Published : 30 May 2015 10:22 AM
Last Updated : 30 May 2015 10:22 AM

தொழில் ரகசியம்: ஸ்பான்சர்ஷிப்பின் மகாத்மியம்!

டீவி நிகழ்ச்சியிலிருந்து டீக்கடை போர்டு வரை, ஆடி மாத இசைக் கச்சேரி முதல் ஆடியோ ரீலீஸ் வரை ‘இதை வழங்குபவர்கள்….’ என்று யாராவது எதையாவது ஸ்பான்சர் செய்துகொண்டே இருக்கிறார்கள். கிரிக்கெட்டில் தூக்கியடித்தால் சிக்ஸர் என்றது அந்த காலம். இன்று அதற்குப் பெயர் ‘யெஸ் பாங்க் மேக்சிமம்’. ‘இந்த நிகழ்ச்சியைப் பார்த்தியா’ என்று கேட்டது போய் ‘ஏர்டெல் சூப்பர் சிங்கர் பார்த்தியா’ என்று கேட்கிறோம். சர்வம் ஸ்பான்சர்ஷிப் மயம்!

ஸ்பான்சர்ஷிப் பலவிதம்

டீவி நிகழ்ச்சியை ஸ்பான்சர் செய் வது மட்டுமல்ல ஸ்பான்சர்ஷிப். விளையாட்டுப் போட்டி, இசை நிகழ்ச்சி, விளையாட்டு அணி, கலை நிகழ்ச்சி என்று எதை ஸ்பான்சர் செய்தாலும் ஸ்பார்ன்சர்ஷிப்தான். மற்றவரால் நடத்தப்படும் நிகழ்ச்சிகளை ஸ்பான்சர் செய்தாலும் சரி, கம்பெனியே தன் முயற்சியால் ஒரு நிகழ்ச்சியை உரு வாக்கி ஸ்பான்சர் செய்தாலும் ஸ்பான் சர்ஷிப்தான். புணேயில் கிரிக்கெட் ஸ்டேடியத்தை வாங்கி அதற்கு ‘சஹாரா ஸ்டேடியம்’ என்று பெயர் வைத்து கம்பெனி பெயரை பிர பலப்படுத்தும் முயற்சியும் சாட்சாத் ஸ்பான்சர்ஷிப் தான்.

பிராண்ட் பிரபலமாக…

பிராண்ட் வளர்ப்பில் ஸ்பான்சர்ஷிப் முக்கிய பங்கு வகிக்கிறது. விளம்பரம் ஒரு இடைச்செருகல். வாடிக்கையாளர் வாழ்க்கையில் மூக்கை நுழைக்கும் இடைஞ்சல். ஆனால் ஸ்பான்சர்ஷிப் என்பது வாடிக்கையாளர் உணராதபடி அவர் உள்ளத்தில் ஊடுருவும் உட்டா லங்கடி வேலை. ‘விஜய் அவார்ட்ஸ்’ நிகழ்ச்சியில் விளம்பர பிரேக் வந்தால் ‘சே திருப்பியும் விளம்பர பிரேக்கா’ என்று தோன்றும் நமக்கு விஜய் அவார்ட்ஸ் என்று நாமே சொல்லும் போதேல்லாம் பிராண்ட் பெயரையும் சேர்த்துச் சொல்கிறோம் என்று தோன் றுவதில்லை!

நினைவிலிருப்பது எதனால்?

இருபது வருடங்களுக்கு முன் னால் வந்த டீவி நிகழ்ச்சிகள் எத்தனை ஞாபகத்தில் இருக்கிறது? ஆனால் ‘பெப்சி உங்கள் சாய்ஸ்’ மறந் திருக்காதே. அந்த நிகழ்ச்சியில் வந்த பெப்சி விளம்பரங்களைக் கூட மறந்திருப்பீர்கள். ஆனால் நிகழ்ச்சி யின் பெயரை, ஸ்பான்சர் செய்த பிராண்டை இன்னமும் மறக்கவில்லை. இவ்வளவு ஏன், அந்த நிகழ்ச்சியை தொகுத்து அளித்தவர் பெயரோடு பெப்சி அடைமொழி சேர்த்துத் தானே இன்று வரை அழைக்கிறோம்? இது தான் ஸ்பான்சர்ஷிப்பின் மகாத்மியம்!

