

மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் நடப்பு நிதி ஆண்டில் 9 புதிய கார்களை அறிமுகப் படுத்தத் திட்டமிட்டுள்ளதாக நிறுவனத்தின் செயல் இயக்குநர் பவன் கோயங்கா தெரிவித்தார்.
டெல்லியில் நேற்று நிறுவ னத்தின் புதிய மாடல் காரான நியூ ஏஜ் எக்ஸ்யூவி 500 மாடல் காரை அறிமுகப்படுத்திய அவர், இந்த காலாண்டில் பேட்டரி காரை அறிமுகப்படுத்த உள்ளதாகவும் கூறினார்.
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த காரின் டெல்லி விற்பனையக விலை ரூ. 15.99 லட்சமாகும். புதிதாக அறிமுகப்படுத்தப் படவுள்ள 9 மாடல்களில் இரண்டு மாடல்கள் முழுவதும் புதிய மாடல் கார்களாகும். மற்றவை மேம்படுத்தப்பட்ட மாடல்களாக இருக்கும்.
எஸ்யூவி பிரிவில் நிறுவனத்தின் தயாரிப்புகளை மேலும் ஸ்திரப் படுத்திக் கொள்ளும் வகையில் புதிய மாடல்கள் அறிமுகம் செய்யப்படுவதாக அவர் கூறினார்.
நடப்பு நிதி ஆண்டில் புதிய அறிமுகங்கள் மூலம் இத்துறை எதிர்பார்க்கும் வளர்ச்சியை விட கூடுதல் வளர்ச்சியை நிறுவனம் எதிர்பார்ப்பதாக கோயங்கா கூறினார். இந்த அறிமுக நிகழ்ச்சியில் நிறுவனத்தின் ஆட்டோமோடிவ் பிரிவின் தலைவர் பிரவீண் ஷா உடனிருந்தார்.