Published : 26 May 2015 09:59 AM
Last Updated : 26 May 2015 09:59 AM

பொசிஷனிங்: மீண்டெழுந்த ஓட்வாலா ஜூஸ் நிறுவனம்

அமெரிக்காவில் ஜூஸ் தயாரிக்கும் நிறுவனம் ஓட்வாலா. 1968 -இல், கிரெக், கெரி, போனி என்னும் மூன்று நண்பர்களால் சிறு ஜூஸ் கடையாகத் தொடங்கப்பட்டது. சுகாதாரமாகத் தயாரிக்கப்படும் இயற்கைச் சத்துகள் கொண்ட, ஆரோக்கியமான பழச்சாறு என மக்கள் நம்பிக்கையைப் பெற்றது. அடுத்த 25 ஆண்டுகளுக்குத் தொடர் வளர்ச்சி. அமெரிக்காவின் முக்கிய பழச்சாறு களில் ஒன்றாக உயர்ந்தது.

நோயால் வந்த வினை

1996. வாஷிங்டன் மாநிலத்தின் பல பாகங்களில் ஈ கோலி (E coli) என்னும் தொற்று நோய் பரவியது. ஈ கோலி என்பது Escherichia Coli என்ற பாக்டீரியாவின் சுருக்கப் பெயர். கெட்டுப்போன உணவுகளில் இந்த பாக்டீரியா இருக்கும். இந்த உணவு களைச் சாப்பிட்டால், ஈ கோலி நோய் வரும்.

இந்த நோய் நம்மை எப்படிப் பாதிக்கும்? அடி வயிறு கடுமையாக வலிக்கும். சில மணி நேரங்களுக்குள் கட்டுக்கடங்காத வயிற்றுப்போக்கு ஏற்படும். வாந்தி எடுக்கும். லேசாக ஜூரம் வரும். இரண்டாம் நாள் வயிற்றுப்போக்கு ரத்த பேதியாகும். சிகிச்சை கொடுக்காவிட்டால் உயிருக்கு ஆபத்து ஏற்படும். அன்னா கிரேஸ் கிம்மெஸ்டாட் என்ற 12 வயதுச் சிறுமி ஈ கோலி நோய் வந்து உயிரிழந்தாள். 66 பேர் நோயினால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனைகளில் அனுமதிக்கப் பட்டார்கள். அக்டோபர் 30. ஓட்வாலா தலைவர் வில்லியம்ஸன் தலையில் இடி இறங்கியது. வாஷிங்டன் மாநில உடல் நலத்துறை அதிகாரிகள் அவரைச் சந்தித்தார்கள்.

“மிஸ்டர் வில்லியம்ஸன், சமீபத்தில் ஈ கோலி நோயால் ஏற்பட்ட பாதிப்புகள், அன்னாவின் மறைவு ஆகியவை உங்களுக்குத் தெரியுமல்லவா?”

“நிச்சயமாக. என்னை மிகவும் பாதித் தது குழந்தை அன்னாவின் மரணம்.”

சந்தேகம்

“உங்களுக்கு அந்த மரணத்தில் தொடர்பிருப்பதாக சந்தேகப்படுகிறோம் மிஸ்டர் வில்லியம்ஸன்.”

“எனக்கா? எப்படி? நீங்கள் என்ன பேசுகிறீர்கள் என்று தெரிந்துதான் சொல்கிறீர்களா?”

“ஆமாம். அன்னா உங்களுடைய ஆப்பிள் ஜுஸ் குடித்திருக்கிறாள். கெட்டுப் போன அந்த ஜூஸில் இருந்த ஈ கோலிதான் அவளுக்கு நோய் வரக் காரணம்.'

“உங்கள் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இருக்கிறதா?”

முன்னெச்சரிக்கை நடவடிக்கை

“இல்லை. இப்போதைக்கு எங்களுக்கு இருப்பது வலுவான சந்தேகம் மட்டுமே. மக்கள் நலனை முன்னிட்டு நீங்கள் தயாரிப்பில் மிகக் கவனமாக இருக்க வேண்டுமென்ற எச்சரிக்கை தரவே இந்த எங்கள் வருகை.”

சந்தேகம்தானே, அது உறுதியான பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று வில்லியம்ஸன் அசால்ட்டாக இருக்க வில்லை. குற்றச்சாட்டு ஒருவேளை உண் மையாக இருந்தால், சுகாதார மாகத் தயாரிக்கப்படும் இயற்கைச் சத்துகள் கொண்ட, ஆரோக்கியமான பழச்சாறு என மக்கள் மனதில் 28 ஆண்டுகளாக உருவாக்கியிருக்கும் பொசிஷனிங் தகர்ந்துவிடும் என்னும் அபாயத்தை உணர்ந்தார். வரும்முன் காக்க முடிவெடுத்தார்.

