

நிறுவனங்கள் மீதான குறைந்தபட்ச மாற்று வரி (எம்ஏடி) குறித்து ஆராய குழு அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்ததைத் தொடர்ந்து பங்குச் சந்தையில் ஏற்றம் காணப்பட்டது. அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் பங்குச் சந்தையில் மேற்கொள்ளும் முதலீடுகளின் மூலம் அடையும் ஆதாயத்துக்கு (கேபிடல் கெயின்ஸ்) குறைந்தபட்ச மாற்று வரி செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டது.
இதனால் கடந்த புதன்கிழமை பங்குச் சந்தையில் வரலாறு காணாத வீழ்ச்சி ஏற்பட்டது. வியாழக்கிழமையும் சந்தையில் சரிவு நீடித்தது. இந்நிலையில் இதுகுறித்து ஆராய நீதிபதி ஏ.பி. ஷா தலைமையில் உயர் நிலைக் குழு அமைக்கப்படும் என அரசு நேற்று அறிவித்ததைத் தொடர்ந்து பங்குச் சந்தையில் ஏற்றம் காணப்பட்டது.
மும்பை பங்குச் சந்தையில் 506 புள்ளிகள் உயர்ந்ததில் குறியீட்டெண் 27105 ஆக உயர்ந்தது. தேசிய பங்குச் சந்தையில் 134 புள்ளிகள் உயர்ந்ததில் குறியீட்டெண் 8191-ஐ தொட்டது. முந்தைய விதிமுறையின்படி நீண்டகால முதலீடுகளின் மூலம் அடையும் மூலதன ஆதாயத் துக்கு அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் வரி செலுத்து வதிலிருந்து விலக்கு அளிக்கப் பட்டது.
ஆனால் இவை குறைந்தபட்ச முதலீடுகள் மூலமான வருவாயில் 15% வரியும், பத்திரங்கள் மூலமான ஆதாயத்தில் 5% வரியும் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இதன் மூலம் ரூ. 40 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கும் என அரசு மதிப்பீடு செய்திருந்தது.