

இந்தியப் பங்குச் சந்தைகளுக்கு நேற்று மோசமான வர்த்தக நாளாக அமைந்தது. முக்கிய பங்குச் சந்தை யான மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 722 புள்ளிகள் சரிந்து 26717 புள்ளிகளில் முடிந்துள்ளது. தேசியப் பங்குச் சந்தையான நிப்டி 227 புள்ளிகள் சரிந்து 8097 புள்ளிகளில் வர்த்தகம் முடிந்துள்ளது.
கடந்த ஐந்து மாதங்களுக்குப் பிறகு சந்தை கண்டுள்ள மிகப்பெரிய சரிவு இது. குறிப்பாக டிசம்பர் 2014க்கு பிறகு நேற்றைய வர்த்தகத்தில் நிப்டி 8100 புள்ளிகளுக்கு கீழே சரிந்துள்ளது
கச்சா எண்ணெய் விலை ஏற்றம் மற்றும் பெரு நிறுவனங்களின் வளர்ச்சி விகிதம் எதிர்பார்த்தபடி இல்லாததும் முதலீட்டாளர்களை அச்சமடைய வைத்துள்ளதாக சந்தை நிபுணர்கள் கூறினர். மேலும் பெரு முதலீட்டாளர்கள் நாட்டின் தரப்புள்ளிகளை குறைக்க முடிவெடுத்ததும் சந்தை சரிவுக்கு காரணம் என்று குறிப்பிட்டனர்.
முக்கிய துறைகள்
வங்கி, உலோகம், எண்ணெய் மற்றும் எரிவாயு, கேபிடல் கூட்ஸ், ஹெல்த்கேர் என அனைத்து முக்கியத் துறைகளுமே இறக்கத்தைச் சந்தித்தது. மிட்கேப் குறியீடு 3.2 சதவீதம் வரை இறக்கம் கண்டு 10265 புள்ளிகளில் வர்த்தகம் முடிந்தது. ஸ்மால்கேப் குறியீடு 10289 புள்ளிகள்வரை சரிந்தது.
முக்கிய நிறுவனங்களின் பங்கு களில் பார்தி ஏர்டெல் பங்குகள் மட்டுமே ஏற்றத்தைக் கண்டது. பிஹெச்இஎல் பங்கு 6 சதவீதத் துக்கும் மேல் இறக்கம் கண்டது. அம்புஜா சிமெண்ட்ஸ், கோட்டக் மஹிந்திரா, ஐசிஐசிஐ வங்கி, லார்சன் டூப்ரோ நிறுவனப் பங்குகள் 4 சதவீதத்துக்கும் அதிகமாக இறக்கம் கண்டன. உலோகத்துறை பங்குகள் கடந்த இரண்டு வர்த்தக நாட்களாக இறக்கத்தில் இருக்கிறது.
ரூபாய் மதிப்பு
டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பும் சரிந்துள்ளது. நேற்றைய நிலவரப்படி டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.63.53 ஆக இருந்தது. இது 0.15 சதவீதம் இறக்கமாகும்.
கச்சா எண்ணெய்
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதன் காரண மாக எண்ணெய் நிறுவனப் பங்குகள் இந்த ஆண்டின் முதல் உச்ச வர்த்தகத்தை செவ்வாய்க்கிழமை கண்டிருந்தன. இந்த நிலையில் நேற்றைய வர்த்தகச் சரிவில்
எண்ணெய் நிறுவனங்களின் பங்குகளும் பாதிப்படைந்தன. ஐஓசி, பிபிசிஎல், ஹெச்பிசிஎல் நிறுவனங்களின் பங்குகள் 3 முதல் 6 சதவீதம்வரை சரிவைக் கண்டன.
எதிர்பார்ப்பு
மோடி பிரதமர் ஆனதில் இருந்தே முதலீட்டாளர்களுக்கும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆட்சிக்கு வந்து ஒரு ஆண்டுகள் ஆன நிலையிலும் சந்தை ஏற்ற இறக்கமாகவே இருந்து வருகிறது. கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் நிப்டி 10 சதவீதம் வரை சரிந்துள் ளது. அதே சமயத்தில் மோடி அரசு பொருளாதாரத்தை வலுப்படுத்து வதற்கான வேலைகளில் உள்ளது. ஆட்சிக்கு வந்த 12 மாதங்களில் இரண்டு மூன்று வருடங்களில் செய்ய வேண்டிய வேலைகளை செய்துள்ளது என்றும் சந்தை வல்லுனர்கள் கருத்து தெரிவித் துள்ளனர். மேலும் சந்தையின் இந்த சரிவு தற்காலிகமானது, இந்திய சந்தை சிறப்பாக உள்ளது என்றும் கூறியுள்ளனர்.
சர்வதேச சந்தைகள்
சர்வதேச சந்தை நிலவரங்களைப் பொறுத்தவரை ஐரோப்பிய சந்தைகள் ஏற்றமாக இருந்தது. அமெரிக்க சந்தையான நாஸ்டாக் 1.57 சதவீதம் இறக்கம் கண்டிருந்தது. ஆசிய சந்தைகளில் நிக்கி ஏற்றத்திலும் இதர சந்தைகள் இறக்கத்திலும் இருந்தன.
ரூ.2.89 லட்சம் கோடி இழப்பு
பங்குச்சந்தைகள் கடுமையாக சரிந்ததால் நேற்று முதலீட்டாளர் களின் சொத்து மதிப்பு 2.89 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு சரிந்தது. மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.100 லட்சம் கோடி என்ற நிலையில் இருந்து சரிந்து ரூ.99.11 லட்சம் கோடியாக உள்ளது.
இபிஎப்-நிதியிலிருந்து ஆண்டுக்கு ரூ. 5,000 கோடி முதலீடு
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியிலிருந்து ஆண்டுக்கு 5,000 கோடி ரூபாய் பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படும் என்ற முடிவு அரசிதழில் வெளியிடப்பட்டதாக தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அமைச்சர் பண்டாரு தத்தாரேயா நேற்று ராஜ்யசபாவில் தெரிவித்தார்.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியை பங்குச் சந்தை மற்றும் பங்குச் சந்தை சார்ந்த முதலீடு திட்டங்களில் முதலீடு செய்வதற்கு நிதி அமைச்சகம் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையத்துக்கு பரிந்துரை செய்திருந்தது. இது தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவுகள்படி பங்குச் சந்தை மற்றும் அதை சார்ந்த திட்டங்களில் குறைந்தபட்சம் 5 சதவீதம் அதிகபட்சமாக 15 சதவீதம் வரை முதலீடு செய்யப்படும். இந்த தகவலை திமுக உறுப்பினர் கே.பி.ராமலிங்கம் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் கூறினார்.