ஓட்வாலா ஜூஸ்களை விற்கும் 4600 எஜெண்டுகளை வில்லியம்ஸன் உடனேயே தொடர்பு கொண்டார். நிலையை விளக்கினார். அவர்களி டமிருந்த மொத்தச் சரக்குகளையும் உடனடியாகத் திருப்பி அனுப்பச் சொன்னார். 48 மணி நேரத்தில் சுமார் ஆறரை மில்லியன் டாலர்கள் (அன்றைய நிலவரப்படி, சுமார் 25 கோடி ரூபாய்) மதிப்புள்ள ஜூஸ் கம்பெனிக்குத் திரும்பி வந்தது.

வில்லியம்ஸன் அடுத்துச் செய்த வேலை - தனது மேலாளர்களை மூன்று குழுக்களாக அணி வகுக்கச் செய்தார்.

முதல் குழுவின் வேலை, அன்றாட தொழிலை பாதுகாப்பது, ஏஜெண்டுகளின் பயங்களைப் போக்கி அவர்கள் நிறுவனத்தில் வைத்த நம்பிக்கையைக் காப்பாற்றுவது. இவர்கள் வழிகாட்டல்படி, விற்பனை மேற்பார்வையாளர்கள் தாங்கள் சேவை செய்த கடைகளை தினமும் சந்திக்க வேண்டும்.

பிரச்சினையை எதிர்கொள்ள நிறுவனம் எடுத்துக் கொண்டிருக்கும் நடவடிக்கைகளின் முன்னேற்றங்கள் பற்றி அவர்களுக்குச் சொல்லி அவர்களைத் தொடர்பு வளையத்தில் வைத்திருக்க வேண்டும். வாடிக்கை யாளர்கள் எத்தகைய கேள்விகள் கேட்கலாம் என்பதை அவர்களுக்கு விளக்கி, அவற்றுக்கான நேர்மையான பதில்களையும் அவர்களுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும்.

இரண்டாவது குழு வேலை தீயணைப்புப் படை மாதிரி. ஒவ்வொரு சிறிய நடப்புகளையும் கண்காணித்து அவை பெரிதாக வெடிக்குமுன் அவற்றை முளையிலேயே கிள்ளி எறிவது, தரக் கட்டுப்பாட்டு முறைகளை மாற்றியமைத்து இத்தகைய நெருக் கடிகள் மீண்டும் வராமலிருக்க நிரந்தரத் தீர்வு காணவேண்டும்.

மூன்றாவது குழு வேலை அரசாங்க இலாகாக்கள், ஏஜெண்டுகள், வாடிக்கையாளர்கள், பொதுமக்கள் ஆகியோரின் கேள்விகளுக்கு ஒளிவு மறைவு இல்லாத சத்தியமான பதில்கள் தரவேண்டும்.

நஷ்ட ஈடு கேட்டு வழக்கு

நவம்பர் 5. ஈ கோலி நோய் ஓட்வாலா பழச்சாறு மூலம் வந்திருக்கலாம் என்ற அரசுச் செய்தி வெளியானது. அமெரிக்கா முழுக்கக் காட்டுத் தீயாக நியூஸ் பரவியது. விற்பனை 90 சதவீதம் விழுந்தது. நிறுவனம்மீது தங்களுக்கு நோயால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நஷ்டஈடு கேட்டு 20 வழக்குகள் பதிவாயின. முக்கிய ஊழியர்கள் சிலர் வேலையைவிட்டுப் போனார்கள். மற்றவர்கள் பெரும்பாலானோர் தாங்கள் ஓட்வாலா கம்பெனியில் வேலை பார்க்கிறோம் என்று சொல்லவே வெட்கப்பட்டார்கள். பயந்தார்கள்.

பிரச்சினை வெடித்த இரண்டாம் நாள் முதல், வில்லியம்ஸன் தினமும் தன் நிறுவன மொத்த ஊழியர்கள் கூட்டத்தில், முந்தைய நாளின் நடவடிக்கைகளை, முன்னேற்றங்களை விவாதித்தார். ஊழியர்கள் தயங்காமல் கேள்விகள் கேட்கலாம். கேள்விகளுக்கு உண்மையான பதில்கள் கொடுத்தார்.

உற்பத்தி முறையில் ஏற்பட்ட தவறுதான் நெருக்கடிக்குக் காரணம் என்பதை வில்லியம்ஸன் கண்டு பிடித்தார். சாதாரணமாக ஜூஸ், பால் போன்ற பானங்கள் நிலைப் படுத்தப்பட்டுத்தான் விற்பனைக்கு வரும். உங்கள் வீட்டில் வாங்கும் பால் பாக்கெட்டை எடுத்துப் பாருங்கள். அதில் “பாஸ்ச்ரைஸ்டு (Psteurized) பால்” என்று எழுதியிருக்கும்.

பதப்படுத்தல் என்றால் என்ன?

