Last Updated : 21 May, 2015 10:26 AM

 

Published : 21 May 2015 10:26 AM
Last Updated : 21 May 2015 10:26 AM

அமெரிக்க வர்த்தக ரகசியங்களை திருடியதாக 6 சீனர்கள் மீது குற்றச்சாட்டு பதிவு

அமெரிக்க வர்த்தக ரகசியங்களை திருடியதாக 6 சீன பிரஜைகள் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப் பட்டுள்ளது.

அமெரிக்காவில் உள்ள இரண்டு நிறுவனங்களிலிருந்து வயர்லெஸ் தொழில்நுட்பத்தைத் திருடியதாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சீன பிரஜைகளான ஹோ ஷாங், வெய் பாங் மற்றும் ஹுய்சூய் ஷாங் ஆகிய மூவரும் அமெரிக்கா வில் உள்ள ஸ்கைவொர்க்ஸ் சொல் யூஷன்ஸ் இன்கார்ப்பரேஷன் மற்றும் அவாகோ டெக்னாலஜீஸ் நிறுவனங்களிலிருந்து தொழில் நுட்பத்தைத் திருடியுள்ளனர். இவர்கள் மூவரும் பல்கலைக் கழகத்தில் சந்தித்து இந்த சதிச் செயலை புரிந்ததாக வழக்கறிஞர் குற்றம் சாட்டினார்.

32 பக்கங்களைக் கொண்ட குற்றப் பத்திரிகையில் 6 பேர் மீது வர்த்தக ரகசியங்களை திருடியதாக குற்றம் சாட்டப்பட்டது. கடந்த சனிக்கிழமை லாஸ் ஏஞ்செல்ஸ் விமான நிலையத்தில் ஹோ ஷாங்கை போலீஸார் கைது செய்த போது இந்த விவரம் தெரிய வந்தது. சீனாவிலிருந்து அமெரிக்காவில் நடைபெற உள்ள அறிவியல் மாநாட்டில் பங்கேற்க வந்தபோது ஹோ ஷாங் கைது செய்யப்பட்டார். மற்ற 5 பேரும் சீனாவில் உள்ளதாகத் தெரிகிறது.

அமெரிக்க தொழில்நுட்பத்தைத் திருடுவது என்பது நாட்டின் வளர்ச்சியைப் பெரிதும் பாதிக்கக் கூடியதாக உள்ளது என்றும், இது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்த லாக உள்ளது என்றும் அமெரிக்க தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள் ளார். மற்ற நாடுகளைக் காட்டிலும் சீனாவிலிருந்தான் அச்சுறுத்தல் அதிகமாக உள்ளதாக அவர்கள் குறிப்பிட்டனர்.

வர்த்தக ரகசியங்கள் திருடு போவதை அமெரிக்க அரசு கடுமை யான குற்றமாகக் கருதுவதாகக் காவல்துறை செய்தித் தொடர்பாளர் ஜெஃப் ராத்கே தெரிவித்தார்.

அமெரிக்க நிறுவனங்களைப் பாதுகாக்கும் நோக்கில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது மிகவும் முக்கியமான பிரச்சினையாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் இந்த நடவடிக்கை குறித்து வாஷிங்டனில் உள்ள சீன தூதரக அதிகாரிகள் கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை. சான் பிரான்சிஸ்கோவில் உள்ள சீன துணைத் தூதரக அதிகாரிகளுக்கு இத்தகைய வழக்கு விவரம் எதுவுமே தெரியவில்லை. அதனால் அவர்கள் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டனர்.

அமெரிக்க நிறுவனங்களி லிருந்து 2006-ம் ஆண்டிலிருந்தே ரகசியங்களை இவர்கள் திருடி யுள்ளனர். அமெரிக்க நிறுவனங் களில் சில காலம் ஹோ ஷாங், வெய் பாங் ஆகிய இருவரும் பணி யாற்றியதாக குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2006-ம் ஆண்டு அமெரிக்க பல்கலையில் இளங்கலை பட்டம் பெற்ற பிறகு, வெய் பாங் சீனா வுக்கு இணையதளம் மூலம் ஒரு செய்தியை அனுப்பியுள்ளார். அமெரிக்க தொழில்நுட்பங்களை திருடி அதன் அடிப்படையில் இடை யூறு அற்ற வயர்லெஸ் தொழில் நுட்ப ஆலையை சீனாவில் அமைப் பது என அப்போது மூன்று பேரும் திட்டமிட்டுள்ளனர்.

