

ராம் சேவக் சர்மா உத்திரபிரதேசத்தில் பிறந்தவர். இந்திய தொலைத்தொடர்பு துறை ஆணையத்தின் புதிய செயலாளராக (டிராய்) சமீபத்தில் நியமிக்கப்பட்டார்.
அலாகாபாத் பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றவர். ஐஐடி கான்பூரில் முதுகலை கணிதம் முடித்தார். பிகார் பிரிவு ஐஏஎஸ் அதிகாரியாக 1978-ம் ஆண்டு இணைந்தார்.
1995-ம் ஆண்டு வரை பிகார் அரசின் பல முக்கிய பிரிவுகளில் பணியாற்றினார். மாவட்ட ஆட்சியர், பாசனம், போக்குவரத்து துறையின் இணை செயலாளர் ஆகிய பொறுப்புகளை வகித்தார்.
1995-ம் ஆண்டு மத்திய அரசு பிரிவுக்கு மாற்றப்பட்டார். நிதி அமைச்சகத்தின் இணை செயலாளராக இணைந்தார். இதற்கிடையே விடுப்பு எடுத்து கலிபோர்னியா பல்கலையில் முதுகலை கணிப்பொறி அறிவியல் முடித்தார்.
ஜார்கண்ட் மாநில பிரிவுக்கு மாறியவர் அங்கு தலைமைச் செயலாளராக பணியாற்றினார். ஆதார் அட்டை வழங்கும் திட்டத்தின் இயக்குநராக இருந்தார். (நந்தன் நிலகேணிக்கு அடுத்த இடத்தில்)
பொது நிர்வாகத்தில் சிறப்பாக செயல்பட்டதற்கு பிரதமரின் விருது 2008-ம் ஆண்டு இவருக்கு வழங்கப்பட்டது.