பதப்படுத்தல் (பாஸ்ச்ரைஸ்டு) என்றால் என்ன? பிரெஞ்சு விஞ்ஞானி லூயி பாஸ்ச்சர் (Louis Pasteur) பாக்டீரியாக்களால்தான் நோய்கள் பரவுகின்றன என்பதைக் கண்டுபிடித்தவர், அத்தனை நோய்த் தடுப்பு முறைகளுக்கும் வழி வகுத்தவர். அவர் கண்டுபிடித்த உணவுப் பாதுகாப்பு முறைக்கு பாஸ்ச் சரைசேஷன் என்று பெயரிட்டு அவரை கெளரவித்திருக்கிறது உலகம்.

உதாரணத்துக்கு பால் பதப்படுத்தும் முறையை பார்க்கலாம். பாலை 145 டிகிரி பாரன்ஹீட் (63 டிகிரி சென்டிகிரேட்) வெப்பத்தில் 30 நிமிடங்கள் சூடாக்குவார்கள். உடனேயே 39 டிகிரி பாரன்ஹீட் (4 டிகிரி சென்டிகிரேட்) வெப்ப அளவுக்குக் குளிர வைக்க வேண்டும். அப்படிச் செய்தால், பாலின் தன்மையை மாற்றாமல், அதிலுள்ள பாக்டீரியாக்களை அழிக்க முடியும், உடல் நலத்துக்குப் பாதுகாப்பான பால் கிடைக்கும் என்பது லூயி பாஸ்ச்சர் கண்டுபிடித்ததுதான் இந்த முறை.

ஓட்வாலா கம்பெனி தன் உற்பத்தியில் பாஸ்ச்சரைசேஷன் முறையைப் பயன்படுத்தவில்லை. “பாஸ்ச்சரைஸ் செய்வதற்காக சூடாக்கும்போது பழ ரசத்தின் புத்துணர்ச்சி சுவை (Freshness) கெட்டுப் போகும். நாங்கள் அதைச் செய்வதில்லை.

எனவே மற்ற ஜூஸ்களைவிட எங்கள் தயாரிப்புகள் சிறந்தவை” என்று தங்கள் அடிப்படைக் கொள்கையை, நம்பிக்கையைப் பறைசாற்றிப் பெருமை கொண்டது ஓட்வாலா.

ஜூஸில் பாக்டீரியா இருந்தால் அதைக் குடிப்பவர் உடல் நலத்துக்குக் கேடு என்று அவர்களுக்குத் தெரியும். இதற்காக அவர்கள் கையாண்ட முறை வேறு. பழங்கள் தரையில் விழும்போதுதான் பாக்டீரியா பழங்களைப் பாதிக்கிறது என்று ஓட்வாலா நிறுவனம் நம்பியது. எனவே தங்களுக்குப் பழங்கள் சப்ளை செய்பவர்கள் மரங்களிலிருந்து பறித்த பழங்களை மட்டுமே கொடுக்கவேண்டும், தரையில் விழுந்த பழங்களைக் கொடுக்கக்கூடாது என நிபந்தனை போட்டார்கள். 27 வருடங்களில் ஒரு சின்னப் பிரச்சினைகூட வரவில்லை. எனவே தங்கள் தயாரிப்பு முறை சரியா தப்பா என்று நினைத்துப் பார்க்க வேண்டிய தேவையே அவர்களுக்கு வரவில்லை.

தவறுக்கு பொறுப்பேற்பு

1996 நெருக்கடி வந்தவுடன் வில்லியம்ஸன் உற்பத்தி முறையைத் தீவிரமாக மறு பரிசீலனை செய்தார். பாஸ்ச்சரைசேஷன் செய்யாதது தவறு என்று புரிந்துகொண்டார். தங்களுடைய அடிப்படைக் கொள்கையே தவறு என்று உணரும்போது நிறுவனங்கள் சாதாரணமாக என்ன செய்வார்கள்? பகிரங்கமாகத் தவறை ஒத்துக்கொள்ள அவர்கள் ஈகோ தடுக்கும். தவறை மறைக்க முயல்வார்கள்.

ஓட்வாலா நேர்மையான நிறுவனம. தாமாகவே முன்வந்து தவறை ஒத்துக்கொண்டார்கள். அரசு விதித்த 15 லட்சம் டாலர் அபராதத்தை மறு பேச்சில்லாமல் கட்டினார்கள். எல்லாப் பழைய இயந்திரங்களையும் மாற்றினார்கள். புகழ் பெற்ற நிபுணர்களின் உதவியோடு ஒரு வருடத்தில், 15 லட்சம் டாலர் முதலீட்டில் பளபளவெனப் புதிய தொழிற்சாலை எழுந்தது. தொழிற்சாலை மட்டுமல்ல, ஓட்வாலா நிறுவனம் பற்றி மக்கள் மனங்களில் இருந்த நம்பிக்கையும் புத்துயிரோடு எழுந்தது.

slvmoorthy@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x