

ரிசர்வ் வங்கி வசம் 557.75 டன் தங்கம் கையிருப்பில் உள்ளதாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.
மாநிலங்களவையில் எழுத்து மூலமாக அளித்த பதிலில் அவர் மேலும் கூறியது: நாட்டிலுள்ள பொதுமக்கள் வசம் 20 ஆயிரம் டன்னுக்கும் அதிகமான தங்கம் கையிருப்பில் இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. மக்களிடம் உள்ள தங்கத்தின் துல்லியமான விவரம் குறித்த தகவல் அரசின் வசம் இல்லை.
2014-15-ம் நிதி ஆண்டில் 3,441 கோடி டாலர் அளவுக்கு தங்கம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதேபோல 2013-14-ம் நிதி ஆண்டில் 2,870 கோடி டாலர் மதிப்பிலான தங்கமும், 2012-13-ம் நிதி ஆண்டில் 5,382 கோடி டாலர் மதிப்பிலான தங்கமும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
1999-ம் ஆண்டு மத்திய அரசு தங்க சேமிப்புத் திட்டத்தைக் கொண்டு வந்தது. இதன் மூலம் வெறுமனே பயன்படுத்தப்படாமல் இருக்கும் தங்கத்தை பயன்படுத்திக் கொள்ள அரசு இத்திட்டத்தைக் கொண்டு வந்தது.
உலகிலேயே அதிக அளவில் தங்கத்தை பயன்படுத்தும் நாடுகளில் இந்தியா முன்னிலையில் உள்ளது. ஆண்டுக்கு 900 டன் அளவுக்கு தங்கம் இறக்குமதி செய்யப்படுகிறது.
கடந்த ஆண்டு இறக்குமதி செய்யப்படும் தங்கத்தின் மீதான கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி தளர்த்தியது. வர்த்தகர்கள் நகை பயன்பாட்டுக்காக இறக்குமதி செய்யும் தங்கத்தில் 20 சதவீதத்தை கட்டாயம் ஏற்றுமதி செய்ய வேண்டும் என்ற நிபந்தனை தளர்த்தப்பட்டது. இதைத் தொடர்ந்து தங்கம் இறக்குமதி செய்யப்படுவது தொடர்ந்து அதிகரித்துள்ளதாக ஜேட்லி குறிப்பிட்டார்.
ரூ. 62,398 கோடி வரிச்சலுகை
நிறுவனங்களுக்கு அளிக்கப் பட்ட வரிச் சலுகை மற்றும் ஊக்கத் தொகை ஆகியவை காரணமாக அரசுக்கு ரூ. 62,398.60 கோடி வருமான இழப்பு ஏற்பட்டதாக மற்றொரு கேள்விக்கு பதிலளிக்கையில் ஜேட்லி தெரிவித்தார். 2014-15-ம் நிதி ஆண்டில் ஏற்பட்ட இந்த வருமான இழப்பானது முந்தைய நிதி ஆண்டில் ஏற்பட்டதைக் காட்டிலும் 8 சதவீதம் அதிகம் என்றார்.
2013-14-ம் நிதி ஆண்டில் நிறுவனங்களுக்கு ரூ. 57,793 கோடி வரிச் சலுகை அளிக்கப்பட்டது.
ஏற்றுமதியை ஊக்குவிப்பதற் காக வரிச் சலுகை அளிக்கப் படுகிறது. இதேபோல பிராந்திய மேம்பாட்டுக்காகவும், கட்டமைப்பு வசதிகளை மேம் படுத்துவதற்காகவும், வேலை வாய்ப்பை ஏற்படுத்துவதற்காக வும், கிராமப்புற மேம்பாட்டுக் காகவும், அறிவியல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்காகவும் ஊக்குவிப்பு சலுகைகள் அளிக் கப்படுகின்றன.
கூட்டுறவு அமைப்பு கள் மற்றும் தனியாரிடம் சேமிப்பை ஊக்குவிப்பதற்காகவும் சலுகை அளிக்கப்படுகிறது. அதேபோல அறக்கட்டளைகளுக்கு அளிக்கப் படும் நன்கொடைகளுக்காக வும் வரிச் சலுகை அளிக்கப்படு கிறது.