வயர்லெஸ் தொழில்நுட்பத்தைப் பெற்றால் ஆண்டுக்கு 100 கோடி டாலர் அளவுக்கு வருமானம் கிடைக்கும் என்றும் குறிப்பிட்டிருந்ததாக குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் ரகசிய குறியீடு, அதற்கான வரைமுறை, வடிவமைப்பு, திட்ட முறை உள்ளிட்டவற்றை மிகவும் ரகசியம் என குறிப்பிட்டு அனுப்பியுள்ளார்.

கடந்த வாரம் கைது செய்யப் பட்ட ஹோ ஷாங், திங்கள்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு உடனடியாக போலீஸ் காவலில் வைக்கப்பட்டார். அவருக்கு வழக்குரைஞர் வைத்து வாதிட அனுமதி அளிக்கப்பட்டதா என்ற விவரம் வெளியிடப்படவில்லை.

அமெரிக்காவில் பட்டம் முடித்த இம்மூவருக்கும் சீனாவின் டியான்ஜின் பல்கலைக்கழக அதிகாரிகளிடமிருந்து மிகுந்த ஆதரவு கிடைத்துள்ளதாகவும் குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

2006-ம் ஆண்டு ஸ்கைவொர்க்ஸ் சொல்யூஷன்ஸ் இன்கார்ப்பரே ஷன் நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்தார் ஹோ ஷாங். இந்நிறுவனம் மாசசூசெட்ஸில் வோபுர்ன் எனுமிடத்தில் அமைந்துள்ளது. கொலராடோ மாகாணம் போர்ட் காலின்ஸ் எனுமிடத்தில் உள்ள அவாகோ டெக்னாலஜீஸ் எனும் நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்தார் வெய் பாங். இந்நிறுவனத்தின் தலைமையகம் கலிபோர்னியா மாகாணம் சான் ஜோஸில் உள்ளது.

இந்நிறுவனத்தில் சேர்ந்த சில நாள்களிலேயே வெங் பாங், மற்ற இருவருக்கும் இணையதளம் மூலம் தகவல்களை அனுப்பியுள்ளார். அதில் என்னிடம் கூறப்பட்டதைப் போல இந்நிறுவனத்தின் அனைத்து செயல்பாடுகளையும் கூர்ந்து கவனித்து அனுப்புகிறேன். அதை அப்படியே சீனாவில் காப்பி செய்து பயன்படுத்த வேண்டியதுதான் என்று வெய் பாங் குறிப்பிட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

2009-ம் ஆண்டு ஹோ ஷாங் மற்றும் வெய் பாங் ஆகிய இருவரும் அமெரிக்க வேலையை விட்டுவிட்டு டியான்ஜின் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்களாக சேர்ந்தனர்.

இந்நிறுவனம் காப்புரிமை கோரி விண்ணப்பித்தபோதுதான் அவாகோ நிர்வாகிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஹோ ஷாங் தாக்கல் செய்திருந்த காப்புரிமையும், தங்கள் நிறுவன காப்புரிமையும் ஒன்றாக இருந்ததையும் கண்டுபிடித்தனர்.

சீனாவில் 2001-ம் ஆண்டு நடைபெற்ற கருத்தரங்கில் அவாகோ நிறுவன தலைவர் ரிச்சர்ட் ரூபி பங்கேற்றார். இந்நிறுவனத்தில்தான் வெய் பாங் பணியாற்றியிருந்தார். அப்போது டியான்ஜின் ஆய்வகத்தையும் அவர் பார்வையிட்டார்.

அப்போதுதான் தங்கள் நிறுவனத் தொழில்நுட்பத்தை வெய் பாங் திருடியிருப்பதை உணர்ந்தார் என்றும் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை வெய் பாங் மற்றும் கல்லூரியின் தலைவர் ஜிங்பிங் மறுத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x