

நிலக்கரி சுரங்க வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள காங்கிரஸ் தலைவரும் தொழிலதிபருமான நவீன் ஜிண்டால், ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் மது கோடா, முன்னாள் மத்திய நிலக்கரித்துறை இணையமைச்சர் தாசரி நாராயண ராவ் உள்ளிட்டோருக்கு சிறப்பு நீதிமன்றம் நேற்று ஜாமீன் அளித்துள்ளது.
இவர்கள் தவிர இவ்வழக்கில் தொடர்புடையதாக குற்றம் சாட்டப்பட்ட மற்ற 7 பேருக்கும் ஜாமீன் அளிக்கப்பட்டுள்ளது.
நிலக்கரி சுரங்க வழக்கில் முறைகேடு செய்ததாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. குற்றம் சாட்டப்பட்ட ஜிண்டால், தாசரி நாராயண ராவ், முன்னாள் நிலக்கரித்துறைச் செயலர் ஹரிஷ் சந்திரா உள்ளிட்டோர் நேற்று சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி பாரத் பிரஷார் முன்பாக ஆஜராகி ஜாமீன் அளிக்கும்படி தனி மனுவை தாக்கல் செய்தனர்.
ஜிண்டால் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கு தொடர்பாக எப்போது தேவைப்பட்டாலும் ஜிண்டால் ஆஜராவார் என்று நீதிபதியிடம் உத்தரவாதம் அளித்தார். இதேபோல மற்றவர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்களும் தங்கள் தரப்பைச் சேர்ந்தவர்கள் தேவைப்படும்போது நீதிமன்றத்தில் நிச்சயம் ஆஜராவதாக உறுதியளித்தனர்.
இதையடுத்து அனைவருக்கும் ஜாமீன் அளிப்பதாக நீதிபதி குறிப்பிட்டார்.
குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் நீதிமன்ற அனுமதியின்றி வெளிநாடு செல்லக் கூடாது என்று குறிப்பிட்ட நீதிபதி இந்த வழக்கு விசாரணையை ஜூன் 1-ம் தேதிக்கு ஒத்தி வைப்பதாகக் குறிப்பிட்டார்.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட புதுடெல்லி எக்ஸிம் பிரைவேட் லிமிடெட் நிறுவன இயக்குநர் சுரேஷ் சிங்கால், ஜிண்டால் ரியால்டி பிரைவேட் லிமிடெட் நிறுவன இயக்குநர் ராஜீவ் ஜெயின், ககன் ஸ்பாஞ் அயர்ன் பிரைவேட் லிமிடெட் நிறுவன இயக்குநர்கள் கிரிஷ் குமார் சுனேஜா, ராதா கிருஷ்ண சரப் ஆகியோரும், சௌபாக்கியா மீடியா லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கே. ராம கிருஷ்ண பிரசாத் மற்றும் சார்டர்ட் அக்கவுன்டன்ட் கியான் ஸ்வரூப் கார்க் ஆகியோருக்கும் ஜாமீன் அளிக்கப்பட்டது.