திருப்பூரில் சர்வதேச பின்னலாடைக் கண்காட்சி தொடக்கம்: ரூ.400 கோடி வர்த்தக விசாரணை எதிர்பார்ப்பு

திருப்பூரில் சர்வதேச பின்னலாடைக் கண்காட்சி தொடக்கம்: ரூ.400 கோடி வர்த்தக விசாரணை எதிர்பார்ப்பு
Updated on
1 min read

திருப்பூரில், 3 நாள் சர்வதேச கோடை கால சிறப்பு பின்னலாடைக் கண்காட்சி நேற்று தொடங்கியது. இதில், ரூ.400 கோடி வர்த்தக விசாரணை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம், இந்திய பின்னலாடைக் கண்காட்சி அமைப்பு, ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகம் ஆகிய அமைப்புகள் இணைந்து ஆண்டுதோறும் இரண்டு முறை சர்வதேச பின்னலாடை கண்காட்சிகளை திருப்பூரில் நடத்தி வருகின்றன. இதன் தொடர்ச்சியாக, 40-வது கோடை, வசந்த கால ஆயத்த ஆடைக் கண்காட்சி, திருப்பூரை அடுத்துள்ள திருமுருகன்பூண்டி ஐகேஎப் வளாகத்தில் நேற்று தொடங்கியது.

இக் கண்காட்சியை, ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகத்தின் (ஏஇபிசி) முன்னாள் தலைவர் பிரேமல் உடானி தொடங்கி வைத்தார். திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் சக்திவேல், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா உதவிப் பொது மேலாளர் கமலநாதன், ஏற்றுமதியாளர்கள் சங்க துணைத் தலைவர் சந்திரன், செயலாளர் சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், திருப்பூர், சேலம், கோவை, கரூர், சென்னை, டெல்லி, ராஜ்கோட், போபால், பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஏற்றுமதி நிறுவனங்கள், ஆடை ரகங்களை கண்காட்சியில் இடம்பெறச் செய்துள்ளன. 49 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. 75 பையர்கள், 72 பையிங் ஏஜென்ட்கள் கண்காட்சியை பார்வையிட உள்ளனர்.

குழந்தைகள், பெண்கள், ஆண்களுக்கான பல்வேறு ரக புதிய ஆடைகள் இக் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. எமிரேட்ஸ், அமெரிக்கா, பிரான்ஸ், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து பையர்கள் பங்கேற்றுள்ளனர்.

ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கழகத்தின் (ஏஇபிசி) முன்னாள் தலைவர் பிரேமல் உடானி, கண்காட்சியை தொடங்கிவைத்துப் பேசும்போது, ‘திருப்பூர் நகரம், ஏற்றுமதியில் நன்கு வளர்ந்து வருகிறது. தற்போது நல்ல நிலையில் தொழில் உள்ளது.

தொழில் மேலும், நன்கு வளர கனடா, ஐரோப்பா நாடுகளுடன் வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாக வேண்டும். ஏற்றுமதியாளர்களுக்கு வழங்க வேண்டிய டியூட்டி டிராபேக் சலுகை சதவீதமும் அதிகரிக்க வேண்டும்’ என்றார்.

திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் சக்திவேல் கூறும்போது, ‘பருத்தி இழை மட்டுமல்லாது, பாலியஸ்டர் உள்ளிட்ட செயற்கை இழையில் பல்வேறு புதிய ரகங்கள் இக் கண்காட்சியில் அறிமுகம் ஆகியுள்ளன. மே 8-ம் தேதி வரை நடைபெறும் இக் கண்காட்சியில், சுமார் ரூ.400 கோடி அளவுக்கு வர்த்தக விசாரணை எதிர்ப்பார்க்கப்படுகிறது’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in