Last Updated : 01 May, 2015 11:46 AM

 

Published : 01 May 2015 11:46 AM
Last Updated : 01 May 2015 11:46 AM

உலகின் முதலாவது கார் முதல் அம்பாசிடர் வரை: கோவைக்கு பெருமை சேர்க்கும் ஜி.டி. கார் அருங்காட்சியகம்

நவீன உலகில் உச்சபட்ச விலை உடைய காரைக் கூட சாலையில் பார்த்து விட முடியும். ஆனால், 1886-ம் ஆண்டு வடிமைக்கப்பட்ட உலகின் முதல் காரையும், பல்வேறு நாடுகளில் மக்களின் பயன்பாட்டுக்காக முதன்முதலில் கொண்டு வரப்பட்ட கார் வகைகளையும் பார்க்க முடியுமா என்றால் அதற்கான சாத்தியம் குறைவுதான்.

அந்த சாத்தியத்தை உரு வாக்கிக் கொடுத்துள்ளது ஜி.டி.நாயுடு அறக்கட்டளை. பழம் பெரும் கார்களைக் கொண்டு அருங்காட்சியம் அமைக்க வேண்டும் என்பது இந்தியாவின் எடிசன் என்றழைக்கப்படும் அந்த ஜி.டி.நாயுடுவின் விருப்பங்களில் ஒன்று. அந்த விருப்பத்துக்கு உயிர் கொடுத்துள்ளார் அவரது மகன் ஜி.டி.கோபால்.

கோவை அவிநாசி சாலையில் 19 ஆயிரம் சதுர அடியில் விரிந்து காணப்படும் ஜி.டி.அருங் காட்சியத்தில், பழம்பெரும் கார்களுக்காக கடந்த 27-ம் தேதி முதல் தொடங்கப்பட்டுள்ள பிரத்தியேக அருங்காட்சியகம் ஆட்டோ மொபைல் தொழில்நுட்ப பிரிவினரை மட்டும் இல்லாது சாதாரண மக்களையும் ஈர்த்துள்ளது.

அருங்காட்சியகத்தை பார்த்து விட்டு வெளியே வருபவர் களிடம் தற்கால ஆட்டோ மொபைல் தொழிலின் வளர்ச்சி சாதாரணமாகத்தான் தோன்றும். தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சி நிறைந்த இந்த காலத்தில் ஏற்படுத்தும் தாக்கத்தைக் காட் டிலும் ஒரு நூற்றாண்டுக்கு முன்பு தயாரிக்கப்பட்ட கார்கள் ஒவ்வொன்றும் தாக்கத்தை ஏற்படுத்துவதாக உள்ளதை உணர முடிகிறது. மொத்தம் 70 பழம் பெரும் கார்களுடன் கவனத்தைக் கவருகிறது அருங்காட்சியம். முதன்முதலில் வடிவமைக்கப்பட்ட பென்ஸ் கார், அமெரிக்காவில் முதல்முதலில் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்ட ஃபோர் டு கார், ஜெர்மனியில் ஹிட்லரால் மக்கள் பயன்பாட்டுக்காக தயாரிக் கப்பட்ட உலக அளவில் விற்பனையில் சாதனைபடைத்த ஃபோக்ஸ்வேகன் கார் ஆகியவை பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

மேலும், உலகின் முதல் முதலில் இன்ஜினை முன்புறமாகக் கொண்டு இங்கிலாந்தில் தயாரிக்கப்பட்ட மேரிஸ் மினி கார், ரோட்டரி இன்ஜினுடன் முதன்முதலில் தயாரிக்கப்பட்ட ஜப்பானின் மாஸ்தா - ஆர்.எச்.8 கார், அமெரிக்க அதிபர்கள் பயன்படுத்திய கருப்பு நிறத்துடன் மிக நீளமாக லிமோ மாடல் கார், மைசூர் மகாராஜாவால் பயன்படுத்தப்பட்ட ஸ்பெயினில் தயாரிக்கப்பட்ட கிஸ்கானா சூஸ் கார், இந்தியாவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய அம்பாசிடர் கார் என பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