மாற்று வழி

பிராண்டுக்கு விளம்பரம் பெற மட்டுமல்ல ஸ்பான்சர்ஷிப். பிராண்டின் தன்மைகளை, பெருமைகளை உல கிற்குத் கூறவும் ஸ்பான்சர்ஷிப் தேவை. நம்பர் ஒன்னாய் திகழும் பிராண்ட் அதை விளம்பரங்களில் கூறிக்கொண்டால் பீற்றிக்கொள்வது போலிருக்கும். கதை விடறான் என்று கூட பலர் கூறலாம். ஆனால் அதே பிராண்ட் லீடர்ஷிப்பை நிலைநாட்ட ஸ்பான்சர்ஷிப்பை பயன்படுத்தலாம்.

டூத்பேஸ்ட் மார்க்கெட்டின் லீடர் யார் என்று கேட்டால் ‘கோல்கேட்’ என்று கரெக்ட்டாக கூறுவீர்கள். கடைகளில் பார்ப்பதாலும் விளம்பரங்களில் கேட்பதால் மட்டுமல்ல இது. கோல்கேட் நாடு முழுவதும் பள்ளிகளுக்கு சென்று டெண்டல் கேம்ப் நடத்துகிறது. பல ஊர்களில் பல் சிகிச்சை முகாம்களை ஸ்பான்சர் செய்கிறது. இதனால் தான் உங்களுக்கு கோல்கேட் லீடர் என்று தோன்றுகிறது.

பிராண்டின் தன்மைகளை நிலை நாட்டுவதோடு ஸ்பான்சர்ஷிப் பிராண் டிற்கு ஆழத்தையும் அழகையும் கொடுக்கிறது. அதனாலேயே கையில் காசிருக்கிறது, எத்தையாவது ஸ்பான்சர்ஷிப் செய்வோம் என் றில்லாமல் சரியானதை செலக்ட் செய்து, செவ்வனே ஸ்பான்சர்ஷிப் செய்து செம்மையாய் பயன் பெற வழி முறைகள் உண்டு. அதைப்பார்ப்போம்.

குறிக்கோள் முக்கியம்

ஸ்பான்சர் செய்ய மூன்று குறிக்கோள்கள் உண்டு. பிராண்டைத் தெரியப்படுத்தலாம், பிராண்ட் தன்மையை பறைசாற்றலாம், வாடிக் கையாளரோடு உறவை வளர்க்கலாம். பிராண்டிற்கேற்ற தெளிவான குறிக்கோளை வரையறுத்து அதற்கேற்ப ஸ்பான்சர்ஷிப் செய்வதே சிறந்தது. ஒரு காலத்தில் ‘டிஎல்எப்’ என்ற கட்டுமானக் கம்பெனியைப் பற்றி பலருக்கு தெரியாது. நாடு முழு வதும் தெரியவேண்டும் என்ற குறிக்கோளுடன் அக்கம்பெனி ‘ஐபிஎல்’லை ஸ்பான்சர் செய்து ‘டிஎல்எப் ஐபிஎல்’ என்று கூற வைத் தது. ஒரு சில வருடங்களிலேயே நாடு முழுவதும் அறியப்பட்டது!

பொருத்தமான தேர்வு அவசியம்

பிரபல நிகழ்ச்சி, பாப்புலர் விளையாட்டு என்று மட்டும் பார்த்து ஸ்பான்சர் செய்யாமல் பிராண்டின் தன்மைக்கேற்ப தேர்ந்தெடுத்து ஸ்பான்சர் செய்வது புத்திசாலித்தனம். மசாலா பிராண்ட் என்பதற்காக டீவியில் வரும் மிட்நைட் மசாலா நிகழ்ச்சியை ஸ்பான்சர் செய்தால் எப்படி இருக்கும்?

அதுவே கிரிக்கெட் மாட்ச் நேரடி ஒளிபரப்பு துவங்கும் முன் அன்றைய சீதோஷ்ண நிலையை விவரிக்கும் பகுதியை ‘ஏஷியன் பெயிண்ட்ஸ் ஆல் வெதர் கோட்டிங்’ ஸ்பான்சர் செய்யும் போது மிகப் பொருத்தமாக இருப்பதை கவனியுங்கள்.

