பர்கள் இன்னும் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள்.

பல பத்தாண்டுகளில், இ-மெயில், இணையதளம், செல்போன்கள் என அதிரடித் தொழில்நுட்ப மாற்றங்கள். தொழில்கள் உலகமயமாகிவிட்டது. இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு இந்த மாற்றங்கள் (முன்னேற்றங்கள்) ஒரு தங்கச் சுரங்கம்: அதே சமயம், உள்ளூரில் மட்டுமே விற்பவர்களுக்கு, குறிப்பாகச் சிறு தொழில் முனைவர்களுக்கு, அடிமாட்டு விலையில் விற்கும் வெளிநாட்டு நிறுவனங்கள் பறிப்பது புதைகுழி.

தொழில் என்பது நாம் போட்டியாளர்களோடு நடத்தும் போட்டி அல்லது யுத்தம். இதில் ஜெயிக்க, நாம் சாதாரணமாக, போட்டியாளர்களை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்கிறோம். இது தவறான அணுகுமுறை என்று சொல்கிறார், உலகப்புகழ் பெற்ற அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில், சிஇஓ- க்கள் பயிற்சி மையத்தின் தலைவர், பேராசிரியர் மைக்கேல் போர்ட்டர். 1979 இல் இவர் உருவாக்கிய போட்டியில் அனுகூலம் (Competitive Advantage) என்னும் கொள்கை நூற்றுக்கணக்கான பிரம்மாண்டக் கம்பெனிகளின் வேதம், யுக்தி வழிகாட்டி.

போட்டியாளர்களை ஜெயிக்க. ஐந்து சக்திகளைப் பயன்படுத்தவேண்டும் என்று போர்ட்டர் சொல்கிறார். இதன் பெயர் ஐந்து சக்திகள் மாடல் (Five Forces Model).

இந்த ஐந்து சக்திகள்:

இன்றைய போட்டியாளர்கள்

புதிய போட்டியாளர்கள்

மாற்றுப் பொருட்கள் (Substitutes)

வாடிக்கையாளர்கள்

சப்ளையர்கள்.

ஐந்து சக்திகள் மாடல்

சமீபகாலம்வரை, இந்த ஐந்து சக்திகளும், உள்ளூரிலும், அல்லது மிஞ்சி, மிஞ்சிப் போனால், உள்நாட்டிலும் மட்டுமே இருந்தன. இதனால், இந்த சக்திகளைப் பற்றித் தெரிந்துகொள்வதும், அந்த அடிப்படையில் தொழில் உத்திகளைத் திட்டமிடுவதும் எளிமையானவையாக இருந்தன.

இன்று இந்தியாவின் மொத்த ஏற்றுமதி, 19 லட்சம் கோடிகள். இவை ஆப்கனிஸ்தான் முதல் ஜிம்பாப்வே வரையிலான 237 நாடுகளுக்கு. நம் இறக்குமதி 27லட்சம் கோடிகள். இவை, 235 A Z நாடுகளுக்கு.

ஏற்றுமதியும், இறக்குமதியும் இப்போது உலக அளவில் நிகழ்வதால் பல சிக்கல்கள். நாட்டுக்கு நாடு மொழிகள், பழக்க வழக்கங்கள், தொழில் நடைமுறைகள் ஆகியவற்றில் எக்கச்செக்க வித்தியாசங்கள். தொழிலில் தொடர்ந்து ஜெயிக்க வேண்டுமானால், 237 நாடுகள் / பூகோளப் பகுதிகளில், நீங்கள் வியாபாரத் தொடர்பு கொள்ளும் ஒவ்வொரு நாட்டின் கலாசாரப் பின்புலமும் உங்களுக்கு அத்துப்படியாக இருக்கவேண்டும்.

ஆப்கனிஸ்தானில் இருந்தாலும், ஜிம்பாப்வேயில் வசித்தாலும், மனிதர்கள் மனிதர்கள்தானே, அவர்களுக்குள் அப்படி என்ன பெரிய வித்தியாசம் இருக்கமுடியும் என்று சந்தேகப்படுகிறீர்களா? இதோ சில அனுபவங்கள்:

என் நெருங்கிய நண்பர், அகமதாபாதில் இருக்கும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மெண்டில் வகுப்புத் தோழர், இன்றைய பிரபல தொழில் ஆலோசகர் அனில் கபூர் அனுபவம்.

