தரமான தயாரிப்புகளே சந்தையில் நீடித்திருக்கும் - ஹேவல்ஸ் நிறுவனத் தலைவர் அனில் ராய் குப்தா பேட்டி
டெல்லியில் மின்சாதன பொருள் விற்பனை செய்து கொண்டிருந்த கியாமத்ராஜ் குப்தா என்பவருக்கு மின் சாதன பொருள்களைத் தயாரிக்கும் ஆலையை உருவாக்கினால் என்ன என்ற யோசனை உருவானது. ஆனால் 1970-ம் ஆண்டுகளில் லைசென்ஸ் ராஜ் கட்டுப்பாடுகள் அதிகம். தொழில் தொடங்குவது அவ்வளவு எளிதானதல்ல. இத் தகைய சூழலில் அவரைத் தேடி வந்தார் ஹவேலி ராம் காந்தி என்பவர். தனது ஸ்விட்ச்கியர் தயாரிப்பு ஆலையை விற்கப் போவதாகக் கூறினார். புதிதாக தொடங்குவதைக் காட்டிலும் ஏற்கெனவே செயல்பட்டு வரும் ஆலையை வாங்கி நடத்துவது எளிது என்று நினைத்தார். 1971-ல் அவர் வாங்கிய நிறுவனம்தான் ஹேவல்ஸ்.
இன்று இந்தியாவில் மட்டுமின்றி ஐரோப்பிய நாடுகளிலும் கிளைபரப்பி மின் சாதன பொருள்கள் விற்பனையில் கோலோச்சுகிறது. கியாமத்ராஜ் குப்தாவின் மறைவுக்குப் பிறகு நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குர் பொறுப்பேற்றுள்ளார் அனில் ராய் குப்தா.
சமீபத்தில் ராஜஸ்தான் மாநிலம் நீம்ரானாவில் உள்ள ஹேவல்ஸ் ஆலையில் அவரைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. இனி அவருடனான சந்திப்பிலிருந்து…
தந்தைக்குப் பிறகு தலைமைப் பதவிக்கு வந்துள்ள உங்களது எதிர்காலத் திட்டம் என்ன?
இளம் வயதிலேயே தந்தையுடன் பணியாற்றிய அனுபவம் கிடைத்தது.முடிவுகள் எடுப்பதில் அவர் காட்டிய வேகம்தான் எனக்குத் தூண்டுகோலாக இன்றளவும் இருக்கிறது. ஹேவல்ஸ் என்ற பிராண்டை என் தந்தை மிகச் சிறப்பாக வளர்த்தெடுத்துள்ளார். உள்நாட்டில் நிறுவனத்தின் வருமானம் ரூ. 5,500 கோடி. வெளிநாடுகள் மூலமான வருமானம் ரூ. 3,000 கோடி அளவுக்கு உள்ளது. இந்தியாவில் நிறுவனத்தை மேலும் வலுப்படுத்துவதுதான் எனது பிரதான பணி.
2007-ம் ஆண்டு ஜெர்மன் நிறுவனத்திடமிருந்து கையகப்படுத்திய சில்வேனியா பிராண்ட் மூலமான வருமானம் 6 சதவீதமாக உள்ளது. இரண்டு ஆண்டுகளில் இதை 10 சதவீதமாக உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளேன். எல்இடி விற்பனைச் சந்தையில் எங்கள் நிறுவனம் 30 சதவீத சந்தையைப் பிடித்துள்ளது. அதை 90 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்பதே லட்சியம். இப்போது உலக அளவில் பல்ப் உற்பத்தியில் நான்காவது பெரிய நிறுவனமாக ஹேவல்ஸ் திகழ்கிறது.
எந்தெந்த பிரிவுகளில் கவனம் செலுத்துகிறீர்கள்?
எனது அன்றாட பணிகளில் முக்கால்வாசி நேரத்தை விற்பனை மற்றும் சந்தைப்படுத்துவதில்தான் அதிக கவனம் செலுத்துகிறேன். ஹேவல்ஸ் என்ற பிராண்டுதான் நிறுவனத்துக்கு ஆதாரமானது. இதனால்தான் நீம்ரானா ஆலை முழுவதும் நவீனமயமாக்கப்பட்டுள்ளது. தயாரிப்புகளை பிரபலப்படுத்த அனைத்து ஊடகங்களிலும் விளம்பரம் செய்கிறோம். நவீன விளம்பர உத்திகள், மின்னணு வர்த்தக முறைகள் உள்ளிட்டவை மட்டுமின்றி சிறிய நகரங்களைச் சென்றடைவதற்கான பணிகளையும் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம். நாடு முழுவதும் 5,300 டீலர்கள் உள்ளனர். இந்த எண்ணிக்கையை அதிகரிக்கும் திட்டம் உள்ளது.