பிரிட்டிஷ், ஜெர்மன், பிரெஞ்ச், அமெரிக்கா, ஸ்பெ யின், ஜப்பான், இந்தியா என நாடுகளின் கார் வகைகள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

ஒவ்வொரு கார் உருவான பின்னணியும், வடிவமைத்த தொழில்நுட்ப கலைஞரும், எவ்வ ளவு விலையில் முதலில் தயாரித்து வெளி வந்தது, எந்த நிறுவனம் தயாரித்தது, என்னென்னெ அம்சங்கள் நிறைந்தது என அனைத்து தகவல்களும் காட்சிப் படுத்தப்பட்டுள்ள கார்களின் அருகிலே வைக்கப்பட்டுள்ளன.

"எனது தந்தை ஜி.டி.நாயுடு, அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட ஓல்ட்ஸ் மொபைல், டாட்ஜ், செவரலே, பென்ஸ் 705 மற்றும் ஜெர்மனியின் ரோல்ஸ் ராய் 20 ஆகிய கார் மாடல்களை பயன்படுத்தினார்.

அந்த கார்களைக் கொண்டு பிரத்தியேக அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்ற விருப்பம் அவருக்கு இருந்தது.

அவரைப் போன்றே கார்கள் மீது எனக்கும் அதீத ஈடுபாடு இருக்கிறது. அருங்காட்சியகம் அமைக்கும் எண்ணம் எனக்கும் ஆரம்பத்திலேயே இருந்தது. இதற்காக, கடந்த 40 ஆண்டுகளாக பழம்பெரும் புகழ்மிக்க கார்களை சேகரிக்கும் வேளையில் ஈடுபட்டோம்.

அவ்வாறு, நாங்கள் 60 கார்களை சேகரித்தோம். மீதமுள்ள கார்கள் நாங்கள் அமைத்த அருங்காட்சியத்துக் காக 8 பேரால் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.

அந்த காலத்தில் உருவான தொழில்நுட்பத்தின் மதிப்பை தற்போதைய தலைமுறை அறிந்து கொள்ள வேண்டும். அது குறித்து ஆராய வேண்டும் என்ற ஒரே நோக்கம் தான் அருங்காட்சியகம் உருவாகுவதற்கு முக்கிய காரணம்.

கார்களை சேகரித்தபின்னர் கடந்த 2 ஆண்டுகளாக அருங் காட்சியக கட்டமைப்பை உருவாக்கினோம். இன்னும் சில பழமைவாய்ந்த கார்களை பெற்று அருங்காட்சியத்தை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளோம் என்கிறார் ஜி.டி.நாயுடு அறக்கட்டளையின் அறங்காவலர் ஜி.டி.கோபால்.

அருங்காட்சியக நுழைவு வாயிலிலேயே பெரியார் பயன்படுத்தி பிரசார வாகனம், ஜி.டி.நாயுடு தயாரித்த பேருந்தும் நிறுத்தப்பட்டுள்ளது.

ஸ்பெயினில் தயாரிக்கப்பட்ட கிஸ்கானா சூஸ் வகை கார் தற்போது ஜி.டி. நாயுடு அருங்காட்சியகத்தைத் தவிர ஆசியாவிலேயே கிடையாது எனக் கூறப்படுகிறது.

இந்த அருங்காட்சியகத்தின் மற்றுமொரு சிறப்பு நாட்டில் இதுபோன்ற ஆட்டோமொபைல் அருங்காட்சியகம் இதற்கு முன்பாக நிரந்தரமாக அமைக்கப் படவில்லை என்பதும்தான். அருங்காட்சியகத்தில் உள்ளே நுழைந்து வெளியே வரும்போது வாகனங்கள் உருவான வரலாறில் தொடங்கி நவீன கால ஆட்டோமொபைல் வரை தெரிந்து கொள்ள முடிகிறது.

படங்கள்: ஜே.மனோகரன்.

saravanan.m@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x