

ஆன்லைன் வர்த்தக நிறுவனமான இபே இணையதளம் வாசனை திரவியங்கள் விற்பனையை துவக்கியுள்ளது. இதற்கான அறிமுக நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இபே நிறுவனத் தின் சில்லறை ஏற்றுமதி பிரிவு தலைவர் நவீன் மிஸ்த்ரி கலந்து கொண்டார்.
இபே நிறுவனம் ஏற்கனவே பல்வேறு பிரிவுகளில் வர்த்தகத்தைக் கொண்டிருந்தாலும் வாசனை திரவிய விற்பனைக்கு என்று தனியாக பிரிவு தற்போது துவங்கப்படுகிறது.
இந்தியாவில் வாசனை திரவியங்கள் ஆண்டுக்கு ரூ.2,000 கோடி விற்பனை ஆகிறது. இது 50 சதவீத வளர்ச்சியை கொண்டுள்ளது. இணையதளம் வாயிலான விற்பனை ரூ. 150 கோடி மதிப்பை கொண்டுள்ளது. இது 120 சதவீதம் வரை வளர்ச்சி அடையும் என்கிற கணிப்பு உள்ளது என்றார்.
சுமார் 100 பிராண்டுகள் இபே இணையதளம் வாயிலாக விற்பனை செய்யப்பட உள்ளதாகவும் குறிப்பிட்டார். இந்திய அளவில் வாசனை திரவியம் பயன்படுத்துபவர்களில் தமிழ்நாடு நான்காவது இடத்தில் உள்ளது என்று மற்றொரு கேள்விக்கு பதில் அளித்தார்.
இபே தளத்தின் மூலம் பல்வேறு பொருட்கள் விற்கப்படுவதாகவும் எலெக்ட்ரானிக் பொருட்கள் 47 சதவீதம், ஆடைகள் மற்றும் பேஷன் உடைகள் 40 சதவீதம் விற்பனை ஆவதாகவும் குறிப்பிட்டார். இணையதள சந்தையில் பொருட்கள் வாங்குபவர்கள் 89 சதவீதம் பேர் இணையம் வாயிலாகவே பணத்தை செலுத்துகிறார்கள் என்று மிஸ்த்ரி குறிப்பிட்டார்.