

நகர்ப்புறங்களில் வாழும் ஏழை மக்களை சமாளிப்பதுதான் புதிதாக அமைய உள்ள அரசு எதிர்கொள்ள உள்ள பிரதானமான சவாலாக இருக்கும் என்று மத்திய அரசின் மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அரசு ஏழைகளுக்காக அளிக்கும் சலுகைகள் நகர்ப்புறங்களில் வாழும் ஏழைகளுக்குக் கிடைப் பதில்லை. அதிகரித்து வரும் விலைவாசியால் இவர்கள் படும் அவதி நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இவர்களை சமாளிப்பதுதான் புதிய அரசுக்கு மிகப் பெரும் சவாலாக இருக்கும்.
கடந்த 5 ஆண்டுகளாக நகர்ப்புற ஏழை மக்கள் குறித்து பரவலாக பேசப்பட்டு வந்தாலும் அவர்களுக்காக எவ்வித நலத் திட்டங்களும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை என்று தேசிய புள்ளியியல் துறைத் தலைவர் பிரணாப் சென் தெரிவித்தார். கிராமப் பகுதிகளில் வாழும் ஏழை மக்களைக் காப்பதற்கு அரசின் பல்வேறு நலத் திட்டங்கள் உள்ளன. மேலும் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் அவர்களுக்கு உதவிகரமாக உள்ளது. ஆனால் நகர்ப்பகுதிகளில் வாழும் ஏழை மக்களுக்கு இத்தகைய வேலை வாய்ப்பு கிடைப்பது இல்லை என்று அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும் கிராமப் பகுதிகளில் வாழும் ஏழை மக்களுக்கு உணவு தானியங்கள், காய்கறிகள், பழங்கள், கால் நடைகள், பால் உள்ளிட்டவை ஓரளவு கட்டுப்படி யாகும் விலை யில் கிடைக்கும். ஆனால் நகர்ப்பகுதியில் உள்ள வர்கள் அதிக விலை கொடுத்துத் தான் இவற்றை வாங்க வேண்டி யிருக்கும். கடந்த ஏப்ரல் முதல் பிப்ரவரி வரையிலான காலத்தில் தொழில் துறை உற்பத்தி 0.1 சதவீதம் சரிந்தது. முந்தைய ஆண்டு இது 0.9 சதவீத வளர்ச்சியை எட்டி யிருந்தது.
நுகர்வோர் விலைக் குறையீட்டெண் அடிப்படையில் சில்லறை பணவீக்கம் மார்ச் மாதத்தில் 8.31 சதவீதமாக இருந்தது. இது பிப்ரவரியில் 8.03 சதவீதமாக இருந்தது என்று குறிப்பிட்ட பிரணாப் சென், காய்கறிகள், பழங்கள், பருப்பு வகைகள், பால் உள்ளிட்டவை விலை உயர்ந்துள்ளன என்று சுட்டிக்காட்டினார்.
பணவீக்கம் ஒட்டுமொத்த விலைக் குறியீட்டெண் அடிப்படையில் மார்ச் மாதத்தில் 5.7 சதவீதமாக இருந்தது. முந்தைய மாதம் இது 4.68 சதவீதமாக இருந்தது. முதன்மைப் பொருள்களின் விலை மார்ச் மாதத்தில் 9.9 சதவீதம் அதிகரித்தது.
அதிகரித்துவரும் பணவீக்கத்துக்கேற்ப நகர்ப்பகுதிகளில் உள்ள தொழிலாளிகளின் ஊதியம் உயரவில்லை. சில்லறை பணவீக்கம் மார்ச் வரை 8 சதவீதம் முதல் 11 சதவீதம் வரை உள்ளது. ஆனால் ஒட்டுமொத்த விலைக் குறியீட்டெண் 4.5 சதவீதம் முதல் 7.5 சதவீதம் வரை உள்ளது.
ஒட்டுமொத்த நிலவரத்துக்கும் சில்லறை நிலவரத்துக்கும் இடையிலான இடைவெளி காரணமாக தொழிலாளர்களின் ஊதியம் ஒத்துப் போவதில்லை என்று குறிப்பிட்டார்.
புதிதாக மத்தியில் பொறுப் பேற்க உள்ள அரசு ரூ. 2 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்களை உடன டியாக முடுக்கிவிட வேண்டும். இந்தத் திட்டப் பணிகள் அனைத்தும் 4 ஆண்டு முதல் 5 ஆண்டு காலம் பிடிக்கக் கூடியவை. நாட்டின் பொருளாதாரம் மிக மோசமான நிலைக்குச் சென்றுவிடவில்லை என்று குறிப்பிடும் பிரணாப் சென், முறைசாரா தொழில்கள் மூலமான வளர்ச்சி சாத்தியம். இதன் தாக்கம் நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிக்கு உதவும் என்று குறிப்பிட்டார்.12-வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் நாட்டின் வளர்ச்சி விகிதம் எதிர்பார்க்கப்படும் 8 சதவீதத்துக்குப் பதிலாக 7 சதவீத அளவுக்கு இருக்கும் என உறுதிபட தெரிவித்தார்.
புதிய அரசு 12-வது ஐந்தாண்டு திட்ட மதிப்பீடுகளை மாற்றியமைக்குமா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, அவர்களின் கொள்கைகளுக்கு ஏற்ப முன்னுரிமை அடிப்படையை மாற்றியமைத்துக் கொள்ள வாய்ப்புகள் உள்ளன என்று குறிப்பிட்டார்.