

ரியல் எஸ்டேட் துறையில் செயல்பட்டு வரும் நிறுவனமான டிஎல்எப் மீது ஒழுங்குமுறை ஆணையமான சிசிஐ 630 கோடி ரூபாய் அபராதம் விதித்தது. இதில் 525 கோடி ரூபாயை உச்ச நீதிமன்றத்தில் டிஎல்எப் செலுத்தியது.
மீதமுள்ள தொகை வரும் ஜூலை மாத ஆரம்பத்தில் செலுத்தப்படும் என்று டிஎல்எப் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. குர்காவ்னை சேர்ந்த Belaire உரிமையாளர் சங்கம் டிஎல்எப் மீது புகார் தெரிவித்திருந்தது. இதனை அடுத்து 2011-ம் ஆகஸ்ட் மாதம் சிசிஐ டிஎல்எப் மீது 630 கோடி ரூபாய் அபராதம் விதித்தது.
இதனை அடுத்து கடந்த மே மாதம் உச்சநீதிமன்றத்தில் டிஎல்எப் மேல்முறையீடு செய்தது. ஆனால் அபராத தொகையை இன்னும் மூன்று மாதத்துக்குள் டிஎல்எப் செலுத்த வேண்டும் என்று கடந்த ஆகஸ்ட் மாதம் நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால் கடந்த நவம்பர் 2014-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அபராதம் செலுத்துவதில் சில சலுகைகளை கொடுத்தது.
இந்த நிலையில் இம்மாத ஆரம்பத்தில் போட்டியை ஒழுங்குபடுத்தும் ஆணையமான சிசிஐ புதிதாக வழக்கு ஒன்றை டிஎல்எப் மீது தொடுத்தது. குர்காவ்ன் வீட்டு திட்டத்தில் தனது ஏகபோக நிலையைப் பயன்படுத்தி முறைகேடாக செயல்பட்டது என்று சிசிஐ தெரிவித்தது.
ஆனால் அதே திட்டத்தின் கீழ் ஏற்கெனவே 630 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதால் புதிய அபராதம் ஏதும் சிசிஐ விதிக்கவில்லை.
டிஎல்எப் கடன் ரூ.20,965 கோடி
மார்ச் 31-ம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் நிறுவனத்தின் கடன் 628 கோடி ரூபாயாக அதிகரித்திருக்கிறது. அக்டோபர் காலாண்டில் ரூ.20,336 கோடியாக இருந்த கடன் மார்ச் காலாண்டில் 628 கோடி அதிகரித்து ரூ.20,965 கோடியாக இருக்கிறது.
அதே சமயத்தில் ஒட்டு மொத்த நிதி ஆண்டில் விற்பனை முன்பதிவு 5 சதவீதம் சரிந்திருக்கிறது. விற்பனை வேகம் எடுக்க இன்னும் 12 மாதங்கள் வரை ஆகும் என்று டிஎல்எப் தெரிவித்திருக்கிறது.
தற்போதைய நிலைமையில் நிதி திரட்டுவதற்கு சில பிரைவேட் ஈக்விட்டி நிறுவனங்களுடன் டிஎல்எப் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.