கூட்டத்தோடு கோவிந்தா போடாதீர்கள்

டீவியில் பண்டிகை கால சிறப்பு நிகழ்ச்சிகள் வெகு பாப்புலர் என்று அதை ஸ்பான்சர் செய்கிறார்கள் பலர். அதனால்தான் அன்றைய நிகழ்ச் சிகளை அளிப்பவர்கள் என்று டீவி சேனல் கூற ஆரம்பித்தால் அடுத்த பண்டிகை வரை பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. அது போல் கூட்டத்தோடு கோவிந்தா போடாமல் தனியாய், தெளிவாய் பிராண்ட் தெரி யும்படியான ஸ்பான்சர்ஷிப் நிகழ்ச்சி களை தேர்ந்தெடுப்பது பலன் தரும்.

ஸ்பான்சர்ஷிப்பை தனதாகிக்கொள்ளவும்

ஒரு முறை செய்தோம், இரண்டு மாதம் செய்தோம் என்றில்லாமல் செய்யும் ஸ்பான்சர்ஷிபை பிராண்ட் தனதாக்கிக்கொள்ளவேண்டும். ‘பிலிம்பேர்’ பத்திரிகை வருடந் தோறும் பிலிம்பேர் அவார்டுகள் நிகழ்ச்சியை நடத்துகிறது. இன்றல்ல, நேற்றல்ல, 1953ஆம் ஆண்டிலிருந்து! அதனால்தான் சினிமா அவார்டுகள் என்றாலே பிலிம்பேர் தான் நினை விற்கு வருகிறது.

அதனாலேயே இருக்கும் நிகழ்ச்சியை ஸ்பான்சர்ஷிப் செய்வதை விட பிரத்யேகமாக ஒரு நிகழ்வை, நிகழ்ச்சியை உருவாக்கி ஸ்பான்ஸர் செய்வது ஸ்மார்டானது. எப் எம் ரேடியோவில் காலை, மாலை கார் ஓட்டுபவர்கள் டிராபிக் நிலவரம் தெரிந்துகொள்ள ஏதுவாக ‘மாருதி கம்பெனி’ ஒரு ஸ்பெஷல் நிகழ்ச்சியை உருவாக்கி ‘மாருதி டிராபிக் பீட்’ என்று பெயரிட்டு சிட்டி டிராபிக் நிலவரத்தை கூறுகிறது. 1999ஆம் ஆண்டிலிருந்து வெற்றிகரமாக செயல் படுத்தி வருகிறது.

பப்ளிசிட்டி பெற முயற்சிக்கவும்

வெறுமனே ஸ்பான்சர்ஷிப் செய்ய பணத்தை கொடுத்துவிட்டு அக்கடா என்று போய் உட்காரக்கூடாது. ஸ்பான் சர் செய்யும் நிகழ்ச்சியை முடிந்த அளவு பிரபலப்படுத்தி அதற்கு பப்ளிசிட்டி தேட வேண்டும்.

சென்னையின் ஆத்மா என்று கருதப்படும் மைலாப்பூரில் வருடந்தோறும் ‘மயிலாப்பூர் திருவிழா’ என்ற ஒன்று நடத்தப்பட்டு அதில் கோலப் போட்டி, நடன நிகழ்ச்சிகள், பாட்டுக் கச்சேரிகள் போன்ற பாரம்பரியத்தை பிரதி பலிக்கும் நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

இதை ஆண்டுதோறும் ‘சுந்தரம் பைனான்ஸ்’ ஸ்பான்சர் செய்வ தால் ‘சுந்தரம் பைனான்ஸ் மயிலாப் பூர் பெஸ்டிவல்’ என்றே அழைக்கப் படுகிறது. இன்னமும் கூட அந்தக் கம்பெனி நிகழ்ச்சியை பிரபலப் படுத்தினால் திருவிழா செய்தி மேலும் பலரைச் சென்றடையும். சுந்தரம் பைனான்ஸ் பெயரோடு சேர்ந்து!

எல்லா ஸ்பான்சர்ஷிப்புகளும் கரை சேர்வதில்லை. அவசர கோலத் தில் அள்ளித் தெளிக்கப்படும் ஸ்பான்சர் ஷிப்கள் டைட்டானிக் ஷிப் போல் காணாமல் போகின்றன. பொருத்த மாய் தேர்ந்தெடுத்து, தெளிவாய் வடிவமைத்து, திறமையாய் நிர் வகித்தால் வெற்றி உங்களை சப்ஜா டாய் ஸ்பான்சர் செய்யும்!

satheeshkrishnamurthy@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x