

ஏப்ரல் மாத நுகர்வோர் பணவீக்கம் நான்கு மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிந்து 4.87 சதவீதமாக குறைந்துள்ளது. கடந்த மார்ச் மாதம் இது 5.25 சதவீதமாகவும், 2014-ம் ஆண்டு மார்ச் மாதம் 8.38 சதவீதமாகவும் இருந்தது.
நுகர்வோர் உணவுப் பணவீக்கம் ஏப்ரலில் 5.11 சதவீதமாக இருந்தது. கடந்த மார்ச் மாதம் 6.14 சதவீதமாகவும், கடந்த வருடம் இதே காலத்தில் 9.21 சதவீதமாகவும் இருந்தது.
பணவீக்கம் குறைந்திருப்பதை சந்தை வல்லுநர்கள் வரவேற்றிருக்கின்றனர். வட்டி விகிதம் குறையும் என்ற எதிர்பார்ப்பு காரணமாக வரும் காலத்திலும் பணவீக்கம் குறையும் என்றே பெரும்பாலான வல்லுநர்கள் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.
ஐஐபி சரிவு
மார்ச் மாத தொழில் உற்பத்தி குறியீடு சரிந்தது. கடந்த பிப்ரவரி மாதத்தில் 5 சதவீதமாக இருந்த தொழில் உற்பத்தி குறியீடு இப்போது 2.1 சதவீதமாக சரிந்துவிட்டது. இது கடந்த ஐந்து மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிவு ஆகும். மார்ச் மாதத்தில் சுரங்கம், உற்பத்தி, மின்சாரம் ஆகிய துறைகள் வளர்ச்சி அடைந்திருக்கின்றன. கன்ஸ்யூமர் டியூரபிள் துறை சரிவை சந்தித்திருக்கிறது.
சென்செக்ஸ் 630 புள்ளிகள் சரிவு
கடந்த வெள்ளிக்கிழமை மற்றும் திங்கள் கிழமைகளில் பங்குச்சந்தைகள் உயர்ந்து முடிந்தாலும் நேற்றைய வர்த்த கத்தில் கடும் சரிவை சந்தித்தது. சிறு முதலீட்டாளர்கள் மற்றும் நிறுவன முதலீட்டாளர்களிடையே விற்கும் போக்கு அதிகமாக இருந்து. நேற்று மாலை ஐஐபி மற்றும் பணவீக்கம் பற்றிய தகவல் கள் வெளியாக இருந்ததால் முதலீட்டாளர்களிடையே விற்கும் போக்கு அதிகமாக இருந்தது.
தவிர வரி சீர்த்திருத்தங்கள் மற்றும் நிலம் கையகப்படுத்தும் மசோதா மேலும் தாமதமானதால் முதலீட்டாளர்கள் பங்குகளை விற்க ஆரம்பித்தார்கள்.
இதனால் சென்செக்ஸ் 629 புள்ளிகள் சரிந்து 26877 புள்ளியிலும், நிப்டி 198 புள்ளிகள் சரிந்து 8126 புள்ளியிலும் முடிவடைந்தன. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் சரிந்தது. ஒரு டாலர் 64.17 ரூபாய்க்கு வர்த்தகமானது. அனைத்துத் துறை குறியீடுகளும் சரிந்து முடிந்தன. குறிப்பாக ரியால்டி துறை குறியீடு 3.3 சதவீதம் சரிந்தது. மின்சாரம், கேபிடல் குட்ஸ், வங்கி ஆகிய துறை குறியீடுகளும் கடுமையாக சரிந்தன.
ரூ. 2 லட்சம் கோடி இழப்பு
பங்குச்சந்தைகள் சரிந்ததால் முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பு 2 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு சரிந்தது. பிஎஸ்இ-யில் உள்ள பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.2.07 லட்சம் கோடி சரிந்து ரூ.99.05 கோடியாக சந்தை மதிப்பு இருக்கிறது. கடந்த இரு வர்த்தக தினங்களாக 908 புள்ளிகள் அளவுக்கு உயர்ந்த சந்தை நேற்று 629 புள்ளிகள் சரிந்து முடிந்தது.
சென்செக்ஸ் பட்டியலில் இருக்கும் 30 பங்குகளில் டாக்டர் ரெட்டீஸ் மற்றும் ஹீரோ மோட்டோ கார்ப் தவிர அனைத்து பங்குகளும் சரிந்து முடிவடைந்தன.