

இந்தியப் பங்குச் சந்தைகள் நேற்று ஏற்றத்தைக் கண்டன. மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 373 புள்ளிகள் ஏற்றம் கண்டு 27571 புள்ளிகள் முடிந்தது.
தேசிய பங்குச் சந்தையான நிப்டி 108 புள்ளிகள் ஏற்றத்தைக் கண்டு 8235 புள்ளிகள் முடிந்தது. வங்கிப் பங்குகள் நேற்றைய வர்த்தகத்தில் விலை ஏற்றம் கண்டது. வர்த்தகத்தின் இடையில் சென்செக்ஸ் 26,800 புள்ளிகளுக்கும் கீழே சரிந்தும் வர்த்தகம் ஆனது.
நேற்று முன்தினம் வெளியிடப்பட்ட தொழில்துறை உற்பத்திக் குறியீடு புள்ளிவிவரங்கள் மற்றும் நுகர்வோர் பணவீக்க விகித புள்ளிவிவரங்கள் சந்தை வர்த்தகத்திலும் எதிரொலித்தது.
இந்த புள்ளிவிவரங்கள் அடுத்த மாதம் ரிசர்வ் வங்கி வெளியிட உள்ள நிதிக் கொள்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று சந்தை நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
வங்கித்துறை குறியீடு 2.64 சதவீதம் வரை ஏற்றம் கண்டது. கேபிடல் கூட்ஸ் 1.81 சதவீதமும், ஆட்டோமொபைல் துறை 1.71 சதவீதமும் ஏற்றத்தைக் கண்டன.
முக்கியப் பங்குகளான ஆக்ஸிஸ் வங்கி 4.91 %, ஐசிஐசிஐ வங்கி 3.07%, கெயில் 3.04%, அம்புஜா சிமென்ட்ஸ் 2.72%, ஐடிஎப்சி 2.72 % ஏற்றத்தைக் கண்டன. லுபின் பங்குகள் 3.36 சதவீதம் வரை இறக்கத்தைக் கண்டது. ஹிண்டால்கோ 2.98%, பார்தி ஏர்டெல் 2.30%, என்டிபிசி 2.29% இறக்கத்தைச் சந்தித்தன.
நேற்றைய வர்த்தகத்தில் 1,644 பங்குகள் ஏற்றத்தைக் கண்டன. 1061 பங்குகள் இறக்கம் கண்டிருந்தன. 158 பங்குகள் எந்த மாற்றங்களும் இல்லாமல் வர்த்தகம் ஆனது. சர்வதேச சந்தைகளைப் பொறுத்தவரையில் நாஸ்டாக், ஹாங்சேங் சந்தைகள் இறக்கத்தில் இருந்தன. எப்டிஎஸ்இ மற்றும் நிக்கி சந்தைகளில் ஏற்றமான போக்கு நிலவி வருகிறது.