

ஸ்விஸ் வங்கிகளில் கருப்புப் பணம் வைத்திருக்கும் இந்தியர்கள் பட்டியலைத் தர மறுக்கும் ஸ்விட்சர்லாந்து அரசுக்கு மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஸ்விட்சர்லாந்தில் உள்ள ஹெச்எஸ்பிசி-யின் சில வங்கி்க் கிளைகளில் கருப்புப் பணத்தை வைத்துள்ள இந்தியர்களின் பெயர் உள்ளிட்ட விவரத்தைத் தருமாறு இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. வரி ஏய்ப்பு செய்து ஸ்விஸ் வங்கியில் கருப்புப் பணமாக குவிக்கப்பட்டுள்ளதாக இந்தியா உறுதியாக நம்புகிறது. ஆனால் அத்தகைய கணக்கு வைத்துள்ள இந்தியர்களின் பட்டியலை ஸ்விஸ் அரசு தர மறுத்து வருகிறது.
இந்நிலையில் ஸ்விட்சர்லாந்தின் நிதி அமைச்சர் எவலைன் வின்ட்மெருக்கு எழுதிய கடிதத்தில் வரி ஏய்ப்பு தொடர்பான தகவல்களைப் பகிர்ந்து கொள்வது இரு நாடுகளுக்குமே மிகவும் முக்கியமான ஒப்பந்தமாகும். இந்த விஷயத்தில் ஸ்விட்சர்லாந்து அரசு தனக்குள்ள பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். நேரடி வரி தவிர்ப்பு கூட்டமைப்பில் (டிடிஏசி) செய்து கொண்ட ஒப்பந்தத்தை நிறைவேற்ற வேண்டிய கடமையும் பொறுப்பும் ஸ்விஸ் அரசுக்கு உள்ளது என்று அவர் சுட்டிக் காட்டியுள்ளார். ஸ்விட்சர்லாந்து நிதி அமைச்சருக்கு கடந்த நான்கு மாதங்களில் சிதம்பரம் எழுதும் மூன்றாவது கடிதம் இதுவாகும்.
இந்த விஷயத்தை சர்வதேச கவனத்துக்குக் கொண்டு சென்று தகவல் பரிமாற்றத்தில் ஸ்விஸ் அரசின் சட்ட அமலாக்கம் மிகவும் மெத்தனமாக உள்ளதை சுட்டிக் காட்டப் போவதாகத் தெரிவித்தார்.
இந்த விஷயத்தில் இந்தியாவின் கோரிக்கையை ஏற்க முடியாது என்று ஸ்விட்சர்லாந்து அரசு தெரிவித்த விளக்கங்கள், சர்வதேச விதிமுறைகளுடன் ஒப்பிடுகையில் ஏற்க முடியாதது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக கடந்த 7-ம் தேதியிட்ட கடிதத்தை ஸ்விஸ் அரசு அனுப்பியுள்ளது. இந்திய பணக்காரர்கள், அரசியல்வாதிகள் கருப்புப் பணத்தை பதுக்கி வைக்க மிகவும் பாதுகாப்பான நாடாக ஸ்விட்சர்லாந்து இருந்து வருகிறது. வெளிநாடுகளில் சிலவற்றின் தொழிலதிபர்களும், அரசியல்வாதிகளும் ஸ்விட்சர் லாந்தில் பணத்தைப் பதுக்கி வைப்பதும் உண்டு. இதற்கு அந்நாடு கடைப்பிடிக்கும் ரகசிய காப்பு சட்ட முறையாகும்.
ஆனால் சர்வதேச அளவில் அதிக எண்ணிக்கையிலான நாடுகள் அளித்த நிர்பந்தம் காரணமாக வங்கி விதிகளை ஸ்விஸ் அரசு மாற்றியது. அத்துடன் வரி ஏய்ப்பு ஒப்பந்தத்தில் 2011-ல் இந்தியாவுடன் ஸ்விஸ் கையெழுத்திட்டது. ஆனாலும் இந்தியா குறிப்பிட்டு கேட்டுள்ள வங்கி விவரங்களை வெளியிட ஸ்விஸ் அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. ஹெச்எஸ்பிசி வங்கியில் சில இந்தியர்கள் கருப்புப் பணம் வைத்திருப்பதாக பிரான்ஸ் அரசு இந்தியாவுக்குத் தகவல் அளித்தது. இந்தப் பட்டியலில் உள்ளவர்கள் வைத்துள்ள பண விவரத்தை வெளியிடுமாறு இந்தியா விடுத்த கோரிக்கையை ஸ்விஸ் நிராகரித்து வருகிறது.
தகவல்களை அளிப்பதற்கு வழக்கத்துக்கு விரோதமாக பல்வேறு நிபந்தனைகளை ஸ்விஸ் அரசு விதிக்கிறது. இதிலிருந்தே இந்த தகவல்களை அளிக்க அதற்கு விருப்பமில்லை என்பது புலனாகிறது என்று குறிப்பிட்ட சிதம்பரம், இவ்விதம் முக்கியமான தகவல்களை அளிக்க மறுப்பதானது வரி ஏய்ப்பு செய்பவர்களுக்கு ஒத்துழைப்பு அளிப்பது போலாகும் என்பதை ஸ்விஸ் அரசு அதிகாரிகள் உணர வேண்டும் என்றார்.
ஸ்விட்சர்லாந்து அனுப்பியுள்ள கடிதத்தில் இந்திய அரசு கோரும் விவரங்கள் தொலைந்து போன தகவல் பதிவுகளிலிருந்து கேட்கப் பட்டுள்ளது. இந்த விவரங் களை அளிக்க உள்ளூர் சட்டம் அனுமதிக்கவில்லை என்று குறிப் பிட்டுள்ளது. இத்தகைய தகவல் விவரம் குற்ற நடவடிக்கைகளுக்கு பயன்படக்கூடும் என்றும் தெரிவித் துள்ளது.
இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள சிதம்பரம், இந்தியா கோரும் விவரம் அனைத்துமே டிடிஏசி ஒப்பந்த அடிப்படையிலானது அதுவும் இதில் சம்பந்தப்பட்டுள்ள இந்தியா, எத்தகைய குற்ற நடவடிக்கையையும் ஸ்விட்சர் லாந்துக்கு எதிராக மேற்கொண்டது கிடையாது என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆண்டு தொடக்கத்தில் ஸ்விட்சர்லாந்து அரசின் பிரதிநிதிகள் குழு இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டது. இதையடுத்து இந்தியாவின் கோரிக்கையை ஸ்விஸ் ஏற்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்தியாவின் கோரிக்கையை ஸ்விட்சர்லாந்து நிராகரித்து விட்டது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள இந்தியாவுக்கான ஸ்விஸ் தூதர் லினஸ் வான் காஸ்ட்லிமர், இந்தியா கேட்கும் விவரங்கள் தொலைந்து போன தகவல் அடிப்படையிலானது. இத்தகைய விவரங்களை அளிக்கக் கூடாது என்று தேசிய அளவிலான கொள்கை உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளுக்கும் பயன் தரக்கூடிய விஷயங்களில் பேசித் தீர்வு காண எப்போதும் தயாராக இருப்பதாக சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார்.