

கடன்களை குறைப்பதற்காக அதானி குழுமம் நிதி திரட்ட திட்டமிட்டிருக்கிறது. கடனை குறைப்பதற்கான வெளிநாட்டு கடன் பத்திரங்கள் மூலம் கடனை திரட்டுகிறது அதானி துறைமுகம் மற்றும் சிறப்பு பொருளாதார மண் டலம் நிறுவனம். மும்பை பங்குச் சந்தைக்கு அனுப்பிய செய்தியில் எவ்வளவு தொகை திரட்ட திட்ட மிட்டிருக்கிறது என்பது தெரிவிக் கப்படவில்லை. ஆனால் ரூ. 15,000 கோடி திரட்ட முடிவெடுத்திருப்ப தாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிறுவனத்துக்கு சுமார் 11,000 கோடி ரூபாய் அளவுக்கு கடன் உள்ளது. இசிபி முறையில் டாலர் மதிப்பிலான கடன் பத்திரங்களை வெளியிட்டு நிதி திரட்ட அதானி முடிவு செய்திருக்கிறது.
விழிஞ்சம் துறைமுகத்துக்கான அனுமதி அதானி போர்ட்ஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டிருக்கிறது. வரும் நவம்பர் 1ம் தேதி முதல் இதற்கான வேலை தொடங்கும் என்றும் கேரள முதலமைச்சர் உம்மன் சாண்டி தெரிவித்தார்.
நவம்பர் 1-ம் தேதி கேரள மாநிலம் உருவாக்கப்பட்ட நாள். அந்த நாளில் இந்த துறைமுகத்துக்கான வேலை தொடங்கும். இந்தத் திட்டத்தை யாராலும் தடுக்க முடியாது என்று சாண்டி தெரிவித்தார்.
இந்த துறைமுகத்துக்கான அதானி போர்ட்ஸ் மட்டுமே விண்ணப்பித்திருந்தது. இந்த துறைமுகம் அமைக்கப்படும் பட்சத்தில் ஆண்டுக்கு 41 லட்சம் கண்டெயினர்களை கையாள முடியும். இந்த துறைமுகத்தின் முதல் பகுதி அமைக்கும் பணி 2019-ம் ஆண்டு முடிவடையும்.