தில்லியில் ரமேஷ் ஷர்மா. அபார பக்திமான். காகிதம் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்துகிறார். கம்பெனி பெயர் ஸ்வஸ்திக் இண்டஸ்ட்ரீஸ். ஸ்வஸ்திக் என்றால் என்ன? நாம் உ என்று பிள்ளையார் சுழிபோட்டு நல்ல முயற்சிகளைத் தொடங்கிறோம். அதைப்போல் பல வட நாட்டு இந்துக்களுக்கு ஸ்வஸ்திக் ராசியான குறியீடு. ஸ்வஸ்திக் இப்படி இருக்கும்.

ரமேஷ் ஷர்மா தன் தொழிற்சாலையை வெளி நாட்டுத் தொழில் நுட்ப உதவியோடு விரிவாக்க விரும்பினார். இஸ்ரேல் நாட்டுக் கம்பெனி இந்த இயந்திரங்கள் தயாரிப்பில் முன்னணியில் நின்றது. பேச்சுவார்த்தைகள் நடத்த ரமேஷ் அனில் கபூர் உதவியை நாடினார்.

அனில் கபூர் கொடுத்த முதல் அட்வைஸ், “நீங்கள் முதலில் ஸ்வஸ்திக் இண்டஸ்ட்ரீஸ் என்ற உங்கள் கம்பெனி பெயரை மாற்றவேண்டும்.”

“ஏன்?”

“இஸ்ரேல் நாட்டு மக்கள் யூதர்கள். ஜெர்மனியில் ஹிட்லர் ஆண்டபோது லட்சக் கணக்கான யூதர்கள் கொல்லப்பட்டார்கள், சித்திரவதை செய்யப்பட்டார்கள். ஆகவே, ஹிட்லர்மேல் யூதர்களுக்குக் கடும் வெறுப்பு. ஸ்வஸ்திகா ஹிட்லரின் ஆட்சியின் சின்னம், அவனுடைய நாஜிக் கட்சியின் சின்னம். நம் ஸ்வஸ்திக் ஹிட்லரின் ஸ்வஸ்திக்காவை நினைவூட்டும். உங்கள் கம்பெனி பெயரைப் பார்த்தவுடனேயே இஸ்ரேல் கம்பெனி உங்கள் கோரிக்கையை மறுத்துவிடும்.”

ரமேஷ் ஷர்மா, ரமேஷ் இண்டஸ்ட்ரீஸ் என்னும் புதுக் கம்பெனி தொடங்கினார். இஸ்ரேல் தொழில் நுட்பத்தோடு காகிதம் தயாரிக்கும் இயந்திரங்கள் உற்பத்தி வெற்றிகரமாக நடக்கிறது. காரணம்? இஸ்ரேல் நாட்டுக்காரர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்ட சாமர்த்தியம்!

நீங்கள் மதுரையில் இருக்கிறீர்கள். தொழில் தொடங்குகிறீர்கள். உங்கள் விற்பனை வியூகங்கள் மட்டுமல்ல, நிறுவனத்தின் பெயர், உங்கள் தயாரிப்புப் பொருட்களின் பெயர் ஆகியவை மதுரை மாவட்டத்துக்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, இந்தியாவுக்கு மட்டுமல்ல, அகில உலகத்துக்கே ஒத்துப்போக வேண்டும்

ரமேஷ் ஷர்மா புத்திசாலித்தனமாகப் பெயரை மாற்றினார். அப்படி மாற் றாமல் கையைச் சுட்டுக் கொண்டவர்கள் பல பிஸினஸ் பிரம்மாண் டங்கள்.