புதிய பொருள் அறிமுகம் மூலமான வளர்ச்சியும் சாத்தியம் என்பதால் தொடர்ந்து புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்து வருகிறோம். மேலும் தொழில்நுட்ப கூட்டும் எங்களது வளர்ச்சியை நிலை நிறுத்த உதவும் என்பதால் ஜெர்மனியைச் சேர்ந்த கெயர் நிறுவனத்துடனும் கூட்டு வைத்துள்ளோம். இந்தியாவிலேயே கிரீன் சிஎப்எல் பல்புகளைத் தயாரித்த முதலாவது நிறுவனம் என்ற பெருமையும் எங்களுக்கு உண்டு.
நிறுவனங்களைக் கையகப்படுத்தும் உத்தேசம் உள்ளதா?
சீரான வளர்ச்சியில் ஹேவல்ஸ் நம்பிக்கை கொண்டுள்ளது. ஆனால் விரைவான வளர்ச்சிக்கு பிற நிறுவனங்களைக் கையகப்படுத்துவதும் அவசியமாகிறது. நஷ்டத்தில் இயங்கி வரும் நிறுவனங்கள், அவற்றை சீராக்கினால் லாபப் பாதைக்கு கொண்டு வர முடியும் என்ற நிறுவனங்களை வாங்குவதும் எங்களது திட்டத்தில் உள்ளது. ஓராண்டுக்கு முன்பு டவர்ஸ் அண்ட் டிரான்ஸ்பார்மர்ஸ் நிறுவனத்தைக் கையகப்படுத்தினோம். இப்போது இந்நிறுவனம் லாப பாதைக்குத் திரும்பியுள்ளது.
சீன நிறுவனங்களின் வரவால் பல மின் உபகரண தயாரிப்பு ஆலைகள் மூடப்பட்டன. அத்தகைய சவாலை ஹேவல்ஸ் எவ்விதம் எதிர்கொண்டது?
1990- களின் பிற்பாதியில் சீன தயாரிப்புகள் பெரும் சவாலாக இருந்தது உண்மைதான். குறைந்த விலை என்பதுதான் இதற்குக் காரணம். ஆனால் நாளடைவில் அவற்றின் தரம், உழைக்கும் நாள்களின் எண்ணிக்கை ஆகியவற்றால் சீன தயாரிப்புகள் மக்களது நம்பிக்கையை இழந்தன. தரமான தயாரிப்புகளால் ஹேவல்ஸ் இன்றளவும் சந்தையில் தாக்குப்பிடித்து நிற்கிறது.
சீன தயாரிப்புகள் இப்போது போட்டியாக இல்லை, இனி இருக்கவும் வாய்ப்பில்லை. உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்களை உருவாக்கி புதிய தயாரிப்புகளை சந்தையில் தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருவதும் எங்களது வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாகும்.
நீங்கள் தயாரிக்கும் லூமினோ பல்புகளின் ஆயுள்காலம் 25 ஆண்டுகள் அப்படியெனில் ஒரு கட்டத்தில் உங்களது வளர்ச்சி தேக்க நிலையைச் சந்திக்காதா?
இந்தியாவில் எல்இடி பல்புகளுக்கான வளர்ச்சி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. இப்போது இந்தியாவின் எல்இடி சந்தை ரூ. 2,500 கோடியாக உள்ளது இது ஆண்டுக்கு 45 சதவீத அள வுக்கு அடுத்த இரண்டு மூன்று ஆண்டுகளில் வளரும். மேலும் ஹேவல்ஸ் வெறும் பல்புகளை மட்டும் தயாரிக்கவில்லை. கேபிள், ஸ்விட்ச், வீட்டு உபயோக மின் சாதனங்களான ஃபேன் உள்ளிட்டவற்றையும் தயாரிக்கிறோம். விரைவிலேயே கெய்சர், ஏர்-கூலர் தயாரிக்கும் திட்டமும் உள்ளது. அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் நிறுவன வளர்ச்சி என்பது பல்பு விற்பனை தேக்கமடைவதால் நின்றுவிடாது.
உள்நாட்டில் உங்களுடைய போட்டியாளர்கள் யார்?
உள்நாட்டில் பல நிறுவனங்கள் உள்ளன. இருப்பினும் ஹேவல்ஸ் பொருள்களின் தரத்தை மிக உயர்வாகக் கருதுகிறது. சந்தையில் நீண்ட காலம் நிலைத்திருக்க அதுதான் உதவுகிறது. தாங்கள் அளிக்கும் பணத்திற்கு அதிக காலம் உழைக்கும் பொருள்களையே வாடிக்கையாளர்கள் விரும்புவர். தரமான தயாரிப்புகளே சந்தையில் நீடித்திருக்கும். அந்த வகையில் எங்களது தயாரிப்புகள் நீண்ட காலம் சந்தையில் நிலைத்திருக்கும்.
மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி உருவாக்கம் உங்களது வளர்ச்சிக்கு மேலும் வழிவகுக்குமா?
ஸ்மார்ட் சிட்டி உருவாக்கத்தால் வளர்ச்சிக்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. இதற்காக புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். குறிப் பாக வீடுகளின் மின் சாதனங்களை வயர்கள் இன்றி கட்டுப்படுத்தும் நுட்பத்தை உருவாக்கும் பணி நடைபெற்று வருகிறது.
ramesh.m@thehindutamil.co.in
