

மைக்ரோமேக்ஸ் செல்போன் தயாரிப்பு நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக (சிஇஓ) விநீத் தனேஜா நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை சாம்சங் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக இருந்த அவர், ,இப்போது மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தில் சேர்ந்துள்ளார்.
ஸ்மார்ட்போன் தயாரிப்பில் இரண்டாவது பெரிய நிறுவனமாகத் திகழ்கிறது மைக்ரோமேக்ஸ். தனது நிலையை மேலும் ஸ்திரப்படுத்திக் கொள்ள கொரியாவைச் சேர்ந்த சாம்சங் நிறுவனத்தில் தலைமைப் பொறுப்பில் இருந்த விநீத் தனேஜாவை தன் பக்கம் இழுத் திருக்கிறது மைக்ரோமேக்ஸ்.
நிறுவனத்தின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு விநீத்தின் வரவு வலு சேர்த்துள்ளதாக மைக்ரோமேக்ஸ் நிறுவனர்களில் ஒருவரான ராகுல் சர்மா தெரிவித்துள்ளார்.
நுகர்வோர் பொருள் விற்பனைத் துறையில் 25 ஆண்டு அனுபவம் மிக்கவர் விநீத். ஹிந்துஸ்தான் யூனி லீவர், நோக்கியா, பார்தி ஏர்டெல் ஆகிய நிறுவனங்களிலும் இவர் பணிபுரிந்துள்ளார். ஐஐடி ரூர்க்கி-யில் பொறியியல் பட்டமும், கொல்கத்தா ஐஐஎம்-மில் எம்பிஏ-வும் படித்தவர். மைக்ரோமேக்ஸ் தலைமைச் செயல் அதிகாரியாக இருந்த தீபக் மெஹ்ரோத்ரா கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சொந்த காரணங்களுக்காக பதவியை ராஜிநாமா செய்தார்.