ஜெனரல் மோட்டார்ஸ் அமெரிக்காவின் மிகப் பெரிய கார் தயாரிப்புக் கம்பெனி. நோ வா என்ற பெயரில் கார் தயாரித்தார்கள். நோ வா என்று இரண்டு வார்த்தைகளாக உச்சரிக்கப்படும் இதன் அர்த்தம், நட்சத்திரம். போர்ட்டோ ரிக்கோ நாட்டில் ஒருவருமே இந்தக் காரை வாங்கவில்லை. ஏன் தெரியுமா? நோ வா என்றால் போர்ட்டோரிக்க மொழியில் “ஓடாது” என்று பொருள். தள்ளு மாடலை யார் வாங்குவார்கள்?

அமெரிக்காவில் ஸாட்டர்ன் (Saturn) என்னும் கார் இருந்தது. இந்தியாவில் நிச்சயமாக இதை வாங்கமாட்டார்கள். ஸாட்டர்ன் என்றால், “சனி” என்று அர்த்தம். காசைக் கொடுத்துச் சனீ ஸ்வரனை விலைக்கு வாங்குவோமா?

ஒரு சர்வதேச நிறுவனம், தங்கள் பிரபல சோப்புத்தூளை சவுதி, துபாய் போன்ற நாடுகளில் அறிமுகம் செய்தார்கள்.

உலகின் பல்வேறு நாடுகளில் பயன்படுத்திய விளம்பரம் இது. முதல் பக்கெட்டில் அழுக்குத் துணிகள். இரண்டாம் பக்கெட்டில் அவற்றைச் சோப்புத்தூளில் முக்கி வைத்திருப்பார்கள்: மூன்றாம் பக்கெட்டில், அழுக்கு எல்லாம் போய், துணிகள் பளிச்சிடும். யாருமே அவர்கள் அந்தச் சோப் பவுடரை வாங்கவில்லை.

ஏன் தெரியுமா? அரேபிய நாடுகளின் மொழி உருது. இதை இடமிருந்து வலமாகப் படிப்பார்கள். அதாவது, விளம்பரத்தைப் பார்த்தவர்களுக்கு மனதில் பதிந்த சேதி பளிச் துணிகளை இந்தக் கம்பெனியின் சோப் பவுடர் அழுக்காக்கும்!

விளம்பரங்கள், பேச்சு, எழுத்து வடிவக் கருத்துப் பரிமாற்றங்களுக்கு மட்டுமல்ல, உடல்மொழிக்கும் நாட்டுக்கு நாடு வித்தியாச (விபரீத) அர்த்தங்கள் உண்டு.

தம்ஸ் அப் (Thumbs Up) என்பது, உள்ளங்கையை மடக்கி, கட்டைவிரலை உயர்த்திக்காட்டி, ”நான் ஜெயித்துவிட்டேன்”, அல்லது “குட் லக்” என்று சொல்லும் சங்கேத மொழி.

அமெரிக்கச் சுற்றுலாப் பயணிகள் நைஜீரியா போயிருந்தார்கள். எதிரே வந்த ஒரு இளைஞர், இளைஞிகள் கூட்டத்துக்கு நட்போடு “தம்ஸ் அப்” காட்டினார்கள். அந்தக் கூட்டம் அவர்களைத் துரத்திவந்து பின்னி எடுத்தது. ஏன்? நைஜீரியாவில், “தம்ஸ் அப்” க்கு ஆபாச அர்த்தம்! ஆஸ்திரேலியாவிலும் இப்படித்தான்.

ஜப்பானிய நண்பர் வீட்டில் விசேஷமா? சிவப்பு நிற, படங்கள் போட்ட அழகான டிசைன்கள் கொண்ட கவர்களைப் பயன்படுத்துங்கள். வெள்ளை, கறுப்பு நிறக் கவர்கள் வேண்டவே வேண்டாம். இந்த நிறங்கள், ஜப்பானியர்களுக்கு, மரணத்தோடு தொடர்புகொண்ட துரதிர்ஷ்ட நிறங்கள்!

எந்த நாடுகளில் எதைச் செய்தால் தொழிலை வளர்க்கலாம், அல்லது முதுகில் டின் கட்டிக்கொள்ளலாம்? அசத்தலான விவரங்கள், சுவாரஸ்ய அனுபவங்கள், வரும் வாரங்களில்….

slvmoorthy@gmail.com

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x